77. அட்டுமின் இல்பலி - பாடல் 8

பெண்களின் தன்மை.
77. அட்டுமின் இல்பலி - பாடல் 8

பாடல் 8:

அறை மல்கு பைங்கழல் ஆர்ப்ப நின்றான் அணியார் சடை மேல்
நறை மல்கு கொன்றை அம் தாருடையான் நல்லூர் அகத்தே
பறை மல்கு பாடலன் ஆடலனாகிப் பரிசு அழித்தான்
பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே

விளக்கம்:

அறை=ஓசை; மல்கு=மிக்க; பைங்கழல்=புதியதாகத் தோற்றம் அளிக்கும், புது மெருகு குலையாத; நறை=தேன்; நறை மல்கு கொன்றை=தேன் சிந்தும் கொன்றை மலர்கள்; தார்=மாலை: பறை=தோலால் செய்யப்பட்ட இசைக்கருவி; பரிசு=தன்மை

அடக்கமாக இருந்து ஆண்களை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பது பெண்களின் தன்மை. இந்த அடக்க குணத்தைத் தான் கைவிட்டு, தலைவன் பால் காதல் வயப்பட்டதை இங்கே தனது பரிசு அழிக்கப்பட்டதாக அப்பர் நாயகி கூறுகின்றாள். தான் தனது நிலையிலிருந்து மாறியதற்கும் தலைவனே காரணம் என்று பழிப்பதும் உண்டு. இவ்வாறு, தனது பரிசினை அழித்து தனது வளையலையும் கவர்ந்தார் சிவபெருமான் என்று கூறும் நயமான பாடல் திருவெண்காட்டுப் பதிகத்தில் (பாடல் எண்: 6.35.4) காணப்படுகின்றது. போகம் என்பது சிவபோகத்தை குறிக்கின்றது. பாகு=பாகம்; இங்கே இடும் பிச்சையின் ஒரு பாகம். இந்த பாடலில் அப்பர்நாயகி, பிச்சையிடச் சென்ற தன்னை உற்று நோக்கிய சிவபெருமான், தனது பரிசினை அழித்ததாக கூறுகின்றாள்.
  
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐவாய் அரவு
               அசைத்து அங்கு ஆனேறு ஏறிப்
போகம் பல உடைத்தாய்ப் பூதம் சூழப் புலித்
              தோலுடையாப் புகுந்து நின்றார்
பாகு இடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
              பரிசு அழித்து என் வளை கவர்ந்தார்பா வியேனை    
மேகமுகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு
             மேவிய விகிர்தனாரே 

 
பொழிப்புரை:

ஓசை மிக உடையதும், என்றும் புதியது போல் தோற்றமளிக்கும் கழல்கள் ஆரவாரித்து ஒலிக்க நடனம் ஆடுபவனும், அழகான சடை மேல், தேன் சிந்தும் கொன்றை மலர்களாலான மாலையை அணிந்தவனும் ஆகிய சிவபிரான்,, பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்து, அழகாக பின்னப்பட்ட தனது சடை தாழுமாறு நடனம் ஆடுகின்றான். இத்தகைய சிறப்புகள் கொண்ட சிவபிரான், நல்லூர் தலத்தில், பறை எனப்படும் வாத்தியத்திற்கு ஏற்ப பாடியும், அந்த பாடலுக்கு ஏற்ப அழகாக ஆடியும் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, எனது அடக்க குணம் கொண்ட தன்மையை அழித்து விட்டான்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com