77. அட்டுமின் இல்பலி - பாடல் 3

இல்லம் புகுந்தார்
77. அட்டுமின் இல்பலி - பாடல் 3

பாடல் 3:

    படவேர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர்
    இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து
    நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர் கொலோ
    வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே

விளக்கம்:

வாயு பகவானால் கொண்டு வரப்பட்ட கயிலை மலையின் இரு பகுதிகளில் ஒன்று இந்த தலத்திலும் மற்றொரு பகுதி அருகில் உள்ள ஆவூர் பசுபதீச்சரம் தலத்தில் வைக்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதனால் கயிலை மலைக்கு இணையாக இந்த தலம் கருதப் படுகின்றது. சிவபிரான் மீது தீராத காதல் கொண்ட அப்பர் நாயகி, சிவபிரான் தனது இல்லம் வந்ததாக கற்பனை செய்துகொண்டு, அவரின் வருகையை பெருமிதத்துடன் மற்ற பெண்மணிகளுக்கும் அறிவிக்கும் பாடல். 

பட+ஏர்=படவேர்; ஏர்=அழகு; நடவார்=நடவாமல் இருக்கின்றார், நீங்காமல் இருக்கும் நிலை.

பொழிப்புரை:

படம் எடுக்கின்ற பாம்பின் தோற்றத்தை ஒத்த அழகிய மார்பகங்களையும் நல்ல குணங்களையும் உடைய பெண்களே, பகல் நேரத்தில், பெண்களிடம் பிச்சை கொள்வார் போல், ஒருவர் எங்கள் இல்லம் புகுந்தார்; புகுந்த அவருக்கு பிச்சை இட்ட பின்னரும் அவர் வீட்டினை விட்டு நீங்காதவராக இங்கேயே நிற்கின்றார்; அவர் யாரென்று நீங்கள் கேட்பீராகில், அவர் தான், வடக்கே கயிலை மலையையும் தெற்கே நல்லூரையும் இடமாக கொண்டு உறைபவரும், தொடர்ந்து நடனம் பயின்று ஆடும் சிவபிரான் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com