78. குருகாம் வயிரமாம் - பாடல் 8

உண்மையையும் பொய்மையையும்
78. குருகாம் வயிரமாம் - பாடல் 8

பாடல்: 8

துடியாம் துடியின் முழக்கம் தானாம்
      சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பானாம்
படி தானாம் பாவம் அறுப்பானாகும் பால்
      நீற்றனாம் பரஞ்சோதி தானாம்
கொடியானாம் கூற்றை உதைத்தானாகும்
      கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
கடியானாம் காட்சிக்கு அரியானாகும்
     கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

குயலர்=தேர்ந்தவர்; கூறாத=உண்மை சொல்லாத; துடியின் முழக்கம் ஒலியாகும். ஒலியிலிருந்து தோன்றியது ஆகாயம். மற்ற நான்கு தன்மாத்திரைகளும், மற்ற நான்கு ஐம்பூதங்களும், ஒலியிலிருந்து தோன்றியவையே. எனவே தான் துடியின் முழக்கம் தோற்றத்தைக் குறிப்பதாக சொல்லப்படுகின்றது.. ஓசையிலிருந்து எழுந்தது சொல். இவ்வாறு ஓசையாகவும் ஒலியாகவும் சிவபெருமான் உள்ள தன்மை ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே என்று தொடங்கும் திருவையாறு பதிகத்தின் மூலம் உணர்த்தப்படுகின்றது. 

ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு
          ஒருவனாய் நின்றாய் நீயே
வாசமலர் எலாம் ஆனாய் நீயே மலையான்
          மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி
         என்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திருவையாறு
         அகலாத செம்பொன் சோதீ

நடராஜப் பெருமானின் நடனத் தோற்றம் எவ்வாறு ஐந்தொழில்களை உணர்த்துகின்றது என்பதை விளக்கும் உண்மை விளக்கம் நூலின் ஒரு பாடலில், அதன் ஆசிரியர் மனவாசகங்கடந்தார், சிவபெருமானின் கையில் துடி என்று அழைக்கப்படும் கருவி தோற்றத்தை உணர்த்துகின்றது என்று கூறுகின்றார். அவரது வலது கை, காக்கும் தன்மையையும், இடது  கையில் உள்ள நெருப்புச் சுடர் அழிக்கும் தொழிலையும், ஊன்றிய திருவடி மறைக்கும் தொழிலையும், தூக்கிய திருவடி அருள் புரிவதையும் குறிப்பதாக இங்கே கூறப்பட்டுள்ளது. திதி=காத்தல், ஸ்திதி என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. அங்கி=அக்னி

    தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமா 
    ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோதம் முத்தி
    நான்ற மலர்ப் பதத்தே நாடு

பொழிப்புரை:

கருகாவூர் எந்தையாகிய சிவபெருமான், உலகத் தோற்றத்திற்கு காரணமான உடுக்கையாகவும், அந்த உடுக்கையிலிருந்து எழும் ஒலியாகவும். அந்த ஒலியிலிருந்து தோன்றும் சொற்களாகவும் உள்ளான். அவன் பேசுபவர்களின் சொற்களில் உள்ள உண்மையையும் பொய்மையையும் சோதித்து அறியும் வல்லமை படைத்தவன்; நல்ல நெறியாக விளங்கும் அவன், நமது பாவங்களைப் போக்குபவனாகவும் திகழ்கின்றான்; பால் போன்று வெண்மை நிறம் கொண்ட நீற்றினை அணிந்த பரஞ்சோதி; கொடிய கூற்றுவனை உதைத்த அவன், உண்மை கூறாமல் வஞ்சகத்தில் தேர்ந்தவர்களாக காணப்படுவோருக்கு மிகவும் அரியவன்; அத்தகைய கொடியோர்களை வெறுக்கும் அவன், அடியார்களுக்கு கண் போன்று வழிகாட்டுபவனாக விளங்குகின்றான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com