75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 7

நாத்திகக் கொள்கைகளை
75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 7

பாடல் 7

விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால்
சுட்டாய் என் பாசத் தொடர்பு அறுத்து ஆண்டு கொள் தும்பி
                                                                                                           பம்பும்
மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும்
சிட்டா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே  
 

விளக்கம்:

சிட்டன்=சிறந்தவன்; ச்ரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். மட்டார்=தேன் பொருந்திய; விட்டார்=சிவநெறியை கைவிட்டவர்கள்.

விஷ்ணு புராணத்தில் கூறப்படும் தகவல்களின் படி, சிவபிரானை வழிபட்டு வந்த திரிபுரத்து அரக்கர்களின் மனத்தினை, பேதலிக்கச் செய்தவர் திருமால். திருமால் நாரதருடன் ஒரு அந்தணனாக அங்கே சென்று அவர்களுக்கு நாத்திகக் கொள்கைகளை போதிக்கவே மனம் மாறிய அரக்கர்கள் தாங்கள் அந்நாள் வரை செய்து வந்த சிவவழிப்பாட்டினை நிறுத்தியதும் அல்லாமல், சிவபிரானை நிந்தனை செய்யவும் தொடங்கினார்கள். இதனால் கோபம் கொண்ட சிவபிரான் திரிபுரத்து அரக்கர்களுடன் போர் செய்ய முடிவு செய்தார். இந்த தகவல், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்திலும் (5.10.4)  கொடுக்கப்பட்டுள்ளது.

கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்கவாரும்
                                                                       கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெள்ளநீர் சடையானும் நின்னுடை வேறு அலாமை
                                                                       விளங்க நின்றதும்
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே
 

இதே செய்தி அப்பர் பிரான் அருளிய நீலக்குடி பதிகத்திலும் (5.72.5) கூறப்பட்டுள்ளது. எனவே திரிபுரத்து அரக்கர்களை, சிவநெறியை கைவிட்டவர் என்றும் சிவபிரானை எண்ணாதவர் என்று பல இடங்களிலும் திருமுறைப் பதிகங்களில் குறிப்பிடுகின்றன. 

    நேச நீலக்குடி அரனே எனா
    நீசராய் நெடுமால் செய்த மாயத்தால்
    ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய்
    நாசமானார் திரிபுர நாதரே

வெங்கணை=சுடுகின்ற அம்பு. சுடுகின்ற அம்பு என்று சொல்லப்படுவதன் காரணம், அக்னி தேவன் அம்பின் கூரிய முனையாக பங்கேற்க, திருமால் அம்பின் தண்டாகவும் வாயுத்தேவன் அம்பின் இறகாகவும் பங்கேற்றனர். இந்த செய்தி பல தேவாரப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது. அத்தகைய பாடல்களில் ஒன்றாகிய ஞானசம்பந்தப் பெருமானின் பாடல் (முதல் திருமுறை, பதிக எண் 11 பாடல் 6)  இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர்
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப
வல்வாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்
வில்லால் எய்தான் இடம் வீழிம்மிழலையே

எல்லாம் ஒரு தேராய் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாம் என்ற சொல், சிவபிரான் திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற சமயத்தில் அவருக்கு உதவியாக வந்த தேவர்களையும் மற்றவர்களையும் குறிக்கின்றது. நான்கு வேதங்கள் தேரினை இழுக்கும் குதிரைகளாகவும், பிரமன் தேர்ப்பாகனாகவும், சூரிய சந்திரர்கள் தேரின் சக்கரங்களாகவும், பூமி தேர்த்தட்டாகவும், ஆகாயம் தேரின் மேற்பகுதியாகவும், இருந்த செய்தி இங்கே உணர்த்தப்பட்டுள்ளது. உமையம்மை இந்த தலத்தில் சிவபிரானை வழிபட்ட வரலாறு இங்கே கூறப்படுகின்றது. 

பொழிப்புரை:

தேன் நிறைந்து இருப்பதால் வண்டுகள் மொய்ப்பதும், நறுமணம் உடையதுமாகிய மலர்களைத் தனது கூந்தலில் அணிந்துள்ள உமையம்மை செய்த வழிபாட்டால் மகிழ்ந்து இருப்பவரும், அனைவரிலும் சிறந்தவராகியவரும், சத்திமுற்றம் எனும் தலத்தில் வசிப்பவரும் ஆகிய சிவக்கொழுந்தே, சிவநெறியை கைவிட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று நகரங்களையும் சுடுகின்ற அம்பினால் ஒரு நொடியில் சுட்டெரித்தவரே, நீ எனது பாசத் தொடர்புகளை அறுத்து ஆட்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com