75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 8

பொறுத்து அருளவேண்டும்
75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 8

பாடல் 8

இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை
                                                                                                    இரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன் தன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய் 
திகழ்ந்த திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

விளக்கம்:

இகழ்ந்தவன்=தக்கன். பொறை இரத்தல்=பிழை பொறுக்குமாறு வேண்டுதல். முந்தைய பாடலில் சிவபிரானை மறந்தவர்களின் நிலையினை விளக்கிய அப்பர் பிரானுக்கு, சிவபிரானை இகழ்ந்த தக்கன் நினைவுக்கு வந்தான் போலும். சிவபிரானை இகழ்ந்து, அவரைத் தவிர்த்து மற்றைய தேவர்களை அழைத்துத் தவறாக யாகம் புரிந்தமையால் தக்கனது யாகம் அழிக்கப்பட்டது. யாகத்தில் பங்கெடுத்துக் கொண்ட பல தேவர்கள் தண்டனை பெற்றாலும் அவர்கள் மன்னிக்கப்பட்டு உயிருடன் இருந்தார்கள். தலை வெட்டப்பட்ட தக்கனும், ஆட்டுத் தலை பொருத்தப்பட்ட பின்னர் தனது தவற்றினை உணர்ந்து சிவபிரானை வேண்டினான். மற்றைய தேவர்கள் எல்லாம் தண்டனை பெற்றபோது, திருமாலும் நான்முகனும் இறைவனிடம் எங்களது குற்றத்தைப் பொறுத்து அருளவேண்டும் என்று இறைவனிடம் வேண்டியதால், அவர்கள் தப்பினார்கள் என்று அப்பர் பெருமான் தனது தசபுராணத் திருப்பதிகத்தில் (4.14.7) கூறுகின்றார். க்ஷமி என்ற வடமொழிச் சொல் கமி என்று மாற்றப்பட்டுள்ளது. க்ஷமி=மன்னிக்க வேண்டுதல்.
 
உயர்தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி தன்னில்
          அவி உண்ண வந்த இமையோர்
பயமுறும் எச்சன் அங்கி மதியோனும் உற்ற
         படி கண்டு நின்று பயமாய்
அயனொடு மாலும் எங்கள் அறியாமை
         ஆதி கமி என்று இறைஞ்சி அகலச் 
சயமுறு தன்மை கண்ட தழல்வண்ணன் எந்தை
         கழல் கண்டுகொள்கை கடனே

பெண்ணாகடத்தில், சிவபெருமான் அனுப்பிய பூதகணம் அப்பர் பிரானின் உடலில் இடபக் குறியினையும், மூவிலை சூலக்குறியினையும் இட்டு அப்பர் பிரானின் உடல் புனிதமானது என்று அனைவருக்கும் உணர்த்தினாலும், சிவபிரானின் திருவடி தீண்டப் பெற்றாலன்றி, தனது உடலின் குறைபாடு நீங்காது என்று அப்பர் பிரான் நினைத்தார் போலும். அதனால் தான், எனது உடல் குறைபாடுகள் நீங்க அருள் செய்வாய், என்று இந்தப் பதிகத்திலும் வேண்டுகின்றார்.

பொழிப்புரை:

சிறப்புடன் திகழும் சத்திமுற்றத்து தலத்தில் உறையும் சிவக்கொழுந்தே, உன்னை அந்நாளில் இகழ்ந்து, உன்னை அலட்சியம் செய்து வேள்வி செய்ய முற்பட்ட தக்கனது வேள்வி நிறைவேறாமல் அழித்த பின்னர், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்கள் செய்த தவற்றினை (சிவபிரானை ஒதுக்கிச் செய்யப்படும் வேள்வியில் பங்கேற்றமை) மன்னித்து வெற்றி கொண்டவனே, உன்னைப் புகழ்ந்து பாடும் அடியேனுடைய குறைபாடுகள் நீங்க அருள் புரிவாயாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com