79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 3

கன்னிப் பெண்கள்
79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 3

பாடல் 3:

    மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
    பொன்னி நீர் மூழ்கிப் போற்றி அடிதொழ
    மன்னி நான் மறையோடு பல் கீதமும்
    பன்னினார் அவர் பாலைத் துறையரே 

விளக்கம்:

மன்னி=நிலை பெற்ற: மிக்கு=மிகுதியாக: பன்னுதல்=திரும்ப திரும்ப சொல்லுதல்: இந்த பாடலில் வேதங்கள் மற்றும் பல இசைப் பாடல்களை சிவபெருமான் பாடுவதாக அப்பர் பிரான் கூறுகின்றார். திருஞான சம்பந்தர், தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.1.1) சிவபெருமான், வேதங்களையும் பல இசைப் பாடல்களையும் பாடுவதாக குறிப்பிடுகின்றார். இசைப் பாடல்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது என்பதால் தான், நால்வர் பெருமானர்களும் இசையுடன் இணைத்துப் பாடும் வகையில் தேவார, திருவாசகப் பதிகங்களை அருளியுள்ளார்கள். தமிழ் அறிந்த நாம் அனைவரும், இந்த வாய்ப்பினை நழுவ விடாமல் இசைப் பாடல்களைப் பாடி இறைவனை மகிழ்வித்து பலன் அடையவேண்டும்.  

    ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்
          அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
    நாடினாய் இடமா நறும் கொன்றை நயந்தவனே
    பாடினாய் மறையோடு பல் கீதமும் பல்சடைப்
          பனிக்கால் கதிர் வெண் திங்கள்
    சூடினாய் அருளாய் சுருங்க எம தொல் வினையே

பொழிப்புரை:

மின்னல் போன்று நுண்ணிய இடையினை உடைய கன்னிப் பெண்கள் பலரும் ஒன்றாக கூடி, காவிரி நதியில் நீராடிய பின்னர், சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றுகின்றார்கள். அவ்வாறு தொழப்படும் பெருமான், பல யுகங்களைக் கடந்து நிலை பெற்று நிற்கும் வேதங்களையும், பலவகையான இசைப் பாடல்களையும் எப்போதும் பாடியவாறு காணப்படுகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com