76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 10

சடையில் பாம்பையும்
76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 10

பாடல்  10
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்கப்
          பனிக் கொன்றை சடை வைத்தார் பணிசெய் வானோர்
ஆம் பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
        அடு சுடலைப் பொடி வைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினை நோய் தீர வைத்தார் உமையை
       ஒரு பால் வைத்தார் உகந்து வானோர் 
தாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார்
       நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:
உரிஞ்சி=உராய்ந்து கொண்டு; பாம்பு சந்திரனின் மீது உராய்ந்து கொண்டு இருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். பாம்பும் சந்திரனும் இயல்பிலே ஒன்றுகொன்று மாறுபட்ட குணங்களைக் கொண்டுள்ளவை. மேலும் பாம்புக்கும் சந்திரனுக்கும் இடையே பகையும் உண்டு. சந்திரன் வெண்ணிறம் கொண்டது; பாம்போ கருநிறம் உடையது. அனைவரும் காண வானில் உலா வருவது சந்திரன்; பாம்போ பிறர் தன்னைக் காணா வண்ணம் புற்றில் மறைந்து வாழ்வது; குளிர்ச்சி தருவதால் சந்திரனின் கதிர்களை அமுத கிரணங்கள் என்று கூறுவார்கள்; பாம்போ வெப்பம் மிகுந்த நஞ்சினைத் தருவது. தன்னுடைய தோற்றத்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பது சந்திரன்; தன்னைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, காண்போரை நடுங்கச் செய்வது பாம்பு; ஒளி மயமானது சந்திரன்; இராகு கேது எனப்படும் இரண்டு கோள்களும், சாயா கிரகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அதாவது நிழல் உருவங்கள் என்று கூறுவார்கள்; இவ்வாறு பல வகையிலும் மாறுபட்டு, தங்களுக்குள் பகையும் கொண்டுள்ள இருவரையும் பகை தீர்த்து இருக்கச் செய்வது வல்லமை படைத்த ஒருவரால் தான் முடியும். அத்தகைய வல்லமை கொண்டவர் சிவபிரான் என்று பாம்பும் மதியும் அருகில் இருக்கும் நிலை குறிப்பிடப்பட்டு நமக்கு உணர்த்தப் படுகின்றது. பரிசு=தன்மை

பாம்புக்கும் சந்திரனுக்கும் உள்ள பகையினைத் தீர்த்து இருவரையும் தனது சடையில் வைத்த திறம் பல தேவாரப் பாடல்களில் போற்றப்படுகின்றது. எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி என்று தொடங்கும் அதிகை வீரட்டானத்துத் திருத்தாண்டகத்தின் நான்காவது பாடலில் மேற்கண்ட நிலை குறிக்கப்பட்டுள்ளது. அகலம்=மார்பு. கூம்புதல்=மனம் ஒடுங்கி இருத்தல். இந்த பாடலில் நீரும் பகையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வெம்மையான நஞ்சினைக் உடைய பாம்பினுக்கு குளிர்ந்த நீர் அதன் தன்மையால் பகையாக உள்ளது. சடையில் உள்ள சந்திரனை, சடையில் அடைபட்டு இருக்கும் கங்கை தனது அலைகளால் மோதுவதால் சந்திரனுக்கு கங்கை பகையாக உள்ளது. ஆனால் இன்று வரை மூன்றும் ஒரே இடத்தில் இருப்பது, பகை தீர்த்து ஆளும் இறைவனின் வல்லமையால் தான்.  
    சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி 
    கூம்பித் தொழுவார்கள் தம் குற்றேவலைக் குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி
    பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன் வைத்த பண்பா போற்றி
    ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய்         போற்றி    
திருஞான சம்பந்தர் சீர்காழியின் மீது அருளிய பதிகம் ஒன்றின் முதல் பாடலில் சடையில் பாம்பையும் சந்திரனையும் உடன் வைத்த திறம் என்னே என்று வியப்பு அடைகின்றார். நெல் வயல்களும் புன்னை மரங்களும் கொண்ட தலம் சீர்காழி என்று இங்கே கூறப்படுகின்றது. நெல்வயல்கள் மருத நிலத்திற்கு உரியவை; புன்னை மரங்கள் நெய்தல் நிலத்திற்கு உரியவை. இவ்வாறு இருவேறுபட்ட தன்மைகள் கொண்ட நிலங்கள் ஒரு சேர அமைந்திருக்கும் சீர்காழியைக் காணும் சம்பந்தப் பெருமானுக்கு, இருவேறுபட்ட இயல்புகள் கொண்ட சந்திரனையும், பாம்பினையும் ஒருங்கே வைத்துள்ள பெருமானின் திறம் நினைவுக்கு வருகின்றது. அயலே=அருகே; கிழி=துணி; புன்னைப் பூக்கள் மண் தரையில் விழுந்து கிடப்பது வெள்ளைத் துணியில் பவளம் சிந்தி இருக்கும் தோற்றத்தை ஒத்தது என்று சம்பந்தர் கூறுகின்றார்..
    செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
    புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்த்
    துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர்
    பின்னு செஞ்சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே

ஓம்பரிய வல்வினை=நீக்குதற்கு அரிய வலிமை கொண்ட வினை. பழைய வினைகளின் ஒரு பிரிவைத் தான் நாம் இந்தப் பிறவியில் அனுபவிக்கின்றோம். வினைகளின் தன்மைக்கு ஏற்றவாறு இன்பமும் துன்பமும் ஏற்படுகின்றன. இதனை மறந்த நாம் இன்பம் நுகர்க்கும்போது, தமது திறமையும் சாதுர்யமும் தான் இன்பத்திற்கு காரணம் என்று நினைத்துக் கொண்டு மமதையில் மிதந்து பல தவறுகளைச் செய்து வினையை பெருக்கிக் கொள்கின்றோம். அதே போல் துன்பத்திற்கும் காரணம் நமது பழைய வினைகள் என்பதையும் மறந்து, நமக்கு துன்பம் ஏற்பட கருவிகளாக இருக்கும் மற்றவர்கள் மீது கோபமும் வெறுப்பும் கொண்டு மேலும் பல தவறுகளைச் செய்து வினைகளை பெருக்கிக் கொள்கின்றோம். இவ்வாறு பழைய வினைகளை அனுபவிக்கும் நாம், மேலும் புதிய வினைகளைச் சேர்த்துக் கொண்டு, மறுபடியும் மறுபடியும் இவ்வாறு சேரும் வினைகளைக் கழிப்பதற்காக பிறவி எடுக்க நேரிடுகின்றது. எனவே தான் நீக்குதற்கு அறிய வல்வினை என்று இங்கே கூறப்பட்டுள்ளது.     
         
பொழிப்புரை:
பாம்பு சந்திரனுடன், தங்களுக்குள் உள்ளே பகையை மறந்து, உராய்ந்த நிலையில் உள்ள சடையில் அலை வீசும் கங்கையையும், பனி படர்ந்த கொன்றை மலர்களையும் சிவபிரான் வைத்துள்ளார்; அவர் தனக்குப் பணி செய்யும் வானவர்களுக்கு, அவர்கள் செய்யும் பணியின் தன்மைக்கு ஏற்றவாறு அருள்கள் செய்கின்றார்; சுடலைப் பொடி பூசியிருந்தாலும் அழகாக காணப்படுகின்றார்; உண்மையான மெய்ப்பொருள் சிவபிரான் தான் என்பதை உணர்ந்து, நான் என்ற எண்ணம் நீங்கி வினைகளை எதிர்கொள்ளும் அடியார்களுக்கு, கொடிய வினைகள் தீரும் வழியை வைத்துள்ளார்; உமை அம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்; வானுலகில் உள்ளவர்களும் நிலவுலகில் உள்ளவர்களும் விரும்பித் தொழுகின்ற திருவடியினை எனது தலை மேல் வைத்த நல்லூர்ப் பிரான் மிகவும் நல்லவர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com