76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 5

அஞ்சி நடுங்கி
76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 5

பாடல்  5

விண்ணிரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்
        வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார்
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார்
        கடிக் கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார்
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார்
       திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி 
நண்ணரிய திருவடி என் தலை மேல் வைத்தார்
       நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:

விண்=ஆகாயம், இங்கே ஆகாயத்தில் உள்ள தேவர்களைக் குறிக்கின்றது. இரிதல்=பயந்து  ஓடுதல்; கமலமலர்=தாமரை மலர். இதயத்தை தாமரை மலருக்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. எனவே இங்கே அடியார்களின் இதயத் தாமரை குறிக்கப்படுகின்றது. கடி=மணம், இங்கே பக்திமணம் திண்ணெரி=வலிமையான நெருப்பு நண்ணுதல்=எட்டுதல், கிட்டே நெருங்குதல்; நண்ணரிய=நெருங்க முடியாத, எட்ட முடியாத. மிசை=(மிகை என்ற சொல்லின் திரிபு) மேல்

மூன்று பறக்கும் கோட்டைகளைக் கொண்டு திரிபுரத்து அரக்கர்கள் உலாவிய போது, தேவர்கள் அஞ்சி நடுங்கி, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிய நிலை இங்கே குறிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் உள்ளவர்களை வருத்தியும், தேவர்கள் பயம் எய்தவும் கொடிய போர் நிகழ்த்திய திருபுரத்து அரக்கர்களின் தன்மை கீழ்க்கண்ட ஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் கொடுக்கப்பட்டுள்ளது (முதல் திருமுறை பதிக எண்: 129 பாடல் எண் 4); பரிசு=தன்மை; வார்=மார்புக் கச்சு; இசை=பொருந்திய சூளிகை=உச்சி; கார் இசையும் =மேகங்கள் உலாவும்; விசும்பு இயங்கும் கணம்=வானில் உலவும் கணங்கள் இங்கே கந்தருவர்கள். கழுமலம் என்பது சீர்காழித் தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. இந்த பாடலின் கடை இரண்டு அடிகள் சீர்காழி தலத்தில் இருந்த மங்கையர்களின் இசை ஞானம் கூறப்பட்டுள்ளது.  தங்களது மென்மையான மார்பினில் கச்சை அணிந்த மகளிர், மாளிகையின் உச்சியில் நின்று தங்களது குழந்தைகளை தாலாட்டுப் பாட்டு பாடி பாராட்ட, அந்த பாடல்களை மேகங்கள் உலவும் வானவெளியில் திரியும் கந்தர்வர்கள் கேட்டு மகிழ்ந்தனர் என்று அவர்களின் இசைத் திறமை வெளிப்படுத்தப் படுகின்றது.

பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும்
                                      பரிசு வெம்மைப்
போரிசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை
                                     வளைத்தோன் பொருந்தும் கோயில்
வாரிசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை
                                     மேல் மகப் பாராட்ட
காரிசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு
                                     எய்தும் கழுமலமே

    
பொழிப்புரை:

நல்லூரில் உறையும் எம்பெருமான், விண்ணோர்கள் பயந்து ஓடுவதற்கு காரணமாக இருந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தவர்; தன்னைத் தொழும் அடியார்களின் வினைகளை நீக்கி, அவர்களுக்கு பற்றற்ற நிலையை ஏற்படுத்தி, அவர்கள் துறவு நிலை மேற்கொள்ளுமாறு செய்பவர்; தனது நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனை எரித்து பொடியாக்கியவர்; பக்திமணம் கமழும் அடியார்களின் உள்ளத்தையும் கயிலை மலையையும் தனது இருப்பிடமாக வைத்தவர்; நெருப்பினையும், குளிர்ந்த நீரினையும் தன்னுடலில் வைத்திருப்பவர்; பல திசைகளில் உள்ள தேவர்கள் தொழுதும் வாழ்த்தியும் காண முடியாத, அணுக முடியாத திருவடியை எனது தலையின் மீது வைத்த நல்லூர் பெருமானார் மிகவும் நல்லவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com