77. அட்டுமின் இல்பலி - பாடல் 7

கோவணத்தை பாதுகாத்து
77. அட்டுமின் இல்பலி - பாடல் 7

பாடல் 7:

நாள் கொண்ட தாமரைப் பூத்தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே
கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லிக் கிறிபடத்
                                                                                                 தான்
வாட்கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கோர்
                                                                                                 வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இவ்வகலிடமே

விளக்கம்:

கா=காப்பாற்று: கிறிபட=பல விதமாக வன்மொழிகள் பேசி; அகலிடம்=அகன்ற உலகம், உலகத்தில் உள்ள மக்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்

இந்த பாடலில் அமர்நீதி நாயனார் வரலாற்றில் நடந்த நிகழ்ச்சி சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி பெரிய புராணத்தில் மிகவும் விரிவாக கூறப்படுகின்றது. பழையாறை நகரில் வாழ்ந்து வந்த வணிகர் அமர்நீதியார். அவர் பொன், முத்து, பட்டாடைகள் முதலிய பல விலையுயர்ந்த பொருட்களை வாணிபம் செய்து வந்தார்; சிவபெருமானின் அடியார்களுக்கு அமுது அளித்து, அவர்களுக்கு உயர்ந்த கோவண ஆடைகளை அளித்து வந்தார். ஒரு நாள் அமர்நீதியாரின் திருமடத்திற்கு, ஒரு பிரம்மச்சாரி வேடத்தில் வந்த சிவபெருமான், தனது கையில் இருந்த ஒரு கோவணத்தைக் கொடுத்து அதனைப் பாதுகாத்துத் தான் குளித்து வந்தவுடன் கொடுக்குமாறு, அமர்நீதியாரிடம் கூறினார். அமர்நீதியார் அந்த கோவணத்தை பாதுகாப்பாக வைத்திருந்த போதும் சிவபெருமானின் திருவிளையாட்டால், அமர்நீதியார் பாதுகாப்பாக வைத்திருந்த கோவணம் காணாமல் போகவே, அமர்நீதியார் தவித்தார். தொலைந்து போன கோவணத்திற்கு பதில் வேறு கோவணம் கொடுப்பதாக அமர்நீதியார் சொன்னபோது, தன்னிடமிருந்த மற்றொரு கோவணத்திற்கு ஈடாக, அமர்நீதியார் கொடுக்கும் கோவணம் இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். தான் வைத்திருந்த கோவணத்தை தராசின் ஒரு தட்டில் பிரம்மச்சாரியாக வந்த சிவபிரான் வைக்க, அதற்கு ஈடாக தன்னிடம் இருந்த பல கோவணங்களை அமர் நீதியார் வைத்தார்; தராசுத் தட்டுகள் நேர்படாமல் இருக்கவே தன்னிடம் இருந்த பல விலை உயர்ந்த பொருட்களையும் அமர்நீதியார் வைக்கத் தொடங்கினார். தன்னிடம் இருந்த அனைத்துப் பொருட்களையும் வைத்த பின்னரும் ஒற்றைக் கோவணம் தாங்கிய தட்டு தாழ்ந்தே இருந்தது. இறுதியில் அமர்நீதியார், தானும், தனது மனைவியும், தனது மகனும் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்தபோது தட்டுகள் இரண்டும் சமமாக மாறின. பாதுகாப்பாக வைப்பதற்கு கொடுத்த கோவணத்தைத் தொலைத்த குற்றத்திற்காக, தன்னையும் தனது குடும்பத்தாரையும், அடியாருக்குத் அடிமையாக இருப்பதற்கு உடன்பட்டத் தொண்டரின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டிய பின்னர், பிரம்மச்சாரியும் மறைந்தார், அவர் தராசுத் தட்டில் வைத்த கோவணமும் மறைந்தது. தேவர்கள் பூமாரி பொழிய, சிவபிரான் அமர்நீதியாருக்கு காட்சி கொடுத்து அருளினார். வணிகனான அமர்நீதியாரை, அவரது குடும்பத்தாரோடும் சிவபெருமான் ஆட்கொண்ட நிகழ்ச்சியை உலகத்தவர் அனைவரும் அறிவார்கள் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பழையாறையும் நல்லூரும் அருகருகே உள்ள தலங்கள்.        

பொழிப்புரை:

தினமும் காலையில் மலர்கின்ற தாமரைப் பூக்களை உடைய குளங்கள் நிறைந்த நல்லூரில், கீளோடு கூடிய கோவணத்தை பாதுகாத்து பின்னர் எனக்கு அளிப்பாய் என்று வணிகர் அமர்நீதியாரிடம் கூறி, பின்னர் அந்த கோவணம் காணமல் போன பின்பு வன்மையான பல சொற்களைப் பேசி, தொலைந்து போன கோவணத்திற்கு ஈடாக அமர்நீதியார் தானும், தனது மனைவியும், தனது குழந்தையுமாக, தராசுத் தட்டில் ஏறி நிற்குமாறு செய்து, பின்னர் அவர்களை சிவபெருமான் ஆட்கொண்ட நிகழ்ச்சியினை உலகம் இன்றும் போற்றிப் புகழ்ந்து பேசுகின்றது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com