78. குருகாம் வயிரமாம் - பாடல் 1

கருவில் உள்ள
78. குருகாம் வயிரமாம் - பாடல் 1

முன்னுரை:

கருகாவூர் என்றதும் அனைவருக்கும், கருவில் உள்ள உயிரினைக் காக்கும் கர்ப்ப ரக்ஷாம்பிகை அம்மன் நினைவு தோன்றும். ஆனால் அப்பர் பெருமானுக்கு, இந்த உலகம் தோன்றுவதற்கு கருவாக இருக்கும் இறைவனின் நினைவு வருகின்றது. எங்கும் எதையும் சிவமாக பார்க்கும் அப்பர் பிரான், மாயையில் ஒடுங்கிய உலகத்தையும் உலகப் பொருட்களையும் மீண்டும் தோற்றுவிக்கும் பெருமானின் குணத்தைக் குறிப்பிட்டு, இறைவனின் அனாதித் தன்மையை நமக்கு பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்துகின்றார். இந்த பதிகம் தம்பதிகள், தங்களிடையே ஒற்றுமை நிலவவும், தங்களுக்குள் இடையே உள்ளே பிணக்குகள் தீரவும் ஓதவேண்டிய பதிகமாக கருதப்படுகின்றது. 

பாடல்: 1

    குருகாம் வயிரமாம் கூறு நாளாம் கொள்ளும்
                       கிழமையாம் கோளே தானாம்
    பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
                      பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம்
    ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
                     உள் நின்ற நாவிற்கு உரையாடியாம்
    கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம்
                     கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

குருகு=மெல்லிய இளம் குருத்து; வயிரம்=முதிர்ந்ததால் ஏற்பட்ட திண்மை, வலிமை. வயிரம் பாய்ந்த மரம் என்று வலிமையான தண்டினை உடைய மரத்தினைக் கூறுவதுண்டு. குருகாம் வயிரமாம் என்று, மென்மையாக உள்ள இறைவன் வலிமையாகவும் இருப்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. கூறு நாள்=சூரியனால் கூறுபடுத்தப்பட்ட பகல், இரவு ஆகிய இரண்டு வேளைகளும் சேர்ந்த நாள். கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்=ஞாயிறு முதல் சனி வரை, எந்த கோள்களின் பெயர் பற்றி இடப்பட்டதோ அந்த கோள்களின் குணங்களைக் கொண்டுள்ள வாரத்தின் ஏழு நாட்கள்; 

பருகா அமுதம்=பருகினால் மட்டுமே நீண்ட ஆயுள் தரக்கூடியது அமுதம். தன்னை நினைத்து தியானித்தாலே, மலங்களை நீக்குபவன் இறைவன் என்பதை உணர்த்த பருகா அமுதம் என்று கூறினார். இரதம்=சுவை; பழத்தினில் சுவையாகவும், பண்ணில் தமிழாகவும், கண்ணின் மணியாகவும், இருளில் பயன்படும் விளக்கு போலவும் சிவபிரான் உள்ளார் என்று சுந்தரர், குருகாவூர் வெள்ளடைப் பதிகத்தில் (7.29.6) கூறுகின்றார்

    பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய்
    கண்ணிடை மணி ஒப்பாய் கடுஇருள் சுடர் ஒப்பாய்
    மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
    விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே

உலகுக்கு முன்னே தோன்றும் கரு என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். மகா சங்காரம் முடிந்த பின்னர், ஒடுங்கிய உலகத்தினை மறுபடியும் தோற்றுவிக்க சிவபிரான் எண்ணம் கொள்ளும் சமயத்தில் உலகம் என்று ஒன்று தனியாக இல்லை; ஒடுங்கிய உலகத்தை மறுபடியும் தோற்றுவிக்க நினைத்து அதனை செயல்படுத்துவதும் சிவபிரான் தான் என்பதால், அப்பர் பிரான் இங்கே கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் என்று குறிப்பிடுகின்றார். 


பொழிப்புரை:

கருகாவூர் தலத்தில் எழுந்தருளியிருக்கும் எங்கள் கண் போன்ற இறைவன், இளங்குருத்து போன்ற பொருட்களில் மென்மையாகவும், பல பொருட்களின் வலிமையாகவும் விளங்குகின்றான். அவனே, சூரியனால் பாகுபாடு செய்யப்படும் வெவ்வேறு நாட்களாகவும், அந்தந்த நாட்களுக்குரிய கோள்களாகவும் இருக்கின்றான். அவன் தன்னை நினைப்பவர், மலங்களைப் போக்கும் அமுதமாகத் திகழ்கின்றான்; பாலில் நெய்யும், பழத்தில் சுவையும், பாட்டில் பண்ணும் இணைந்துள்ளது நமது புறக்கண்களுக்குத் தெரிவதில்லை; ஆனால் அவை இணைந்துள்ள தன்மையை நம்மால் உணரமுடிகின்றது. அவ்வாறே எல்லாப் பொருட்களிலும் இறைவன் இணைந்து இருக்கும் தன்மையை நமது கண்களால் நாம் காணமுடியாது. ஆனால் இறைவன் அவ்வாறு அனைத்துப் பொருட்களிலும் இணைந்து இருக்கின்றான். உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள இறைவன், நமது நாவினில் பொருந்தி நம்மைப் பேசுவிப்பனாகவும் உள்ளான். அவன் தான் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னமே இருந்து, உலகத்தைத் தோற்றுவித்து, நம் எல்லோரையும் வழிநடத்திச் செல்கின்றான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com