78. குருகாம் வயிரமாம் - பாடல் 2

காணாதவற்றை காட்டும்
78. குருகாம் வயிரமாம் - பாடல் 2

பாடல்: 2
    வித்தாம் முளையாகும் வேரே தானாம் வேண்டும்
                           உருவமாம் விரும்பி நின்ற
    பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம் பால் நிறமுமாம்
                           பரஞ்சோதி தானாம்
    தொத்தாம் அமரர் கணம் சூழ்ந்து போற்றத்
                          தோன்றாது என் உள்ளத்தினுள்ளே நின்ற
    கத்தாம் அடியேற்கும் காணா காட்டும் கண்ணாம்
                          கருகாவூர் எந்தை தானே

விளக்கம்: 

கத்தாம்=கருத்தாம், கருத்தாம் என்பதன் இடைக்குறை திரிபு. பாங்கன்=தோழன் பத்தாம் அடியார் என்று பத்து குணங்களை உடைய அடியார்கள் குறிப்பிடப்படுகின்றார்கள். அடியார்களின் செய்கை பத்து வகைப் பட்டது என்று அப்பர் பெருமான், (பத்து கொலாம் அடியார் செய்கை தானே) என்று ஒன்று கொலாம் என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலில் குறிப்பிடுகின்றார், சிவபெருமானின் பழ அடியார்கள் பத்து குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று மணிவாசகப் பெருமானும் திருவெம்பாவைப் பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிடுகின்றார். பத்து என்பதை பற்று என்பதன் திரிபாகக் கொண்டு, ஈசனின் மேல் பற்று கொண்ட பழ அடியார் என்று குறிப்பதாகவும் பொருள் கூறுவார்கள்.   

    முத்தன்ன வெண் நகையாய் முன் வந்து எதிர் எழுந்து என் 
    அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
    தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
    பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
    புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால்

                                                                                   பொல்லாதோ 
    எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
    சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
    இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்
 

சிவனடியார்களிடம் இருக்கவேண்டிய அக குணங்கள் பத்தும் புற குணங்கள் பத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை செய்தல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களைக் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் உணவு உட்கொள்ளாது இருத்தல் ஆகியவை. பத்து அக குணங்கள் கீழ்க்கண்டவை ஆகும். சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல் மற்றும் மெய்ம்மறத்தல். 

சிவபிரான், அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும் நிலை, அப்பர் பெருமானால், ஆவடுதுறை பதிகத்தின் (பதிக எண் 6.46) மூன்றாவது பாடலில் கூறப்படுகின்றது,  தொத்து=கூட்டம் தொகுப்பு; வித்திலிருந்து முதலில் முளை தோன்றும்; முளை தோன்றிய பின்னர் அந்தச் செடி நிலைத்து நிற்பதற்கு வேர் தோன்றும். வித்து, முளை, வேர் என்று வளர்ச்சியின் வரிசையில் இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உலகில் உள்ள பொருட்கள் தோன்றுவதற்கு வித்தாக இருக்கும் இறைவன், அந்த வித்து முளையாக மாறி, வித்தின் பயனாக உள்ள தன்மையும், வேராக அந்த முளை நிலைத்து நிற்க உதவும் தன்மையும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானைப் பவளக்
            கொழுந்தினை மாணிக்கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச் சொல்லுவார்
           சொற்பொருளின் தோற்றமாகி
வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை வினைவயத்தின்
           தன் சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே
           அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

இந்த பதிகத்தின் முதல் பாடலில் தனது நாவிலிருந்து வெளிவரும் சொல்லாக இருக்கும் இறைவன் என்று கூறும் அப்பர் பிரான், இந்த இரண்டாவது பாடலில் தனது கருத்தாக இறைவன் மிளிர்கின்றான் என்று கூறுகின்றார். 

பொழிப்புரை:

சிவபெருமான், உலகம் மற்றும் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு விதையாக, முதல் காரணமாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த விதையின் பயனாகிய முளையாகவும், அவ்வாறு வெளியே வந்த முளை நிலத்தில் நிலைத்து நிற்பதற்கு உதவும் வேராகவும் உள்ளான். இவ்வாறு அனைத்துப் பொருட்களும் உயிர்களும் தோன்றுவதற்கும், வளர்வதற்கும் நிலைத்து நிற்பதற்கும் உடனிருந்து உதவும் இறைவன், தான் விரும்பிய உருவத்தை ஏற்க வல்லவன். அவன் மேன்மை வாய்ந்த பத்து புற குணங்களையும் அக குணங்களையும் கொண்ட அடியார்களுக்குத் தோழனாக விளங்குகின்றான். செம்மை நிறம்  கொண்ட அந்த இறைவன் மேனி முழுதும் திருநீறு பூசிய காரணத்தால், பால் போன்று வெண்மை நிறத்துடன் காட்சி அளிக்கின்றான். உலகில் உள்ள விளக்குகள் அனைத்தினும் உயர்ந்த விளக்காக விளங்கும் சோதி அவன். சூழ்ந்து நின்று அவனைப் போற்றும் அமரர்கள் காண்பதற்கு மிகவும் அரியவன்; ஆனால் எனது உள்ளத்தின் உள்ளே இருந்து எனது கருத்தாக மிளிர்கின்றான். அடியேன் இதுவரை அறியாதவற்றை, காணாதவற்றை காட்டும் கண்ணாகவும் இறைவன் சிவபெருமான் செயல்படுகின்றான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com