78. குருகாம் வயிரமாம் - பாடல் 3

காப்பாற்றி வழிகாட்டு
78. குருகாம் வயிரமாம் - பாடல் 3

பாடல் - 3

பூத்தானாம் பூவின் நிறத்தானுமாம் பூக்குளால்
                        வாசமாய் மன்னி நின்ற
கோத் தானாம் கோல்வளையாள் கூறனாகும் கொண்ட
                       சமயத்தார் தேவனாகி
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவானாம் என்
                      நெஞ்சத்தின் உள்ளே நின்று
காத்தானாம் காலன் அடையா வண்ணம் கண்ணாம்
                      கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

தனது சொல்லாகவும், கருத்தாகவும் இருந்து செயல்படும் பெருமான் என்று முந்தைய இரண்டு பாடல்களில் கூறிய அப்பர் பிரான் இங்கே, காலன் தன்னை அடையாத வண்ணம் இறைவன் காக்கின்றான் என்று கூறுகின்றார். பிறப்பெடுத்த எவரும் இறப்பது திண்ணம். அவ்வாறு இருக்கையில் காலன் அடையா வண்ணம் காத்தான் என்று அப்பர் பிரான் ஏன் குறிப்பிடுகின்றார். தன்னை பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து மீட்டதன் மூலம், தனக்கு அடுத்த பிறவி என்ற ஒன்று இல்லாமல் செய்த இறைவன், பிறப்பு இல்லாத காரணத்தால், காலனும் தன்னை அடையாமல் காக்கின்றான் என்று கூறுகின்றார்.  

பொதுவாக இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளாகக் கருதப்படுவன, சைவம் (சிவபிரான்), வைணவம் (திருமால்), காணாபத்தியம் (விநாயகர்), கௌமாரம் (முருகப்பெருமான்), சாத்தேயம் (சக்தி), சௌரம் (சூரியன்) ஆகியவை. இந்த பிரிவுகள் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. சைவ சித்தாந்தத்தில், சமயங்களை நான்கு வகையாகப் பிரித்து ஒவ்வொரு வகையிலும் ஆறு சமயங்களை குறிப்பிடுகின்றனர். கொண்ட சமயத்தார் தேவனாகி என்று கூறப்பட்டுள்ளதால், வேறு வேறு தேவர்களைக் கொண்ட ஆறு சமயங்கள் என்பது புலனாகின்றது. அனைத்து தேவர்களாக இருந்து, அவர்களை இயக்குபவன் சிவபிரான் தான் என்பது திருமுறையில் கூறப்படும் பொதுவான கருத்து என்பதால், இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுவது இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள் எனக் கொள்ளலாம்.     

பொழிப்புரை:
பூவாகவும், பூவின் வண்ணமாகவும், பூவின் உள்ளே உறையும் வாசனையாகவும் இருக்கும் இறைவனே அனைவர்க்கும் தலைவன். அத்தகைய இறைவன், கைகள் நிறையுமாறு வளையல்களை அணிந்த உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளான்: அவரவர்கள் மேற்கொண்டுள்ள ஆறுவகை சமயங்களின் தலைவனும் அவனே. தன்னை வழிபடாதவர்களின் துன்பங்களையும் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் போக்காதவனாக இருக்கும் எனது இறைவன், அடியேனது நெஞ்சத்தினுள்ளே இருந்து, என்னை பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து மீட்டு, காலன் எனை அணுகாத வண்ணம் அருள் புரிந்து என்னைக் காப்பாற்றி வழிகாட்டும் கண்ணாக உள்ளான்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com