79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 6

சிவலோகத்தைப் படைத்தவர்
79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 6


பாடல் 6: 

    விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
    மண்ணினார் மறவாது சிவாய என்று
    எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
    பண்ணினார் அவர் பாலைத் துறையரே

விளக்கம்:

தன்னை வந்தடையும் அடியார்கள் தங்குவதற்காக, திருத்தமாக சிவலோகத்தைப் படைத்தவர் சிவபெருமான் என்று பதினோராம் திருமுறையின் பொன் வண்ணத்து அந்தாதியின் பதினோராவது பாடலில் சேரமான் பெருமாள் நாயனார் கூறுகின்றார். 

    நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம் மலர
    அஞ்சொல் கரதலம் கூம்ப அட்டாங்கம் அடி பணிந்து
    தம் சொல் மலரால் அணிய வல்லார்கட்குத் தாழ்சடையான்
    வஞ்சம் கடிந்து திருத்தி வைத்தான் பெரு வானகமே

சிவபிரானின் திருநாமமாகிய பஞ்சாக்கர மந்திரத்தை மகிழ்ந்து போற்ற வல்லவர்கள், உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பந்த பாசங்களைத் தவிர்த்து, இறையுணர்வில் திளைப்பார்கள் என்று சம்பந்தர் நமச்சிவாயப் பதிகத்தின் (3.49.) கடைப் பாடலில் கூறுவதை நாம் இங்கே காணலாம். இந்த பாடலில் சிவபெருமானை நந்தி என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நந்துதல் என்றால் குறைத்தல், முற்றிலும் அழித்தல் என்று பொருள். பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்துள்ள வினைத் தொகைகளை அழிக்க வல்லவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதால் நந்தி என்று அவனை குறிப்பிட்டு, நாம் நமது வினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனை வணங்க வேண்டும் என்பதை சம்பந்தர் இங்கே நமக்கு உணர்த்துகின்றார். 

    நந்தி நாமம் நமச்சிவாய என்று
    சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
    சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
    பந்த பாசம் அறுக்க வல்லார்களே 

திருமூலரும் தனது திருமந்திரப் பாடல்களில் அநேக இடங்களில் நந்தி என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். ந என்ற எழுத்துடன் தொடங்கும் மந்திரம் தான் நந்தி தன் நாமம் என்று திருமூலர் கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் உணரலாம். அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டு தான் ஓம் என்று சொல்லப்படும் பிரணவ மந்திரம். ஓம் என்ற சொல்லுடன் பெருமானின் நாமத்தைச் சொல்ல அதுவே மந்திரமாக மாறும் என்பதை உணர்த்தும் பாடல். சிவபெருமான் தான் ஐம்பத்தொன்று எழுத்தாக உள்ளார் என்று திருமூலர் கூறுகின்றார். திருமூலர் காலத்தில் தமிழ் மொழியில் ஐம்பத்தொன்று எழுத்துகள் இருந்து, வழக்கலிருந்து பல எழுத்தகள் ஒழிந்தனவா என்று தெரியவில்லை. ஆனால் வடமொழியில் இப்போதும் ஐம்பது எழுத்துகள் உள்ளன, இவற்றுடன் ஓம் எனப்படும் பிரணவ எழுத்தினைச் சேர்த்தால் ஐம்பத்தொன்று வருகின்றது. இவற்றைத் தான் திருமூலர் இந்த பாடலில் குறிக்கின்றார் போலும்.
   
    அகார முதலாக ஐம்பத்தொன்றாகி
    உகார முதலாக ஓங்கி உதித்து
    மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி
    நகார முதலாகும் நந்தி தன் நாமமே

நமச்சிவாய மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துகளும் ஐந்து ஓரெழுத்துச் சொற்களாக ஐந்து பொருட்களை உணர்த்துகின்றன என்று சுந்தரர் திருவாரூர் பதிகத்தின் (7.83) முதல் பாடலில் கூறுகின்றார். அஞ்சு பதம் என்று பஞ்சாக்கர மந்திரத்தை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் திருநாமத்தை, சொல்ல வேண்டிய முறையில் சொல்லி, அவனது திருநாமத்தை சிந்தையினில் இருத்தி, திருவாரூர் சென்று அவனை வணங்குவது எந்நாளோ என்று தனது ஏக்கத்தை, திருவாரூர் பெருமானைப் பிரிந்து பல நாட்கள் இருந்ததை சுந்தரர் வெளிப்படுத்தும் பாடல்.  

    அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி 
    முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் 
    சிந்தை பராமரியாத் தென் திருவாரூர் புக்கு
    எந்தை பிரானாரை என்று கொல் எய்துவதே

நமச்சிவாய மந்திரத்தை தூல பஞ்சாக்கரம் என்று கூறுவார்கள். ந என்ற எழுத்து திரோதான மலத்தையும், ம என்ற எழுத்து ஆணவம் முதலான மலத்தையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், சி என்ற எழுத்து சிவத்தையும் வ என்ற எழுத்து சிவனின் அருளாகிய சக்தியையும் குறிக்கும். உயிர்க்கு தனியாக எந்த குணமும் இல்லாததால், உயிர் சார்ந்ததன் வண்ணமாகத் திகழும். ய என்ற எழுத்தால் குறிக்கப்படும் உயிர், ஒரு பக்கத்தில் மலங்களாலும் மறு பக்கத்தில் சிவத்தாலும் சூழப்பட்டுள்ளது. சிவத்தைச் சென்று அடைய வேண்டும் என்று உயிர் விரும்பினாலும், அவ்வாறு நிகழாதவாறு மலங்கள் உயிரைத் தடுக்கின்றன. பிறப்பு மற்றும் இறப்பினை விளைவிக்கக் கூடிய பாசம் ஒரு புறம் இழுக்க, முக்தி அளிக்கக்கூடிய சிவத்தைச் சார வேண்டும் என்று உயிர் விரும்ப, உயிருக்கும் பாசங்களுக்கும் இடையே ஒரு போராட்டம் நடைபெறுகின்றது. பாசத்தை வெல்லவேண்டும் என்று விரும்பும் உயிர்கள் ஐந்தெழுத்தை ஓதி, இறைவனின் துணையுடன் பாசத்தை வெல்லலாம். இதனை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (5.59.1) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதும் உயிர்களின் மனதில் சிவனும் அவனது அருட்சக்தியும் உறைந்திருப்பார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

    ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும்
    ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்கு
    பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
    மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே

நமச்சிவாய மந்திரத்தின் சிறப்பு கருதி, நமச்சிவாயப் பதிகங்கள் அருளிய மூவரும், பல பாடல்களில் நமச்சிவாய மந்திரத்தை குறிப்பிட்டு அதனால் ஏற்படும் பலன்களை எடுத்து உரைக்கின்றார்கள். அத்தகைய பதிகங்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய மந்திரத்தைச் சொல்பவர்கள் வீடுபேறு அடையலாம் என்று அப்பர் பிரான் கூறும் பாடலை (6.93.10) நாம் இங்கே காணலாம். இந்த பிறவியில் நமக்கு ஏற்பட்டுள்ள எந்த உறவும், நமக்கு இதற்கு முந்தைய பிறவிகளில் இருந்ததில்லை, வரப்போகும் பிறவிகளிலும் இருக்கப் போவதில்லை. எனவே உங்களது உறவுகளின் மீது நீங்கள் வைத்துள்ள பாசங்களிலிருந்து விடுபடுங்கள் என்று அப்பர் பெருமான் உணர்த்தும் பாடல் இது. தனியாக உலகிற்கு வந்த நாம், தனியாக செல்லப் போகின்றோம் என்று சொல்லி, உறவினர் எவரும் நிலையல்ல என்பதையும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

தந்தையார் தாயார் உடன் பிறந்தார்
        தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம் தாம் ஆரே
வந்தவாறு எங்ஙனே போமாறேதோ
       மாயமாம் இதற்கு ஏதும் மகிழவேண்டா
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்
       திகழ்மதியும் வாளரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய
      என்று எழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாமே

     
நமச்சிவாய என்ற மந்திரத்தால் குறிப்பிடப்படும் இறைவனைத் தவிர நமக்கு புகலிடம் வேறு ஒன்றும் இல்லை என்று மணிவாசகர் உணர்த்தும் பாடல், திருச்சதகம் பதிகத்தில் இடம் பெற்றுள்ளது.

போற்றி ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
போற்றி ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிதொன்றில்லை
போற்றி ஓம் நமச்சிவாய புறம் எனைப் போக்கல்
                                                                                                    கண்டாய்
போற்றி ஓம் நமச்சிவாய சயசய போற்றி போற்றி  

தூல பஞ்சாக்கர மந்திரத்தை வாய் விட்டு சொல்லலாம். சிவாயநம எனப்படும் பஞ்சாக்கர மந்திரம் சூக்கும பஞ்சாக்கரம் என்று சொல்லப்படுகின்றது. நிட்டையில் இருப்போர் தியானிப்பது போன்று மனதினில் நிலைநிறுத்தி உச்சரிக்க வேண்டிய மந்திரம். சிவாயநம என்ற மந்திரத்தை குறிப்பிடும் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். நல்லம் தலத்தின் மீது அருளிய பாடலில், தம்மால் இயன்ற அளவு சிவாயநம என்று கூறினால், வினைப் பகைகளையும், பூதங்களாக நம்மை ஆட்டுவிக்கும் பொறிகளிலிருந்தும் விடுதலை  பெறலாம் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் (5.43.6) கூறுகின்றார். நம்மை வென்று, உலகப் பொருட்களின் மாயையில் நம்மை ஆழ்த்தி, மறுபடியும் மறுபடியும் பிறப்பிறப்புச் சுழற்சியில் ஆழ்த்துவதே வினைகளின் நோக்கம் என்பதால், வெல்ல வந்த வினைப்பகை என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

    அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும்
    வல்லவாறு சிவாயநம என்று 
    நல்லம் மேவிய நாதன் அடி தொழ
    வெல்ல வந்த வினைப்பகை வீடுமே

சிவாயநம என்று கூறினால் நமது உள்ளத்தில் வெள்ளம் போன்று பெருகி வரும் ஒளி உண்டாகும் என்றும் இந்த மந்திரத்தை உச்சரிக்காதவர் மறுபடியும் மறுபடியும் பிறவிக் கடலில் சுழன்று தவிப்பார்கள் என்றும் திருமூலர் கூறும் பாடல் இது. நீர் சுழலும் போது துள்ளும் நீர், மறுபடியும் அந்த நீர்ச் சுழலில் விழுவதைப் போன்று, சிவாயநம என்ற மந்திரத்தை உச்சரிக்காதவர்கள், தாங்கள் இறந்தபின்னரும் மறுபடியும் பிறவிச் சுழலில் விழுவார்கள் என்று நமக்கு விளக்கும் பாடல்.

    தெள்ளமுது ஊற சிவாயநம என்று
    உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
    வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர்
    துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே

சிவாயநம என்ற மந்திரத்தில் மலங்களைக் குறிக்கும் கடைசி இரண்டு எழுத்துக்கள் நீங்கிய நிலையில் இருக்கும் மீதி மூன்று எழுத்துக்களே சிவாய என்பதாகும். எனவே இந்த எழுத்துக்களை பாசம் நீங்கிய முக்தி பஞ்சாக்கரம் என்றும், கூறுவர். முக்தி பஞ்சாக்கர நாமத்தை சொல்பவர்க்கு முக்தி அளிப்பவர் சிவபிரான் என்பதால், அப்பர் பிரான் மேலே கூறிய பாடலில் எழில் வானகம் பண்ணினார் என்று சிவலோகம் ஏற்படுத்தி உள்ள நிலையை குறிக்கின்றார். இந்த மந்திரத்தை ஓதினால், அருவினைகள் தீர்க்கப்படும் என்று திருமூலர் குறிக்கின்றார். வினைகள் தானே பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து நாம் விடுபடாமல் இருப்பதற்கு காரணம். அந்த வினைகள் தீர்க்கப்பட்டால், முக்தி பெறுவது எளிதல்லவா.

அருள் தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை
திரிமலம் நீங்க சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழும் தாமே 

சிவாய எனப்படும் இந்த மந்திரத்தை, அதி சூக்கும பஞ்சாக்கரம் என்றும் காரண பஞ்சாக்கரம் என்றும் கூறுவார்கள். நட்போடு சிவபெருமானை அணுகி சிவாய என்று சொன்னால், இன்பமயமாக இருக்கும் சிவபெருமான் நமக்கும் இன்பம் அளிப்பான் என்று சம்பந்தர் இந்த பாடலில் (2.46.10) கூறுகின்றார். இந்த பாடல், புத்தர் மற்றும் சமணர்களை குறிக்கும் பதிகத்தின் பத்தாவது பாடல். சிவபெருமானின் நாமத்தை உச்சரித்தாலும், பகையுணர்ச்சியுடன் சமணர்கள்/புத்தர்கள் கூறுவதிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, நட்புணர்வோடு அன்புடன் சிவபிரானின் நாமத்தைக் கூறவேண்டும் என்று சம்பந்தர் இங்கே சொல்கின்றார்.

    துன்பாய மாசார் துவராய போர்வையார்
    புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை
                                                             நண்ணுமின்கள்
    நண்பால் சிவாய எனா நாலூர் மயானத்தே
    இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே

நம்மைப் பற்றியுள்ள வலிமை வாய்ந்த வினைகளைத் தீர்ப்பது சிவாய எனப்படும் மந்திரம் என்று திருமூலர் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஆயம்=கூட்டம். பிராமி, வைஷ்ணவி, காளி முதலாகிய பல விதமான சக்தியின் அம்சங்கள் இணைந்த கூட்டம், ஆயம் என்ற தொடரால் உணர்த்தப்பட்டு, சிவபிரான் அருள் வடிவாகிய சக்தியை குறிக்கின்றது. வினைகளுக்கு ஏற்ப உயிரினை உடலுடன் பொருத்தச் செய்வதால், சிவபெருமானை உயிரை ஈன்றவர் என்று குறிப்பிடுகின்றார். 

    அருள் தரு ஆயமும் அத்தனும் தம்மில்
    ஒருவனை ஈன்றவர் உள்ளுறு மாயை
    திரிமல நீங்கிச் சிவாய என்று ஓதும்
    அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத்தாமே  

பொதுவாக ஐந்தெழுத்து என்று குறிப்பிடப்படுவதும் இந்த மந்திரங்கள் தாம். எத்தனை  பிறவிகள் எடுத்தாலும் இறைவனுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பு மாறுவதில்லை. தொடர்ச்சியாக, அவன் இறைவன், நாம் அவனுக்கு அடியான் என்று உள்ள நிலையினை மறவாமல், தினமும் காலையிலும் மாலையிலும் அஞ்செழுத்து ஓதி வழிபட்டால், நாம் இறைவன் மீது வைத்துள்ள அன்பு அதிகமாகும் என்று கூறும் அப்பர் பிரானின் பாடல் (4.70.5) நனிப்பள்ளி பதிகத்தில் உள்ள பாடலாகும்.

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை
                                                                      மறந்திராதே
அஞ்செழுத்து ஓதி நாளும் அரனடிக்கு அன்பதாகும்
வஞ்சனைப் பால் சோறாக்கி வழக்கிலா
                                                                     அமணர் தந்த
நஞ்சு அமுது ஆக்குவித்தான் நனிப்பள்ளி அடிகளாரே

கருவூர்த் தேவர், அன்போடு அஞ்செழுத்து ஓதினால் இறைவன் நமக்கு அளிக்கும் பல பேறுகளை குறிப்பிட்டு, அவரினும் அற்புதத் தெய்வம் வேறு எவரும் இல்லை என்று சொல்லும் பாடல், ஒன்பதாம் திருமுறையில் உள்ள கங்கை கொண்ட சோளேச்சரத்து பதிகத்தின் மூன்றாவது பாடல். மலைகள் போன்ற பொற்குவியல்கள், மாளிகைகள், பலவிதமான செல்வங்கள், அழகிய இளம் மகளிருடன் இணையும் வாய்ப்பு, கற்பகச் சோலை என்று நாம் பெறவிருக்கும் பேறுகளை அடுக்குகின்றார். 

அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே
       அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும்
       தொண்டருக்கு எண்திசைக் கனகம் 
பற்பதக் குவியும் பைம்பொன் மாளிகையும்
        பவளவாய் அவர் பணைமுலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை
        கொண்ட சோளேச்சரத்தானே

பொழிப்புரை:

தேவர்கள் சிவபெருமானை பணிந்து வழிபடுவதைக் காணும் நிலவுலகத்தில் உள்ள மனிதர்கள் வியப்படைகின்றார்கள். அவர்கள், மறவாமல் சிவாய என்ற நாமத்தை தியானிக்க, அந்த அடியார்கள் தங்குவதற்கு அழகிய வானகத்தை படைத்து அருள்பவர், பாலைத்துறையில் உறையும் சிவபெருமான் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com