75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 5

செவியுற்ற கருவில்
75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 5

பாடல் 5:

கரு உற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கருப்புவியில்
தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனைத் திகைப்பு
                                                                                                              ஒழிவி
உருவில் திகழும் உமையாள் கணவா விடில் கெடுவேன்
திருவில் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

விளக்கம்:

தெரு=வெளி உலகம். தான் தனது தாயின் கருவில் இருந்தபோது சிவபிரானை நினைத்து வழிபட்டதாக அப்பர் பிரான் இங்கே கூறுவது நமக்கு பாகவதத்தில் குறிப்பிடப்படும் பிரகலாதனின் சரித்திரத்தை நினைவூட்டும். நாரத முனிவர் தனது அன்னைக்குச் சொல்லிய நாராயண மந்திரத்தை செவியுற்ற கருவில் இருந்த குழந்தை பின்னாளில் திருமாலின் சிறந்த அடியாராகத் திகழ்ந்தது போல் அப்பர் பிரானும் சிவபிரானின் சிறந்த அடியாராகத் திகழ்ந்தார். கருவில் இருந்து வெளியே வந்த பின்னர் உலகியல் பொருட்களின் மயக்கத்தில் ஆழ்ந்து நிலையற்ற உலகப் பொருட்களை (சமண சமயம் உட்பட) பற்றிக் கொண்டதாக ஒப்புக்கொண்டு வருத்தப்படும் அப்பர் பிரான், தனது திகைப்பினை, மயக்கத்தை ஒழிக்க வல்லவர் சிவபிரான் ஒருவரே என்று தெளிந்த சிந்தனையுடன் இருப்பதை நாம் இங்கே காணலாம்.

தான் தனது தாயின் கருவில் இருந்தபோது இறைவனின் நினைவுடன் இருந்ததற்கு, இறைவன் தன்னை அப்போது ஆண்டுகொண்டது தான் காரணம் என்று அப்பர் பிரான் இன்னம்பர் திருத்தாண்டகத்தில் கூறுகின்றார் (ஆறாம் திருமுறை பதிக எண் 89 பாடல் 9). செரு=போர். அட்டுதல்=அழித்தல்.

கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு
          கழல் போது தந்தளித்த கள்வர் போலும்
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும்
          தேவர்க்கும் தேவராம் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
           மலரடிகள் நாடி வணங்கலுற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும்
          இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே   

பொழிப்புரை:

செல்வம் கொழிக்கும் சத்திமுற்றத்து தலத்தில் உறையும் சிவக்கொழுந்தே, அழகின் உருவாக விளங்கும் உமையம்மையின் கணவரே, தாயின் கருவில் இருந்த காலத்து, உலகப் பொருட்களுடன் தொடர்பு ஏதும் இல்லாததால் உனது நினைவுடன் இருந்த நான், இந்த உலகில் பிறந்தவுடன், உலகப் பொருட்களில் மயங்கி திகைத்து நிற்கின்றேன். உலகப் பற்றில் சிக்குண்டு நான் கெட்டுவிடாமல் நீ எனது திகைப்பினை நீக்கி சிந்தையை தெளிவிக்கவேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com