79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 5

சொல்லுக்கும் செயலுக்கும்
79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 5

பாடல் 5:

    சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
    பித்தர் நான்மறை வேதியர் பேணிய
    அத்தனே நமை ஆளுடையாய் எனும்
    பத்தர்கட்கு அன்பர் பாலைத் துறையரே
 

விளக்கம்:

தானவர்=அசுரர்: பித்தர்=தங்களது சொல்லுக்கும் செயலுக்கும் தாங்கள் கொண்டுள்ள  வேடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பவர்கள். பத்தர்=சிவனடியார்களுக்கு இருக்க வேண்டிய பத்து அக குணங்களையும் பத்து புற குணங்களையும் உடைய அடியார்கள். சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்.

பொழிப்புரை:

சித்தர்கள், கன்னியர்கள், தேவர்கள், அசுரர்கள், சிவபெருமானையே எப்போதும் நினைவில் நிறுத்தி வாழ்வதால் தங்களது சொல்லும் சொல்லுக்கும் செயலுக்கும் தாங்கள் கொண்டுள்ள வேடத்திற்கு தொடர்பேதும் இல்லாதவராய் செயல்படும் அன்பர்கள், நான்கு மறைகளையும் கற்றுத் தேர்ந்த வேதியர்கள், ஆகியோர் போற்றிப் புகழும் சிவபெருமான், என்னை அடிமையாக ஏற்றவனே என்று பணியும் அடியார்களுக்கு, அன்பராய்த் திகழ்கின்றார். அவர் பாலைத்துறை தலத்தில் உறைகின்றார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com