77. அட்டுமின் இல்பலி - பாடல் 9

பேய்க் கூட்டங்களை
77. அட்டுமின் இல்பலி - பாடல் 9

பாடல் 9:
மன்னிய மாமறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி எங்கும்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடித் தொழுது நல்லூர்க்
கன்னியர் தாமும் கனவிடை உன்னிய காதலரை
அன்னியர் அற்றவர் அங்கணனே அருள் நல்கென்பரே

விளக்கம்:

மன்னிய=நிலைத்த: அங்கணன்=அழகிய கண்களை உடையவர்; சிவபெருமானை அன்னியர் அற்றவர் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அனைத்து உயிர்களிலும் கலந்து இருக்கும் சிவபெருமானுக்கு அன்னியர் எவரும் இல்லை; அனைவரும் அவருக்கு வேண்டியவரே:   

இந்த பாடலில் அப்பர் நாயகி நல்லூரில் உள்ள கன்னியர்கள் அனைவரும் சிவபிரானைத் தங்கள் காதலராகக் கருதுவதாகவும் அனைவரும் சிவபிரானை கனவில் கண்டதாகவும் கூறுகின்றாள். சீர்காழியில் இருந்த மகளிர்கள் சிவபெருமானைத் தங்களது காதலனாக கருதினார்கள் என்ற கருத்து சீர்காழி தலத்தில் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் ஒன்றிலும் சொல்லப் படுகின்றது. சிவபிரான் பால் காதல் வயப்பட்ட பெண்மணியின் தாயார், என்ன சிறப்பினைக் கண்டு தனது பெண் சிவபிரான் பேரில் காதல் கொண்டுள்ளாள் என்று வியக்கின்றாள். பேய்க் கூட்டங்களை உறவாகவும், உண்ணும் பாத்திரம் கபாலமாகவும், உறையும் இடம் சுடுகாடாகவும் கொண்டுள்ள சிவபிரான் தனது உடலில் ஒரு பெண்ணையும் வைத்திருக்கின்றான். இவ்வாறு இருக்கையில், மேலே கூறியவற்றுள் எதனைக் கண்டு எனது மகள் அன்பு கொண்டாள் என்று கூறும் பாடல் இங்கே (5.45.8) கொடுக்கப்பட்டுள்ளது. ஈமம்=சுடுகாடு:
 
    உறவு பேய்க்கணம் உண்பது வெண்தலை
    உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்கொடி
    துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை 
    இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பாவதே

தனது அன்னையின் கேள்விக்கு பதில் கூறுவதாக, இதே பதிகத்தின் அடுத்த பாடல் அமைந்துள்ளது. அந்த பாடலில், சீர்காழி தலத்தில் உள்ள பலர் சிவபிரான் பேரில் அன்பு கொண்டு அவர் பின்னே செல்ல, அவர்களைப் பின்தொடர்ந்த தானும் அவரது அழகில் ஈடுபட்டு சிவபிரானை காதலித்ததாக மகள், தனது அன்னையின் கேள்விக்கு விடை கூறுகின்றாள். மாகம்=மேகம் மாக யானை=மேகம் போன்று கறுத்த யானை; மருப்பு=தந்தம்; யானையின் தந்தங்களைப் போன்று மார்பகங்களைக் கொண்ட பெண்மணிகள் என்று சீர்காழி நகரின் பெண்களை அப்பர் குறிப்பிடுகின்றார், தலத்தில் உள்ள மற்ற பெண்கள் போன்று தானும் சிவபிரானுக்கு அடிமையானதாக கூறி, தாயின் கேள்விக்கு சுவையாக விடை அளிக்கும் அப்பர் பிரானின் கற்பனை ரசிக்கத்தக்கது. 

    மாக யானை மருப்பேர் முலையினர்   
    போக யானும் அவள் புக்கதே புகத்
    தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே
    ஆக யானும் அவர்க்கு இனி ஆனதே
 

பொழிப்புரை:

நிலை பெற்றதும் மேன்மையானதும் ஆன வேதங்களை மறையோர் மகிழ்ந்து துதிக்க, நல்லூர் தலத்தில் அதிகமாக காணப்படும் அடியார்கள் இன்னிசைப் பாடல்களால் இறைவனைத் தொழ, தலத்தில் வசிக்கும் கன்னியர்கள் தங்களது கனவிலே, தாங்கள் விரும்பிய அழகிய சிவபெருமானைக் கண்டு மகிழ்கின்றார்கள். திருநல்லூர் தலத்தில் இருக்கும் கன்னியர்கள், சிவபெருமானை, அழகிய கண்களை உடையவரே, அனைத்து உயிர்களையும் தனது உயிர் போல் கருதி, எவரையும் அன்னியவராக கொள்ளாதவரே, என்று அழைத்து தங்களுக்கு அருள் நல்கவேண்டும் என்று வேண்டுகின்றார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து அவ்வாறே வேண்டுகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com