76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 11

தொழும் அடியார்களை

பாடல்  11

குலம் கிளரும் வருதிரைகள் ஏழும் வைத்தார்
         குருமணி சேர் மலை வைத்தார் மலையைக் கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ
        ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார்
        புகழ் வைத்தார் புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார்
       நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:

குலம்=கூட்டங்கள்; கிளரும்=பொங்கி எழுகின்ற; குருமணி=சிறந்த மணிகள்; உலம்=திரண்ட கல்; 

பொழிப்புரை:

கூட்டம் கூட்டமாக, பொங்கி எழுந்து வரும் அலைகளைக் கொண்ட ஏழு கடலைகளை இந்த உலகினில் வைத்தவர் சிவபெருமான்; அவர் சிறந்த மணிகளை உயர்ந்த மலைகளில் வைத்துள்ளார்; அவர், மிகவும் பெரிய கல் போன்ற கயிலாய மலையினை, தனது கைகளால் பேர்த்து எடுக்கத் துணிந்த இராவணனின் தோள்களும் தலைகளும் வருந்துமாறு, தனது கால் விரல் ஒன்றினை ஊன்றியவர்; வருந்திய அரக்கன் இறைவா, காப்பாற்று என்று புலம்பியபோது அவனுக்கு இரங்கி, ஊன்றிய கால் விரலினை எடுத்து அருள் புரிந்தவர்; மேலும் அவன் பாடிய சாம கானத்திற்கு மகிழ்ந்து போர் வாள் கொடுத்து அவனுக்கு புகழ் ஏற்படும்படி செய்தவர்; தனது புகழினை விரும்பித் தொழும் அடியார்களை ஆட்கொள்ளும் சிவபெருமான், நலன்கள் விளைவிக்கும் திருவடியினை எனது தலையின் மீது வைத்தார்; அவர் மிகவும் நல்லவர்.  

முடிவுரை:

சிவபிரான் தனக்கு அருள் புரிந்த திறத்தை நினைந்து மனமகிழ்ந்த அப்பர் பிரான் இந்தப் பதிகம் பாடி முடித்து மறுபடியும் இறைவனை பணிந்து எழுந்தார். அப்போது அவரது மனநிலை, எடுக்க எடுக்கக் குறையாத செல்வம் பெற்று வந்த வறியவனின் மனம் போல் மகிழ்ந்து இருந்தது என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். இந்த பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று
புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள்
நினைந்துருகி விழுந்து எழுந்து நிறைந்தும் மலர்ந்து ஒழியாத
தனம் பெரிதும் பெற்று வந்த வறியவன் போல் மனம் தழைந்தார் 

பின்னர் தான் பாடிய பல பதிகங்களில், சிவபிரான் தனது தலை மீது தனது திருப்பாதத்தை வைத்த கருணைச் செயலை, மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார். மேலும் திருவடியின் சிறப்பினை பல பாடல்களிலும் பாடுகின்றார். மன்னும் மலைமகள் வருடின என்று தொடங்கும் பதிகத்தை (பதிக எண்: 4.100) சிவபிரானின் திருவடிகளின் பெருமையை சொல்லும் பதிகம் என்றே கூறலாம். காளியை நடனத்தில் வென்ற பாதங்கள் என்றும், மார்க்கண்டேயர்க்காக கூற்றுவனை உதைத்த பாதம் என்றும், மறைகள் தேடியும் காணாத பாதம் என்றும், உமை அம்மையால் மலர்கள் சூட்டப்படும் பாதம் என்றும், பேய்க் கணங்களோடு கூடி நின்று ஆடும் பாதம் என்றும், ஊழிக் காலத்தையும் கடந்து நிற்கும் பாதம் என்றும், பல ஊர்கள் சென்று பலி தேர்ந்து அலைந்த பாதம் என்றும், திருமால் பன்றி உருவம் கொண்டு மண்ணைக் குடைந்து தேடிய போதும் காணாத பாதம் என்றும், சீற்றத்துடன் வந்த முயலகனை அடக்கி நடம் ஆடிய பாதம் என்றும், இராவணின் பத்து தலைகளையும் நெருக்கின பாதம் என்றும், இருக்கு முதலிய மாமறைகளும் விண்ணவர்களும் புகழ்ந்து ஏத்திய பாதம் என்றும் இந்த பதிகத்தில் இறைவனின் திருவடிச் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இந்த பதிகத்தின் எல்லா பாடல்களும் இன்னம்பரான் தன் இணை அடியே என்று முடிகின்றன.

சிவபிரானின் திருவடியின் வீரச் செயல்களைப் புகழும் இந்த பதிகத்தின் முதல் பாடல் நமக்கு ஒரு அரியதொரு காட்சியை கொடுக்கின்றது. பூமகளும் புவிமகளும் திருமாலின் பாதங்களை வருடுவதை சிற்பமாகவும் ஓவியமாகவும் பல இடங்களில் காண்கின்றோம். மேலும் பல பாசுரங்களும், வேறு பல அருளாளர்களின் பாடல்களும் இந்த காட்சியை விவரிக்கின்றன. ஆனால் இது போன்ற சேவையை பார்வதி தேவி இறைவனுக்கு அளித்தது பற்றிய குறிப்புகள் அதிகமாக எங்கும் காணப்படுவதில்லை. இத்தகைய அறிய காட்சி அப்பர் பிரானின் மனக்கண்ணால் காணப்பட்டு நமக்கு விருந்தாக, மேற்கண்ட பதிகத்தின் முதல் பாடலாக அமைந்துள்ளது. சிவபிரானின் திருவடிகளின் பெருமையை அவரது அருகில் இருந்த உமையம்மை தானே மற்ற எல்லோரையும் விட மிகவும் அதிகமாக உணர்ந்தவள். அதனால் தான் அவள் செய்த சேவையை குறிப்பிட்டு இந்த பதிகத்தை மிகவும் பொருத்தமாக அப்பர் பிரான் ஆரம்பிக்கின்றார். தாமரை மலர் போன்ற மென்மையான சிவபிரானின் பாத கமலங்கள் உமையம்மையால் வருடப் பெற்றன என்றும், அந்த திருப்பாதங்கள் மறைகள் சொல்லும் பொருளினை பற்றிக் கொள்வதற்கு பற்றுக்கோடாக விளங்குகின்றன என்றும் கூறும் அப்பர் பிரான், இந்த சேவடிகள் தொண்டர்களுக்கு வீடுபேறு அளித்து அவர்களின் இடரைக் களையும் தன்மை படைத்தது என்று இங்கே கூறுகின்றார். அமுதம் என்றால் வீடுபேறு என்று பொருள்.

மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள்
சொன்ன துறை தொறும் தூப்பொருள் ஆயின தூக் கமலத்து
அன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுது அரும்பி
இன்னல் களைவன இன்னம்பரான் தன் இணை அடியே  
       

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய மற்றொரு திருத்தாண்டகப் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் தான் கருவில் இருந்த போதே தன்னை ஆண்டு கொண்ட சிவபிரான், தனது மலரடிகளைத் தனக்கு தந்ததாகவும் இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கூடிப் பிரியாத மைந்தர் போலும் என்று, உயிர்கள் மெய்யுணர்வினை அறிந்த பின்னர் தன்னோடு  கூடும் உயிர்களை என்றும் பிரியாதவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும் சிவபிரானின் திருவடிகளை நாடி வணங்கிய பின்னர், அவர்களுக்கு ஒப்பற்ற தலைவராய் விளங்கினார் என்றும் இங்கே கூறப்படுகின்றது.
    
கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது
         தந்தளித்த கள்வர் போலும்
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும்
       தேவராம் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
      மலரடிகள் நாடி வணங்கலுற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும்
     இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே

சாதரணமாக பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களை பாடி அருளும் அப்பர் பெருமான், திருவையாறு தலத்தின் மீது அருளிய, சிந்திப்பரியன என்று தொடங்கும் பதிகத்தில் இருபது பாடல்களை பாடியுள்ளார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் ஐயாறன் அடித்தலமே என்று முடிகின்றன. இறைவனின் திருவடிபெருமையை கூறுவதற்கு பத்து பாடல்கள் போதாது என்று நினைத்தார் போலும். மலைமகள் சிவபெருமானின் பாதத்தை வருடும் காட்சியை கற்பனை செய்து பார்க்கும் அப்பர் பிரான், உமையம்மையின் கைகள் சிவபிரானின் பாதத்தில் பதிந்து இருக்கும் காட்சி காந்தள் மலர் தாமரை மலரை அழகு செய்வது போல் அமைந்துள்ளது என்று கூறுகின்றார். (காந்தள் மலர் நீல நிறம் கொண்டது). உமையம்மை வருடுவதால், சிவபிரானின் பாதங்கள் மேலும் சிவந்தன என்று மாற்பேறு பதிகத்தின் பாடல் ஒன்றில் கூறும் அப்பர் பிரான் நமக்கு ஈசனின் பாதங்கள் மென்மையானவை என்பதை உணர்த்துகின்றார்.

சுணங்கு முகத்துத் துணை முலைப் பாவை சுரும்போடு
                                                                                           வண்டு
அணங்கும் குழலி அணியார் வளைக்கரம் கூப்பி நின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள்
                                                                                         ஒண்போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே  

இறைவனின் திருவடி தன்மேல் படவேண்டும் என்பதில் மிகுந்த ஆசை கொண்டவராக சுந்தரர் திகழ்வதை நாம் அவரது தம்மானை அறியாத சாதியார் உளரே என்று தொடங்கும் பதிகத்தின் (எண்: 7.38)  முதல் பாடலில் நாம் காணலாம். முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான், அதிகை நகர் சித்தவட மடத்தில் படுத்திருந்த சுந்தரர் மீது தனது கால்கள் படுமாறு படுத்துக்கொண்டார். மிகுந்த அசதியுடன் தூங்கும் முதியவரின் கால் அவரை அறியாமல் தனது உடலின் மீது பட்டிருக்கலாம் என்று நினைத்து சுந்தரர் இடம் மாறி படுத்தபோதும், முதியவரின் கால் அவர் மீது பட்டது.  என்னை பலமுறையும் மிதித்த நீ யார் என்று சுந்தரர் கேட்டபோது, என்னை நீ அறியாயோ என்று கூறி முதியவர் மறைந்துவிடவே ஈசன் தான் முதியவராக வந்தவர் என்பதை சுந்தரர் உணர்ந்தார். தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் இறைவனது திருவடிகள் தன் மீது பட வேண்டும் என்ற ஆசையால் வாழும் தான், தனது தலைவனாகிய ஈசன் வந்தபோது அறியாமல் இருந்து விட்டேனே என்று வருந்தி பாடும் பாடும் பதிகம் இது.

தம்மானை அறியாத சாதியார் உளரே சடைமேல்
       கொள் பிறையானை விடை மேல் கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரி காட்டில் ஆடல் உடையானை
      விடையானைக் கறை கொண்ட கண்டத்து
அம்மான் தன் அடிக்கொண்டு என் முடி மேல் வைத்திடும்
      என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை
     இறை போதும் இகழ்வன் போலியானே
  

ஆதி சங்கரரும் தான் சிவபெருமானின் திருப்பாதங்களை காணமுடியாமல் உள்ள நிலைக்கு மிகவும் வருந்துவதை அவரது சிவானந்த லஹரி பாடல் ஒன்றில் நாம் உணரலாம். அவ்வாறு இறைவனின் பாதங்களை காண முடியாமைக்கு, அவர் சொல்லும் காரணம் சுவையானது. இந்த பாடலின் பொருள் இங்கே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. சிவபெருமானே, நான் செய்த புண்ய பலம் மற்றும் உமது கருணை காரணமாக தாங்கள் மனமிரங்கி உங்களது திருவுருவக் காட்சியை அளித்தாலும், மாசற்ற உங்களது திருவடியைக் காண முடியாதபடி, காலில் விழுந்து வணங்கப் போட்டியிடும் தேவர் கூட்டம் தங்களது மணிமகுட வரிசைகள் உமது திருவடிகளை மறைத்து விடுகின்றன.
 
    பலாத் வா புண்யானாம் மயி கருணயா வா த்வயி விபோ
        பிரசன்னேபி ஸ்வாமின் பவதமல பாதாப்ஜ யுகலம்
    கதம் பச்யேயம் மாம் ச்தகயதி நாம சம்ப்ரமஜுஷாம்
        நிலிம்பானாம் ச்ரேணிர் நிஜகனக மாணிக்ய மகுடை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com