76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 3

எருக்கு மலர்கள்
76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 3

பாடல்   3

தோடேறு மலர்க் கொன்றை சடை மேல் வைத்தார்
         துன்னெருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படு திரைகள் எறிய வைத்தார்
         பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதல் மேல் நாட்டம் வைத்தார்
        சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடி என் தலை மேல் வைத்தார்
        நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:

தோடு ஏறு=இதழ்கள் நிறைந்த; துன்னெருக்கு=நெருக்கமாக கட்டப்பட்ட எருக்கம்பூ  வடம்= மாலை; துவலை=நீர்த்துளிகள்; பாடு=பெருமை; திரைகள் எறிதல்=மிகுந்த ஒலியுடன் அலைகள் புரள வீசுதல்; சேடு=ஒளி; நாட்டம்=கண்; நாடு=நாட்டில் உள்ள அனைவரும்; 

பொழிப்புரை:

நல்லூரில் உள்ள எம்பெருமான், தனது சடையில் இதழ்கள் நிறைந்த கொன்றை மலரினை வைத்துள்ளார்; நெருக்கமாக கட்டப்பட்ட எருக்கு மலர்கள் கொண்ட மாலையினை அணிந்துள்ளார்; நீர்த் திவலைகள் சிந்துமாறும் பெருத்த ஒலிகள் எழுமாறும் அலைகள் புரண்டு கொண்டிருக்கும் பெருமை வாய்ந்த கங்கை நதியினை சடையில் வைத்துள்ளார்; பனித் துளிகள் படர்ந்துள்ள ஊமத்தை மலரினைச் சூடியுள்ளார்; அழகு மிகுந்த தனது நெற்றியில் மூன்றாவது கண்ணினை வைத்துள்ளார்; மேரு மலையை வில்லாக வளைத்து தனது கையில் கொண்டுள்ளார்; மலையான் பெற்ற மகளைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார். நாட்டில் உள்ள அனைவரும் போற்றும் தனது திருவடியினை எனது தலை மீது வைத்த நல்லூர்ப் பெருமானார் மிகவும் நல்லவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com