73. சூலப்படை உடையார் தாமே - பாடல் 7

ஐந்து குணங்களை


பாடல் 7:
    
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய்ப்
         பிரிவுடைய குணம் பேசில் பத்தோடு ஒன்றாய்
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர்
        விரிவிலாக் குணம் நாட்டத்து ஆறே என்பர்
தெரிவாய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும்
        பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் 
எரியாய தாமரை மேல் இயங்கினாரும்
        இடைமருது மேவிய ஈசனாரே


விளக்கம்:

பொருள் கூறுவதற்கு மிகவும் அரிதான பாடல் என்று பல உரையாசிரியர்களால் கருதப்படும் பாடல். உயிரினை விட்டு பிரியாத குணங்கள் பத்து எவை எவை என்பன குறித்து தெளிவான குறிப்புகள் இல்லை என்று பல பெரியோர்கள் கருதுகின்றனர். அருணை வடிவேல் முதலியார் தனது உரையில், இறைவனின் எட்டு குணங்களுக்கு எதிர்மறையான (மறுதலையான) எட்டு குணங்களுடன் வேறு இரண்டு குணங்களைச் சேர்த்து கீழ்க்கண்ட பத்து குணங்கள் மனிதனை விட்டு பிரியாதவை என்று கூறுகின்றார். தன்வயம் இல்லாமல் இருத்தல், சாரும் பொருட்களின் குணத்தைக் கொள்ளுதல், அறிவித்தால் மட்டுமே அறிதல், ஒரு சமயத்தில் ஒன்றினை மட்டும் உணருதல், படிப்படியாக உணருதல், பெரியதும் அல்லாமல் சிறியதும் அல்லாமல் இடைநிலையில் இருத்தல், தனக்கு இனிமை என்று கருதும் பொருட்களை விரும்புதல், தான் விரும்பாத பொருட்களை வெறுத்தல், தனித்து நிற்கும் சுதந்திரம் இல்லாமை மற்றும் தனித்து உணரப்படாமல் இருத்தல் ஆகியவை உயிருடன் பிரியாத குணங்களாக (இயற்கையாக உயிருடன் ஒட்டி இருக்கும் குணங்கள்) கருதப்படுகின்றன.

உயிரின் மாறுபடும் நிலைக்கு ஏற்றவாறு, சில குணங்கள் உயிரை விட்டு பிரிகின்றன, சில குணங்கள் உயிருடன் இணைகின்றன. அத்தகைய குணங்களை அப்பர் பெருமான் பிரியும் பதினொன்று குணங்கள் என்று கூறுகின்றார். அவையாவன, பேதமை, புல்லறிவு, அமைதி, கோபம், மடி, இன்ப நுகர்ச்சி, துன்ப நுகர்ச்சி, நுகர்ச்சியற்ற தன்மை, நன்முயற்சி, தீய முயற்சி, மற்றும் ஊக்கமின்மை. இந்த குணங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்கள் இருப்பதை நாம் உணரலாம். இவ்வாறு மாறுபட்ட குணங்களில் ஒன்று உயிரினைப் பற்றும்போது, அதற்கு எதிர்மறையான மற்றொரு குணம், உயிரை விட்டு நீங்குவதை நாம் கண்கூடாக காண்கின்றோம். 
உயிர்கட்கு என்று முதலடியில் கூறப்பட்டதால், இரண்டாவது அடியில் கூறப்பட்டவை உயிரின்று மாறுபட்ட பரம்பொருளை குறிப்பிடுகின்றது என்று கொள்ளலாம். விரியாத குணம் நான்கு என்று இறைவனை விட்டு என்றும் பிரியாத, உண்மை, அறிவு, ஆனந்தம், அருள் ஆகிய நான்கு குணங்கள் சொல்லப் படுகின்றன. இந்த நான்கு அடிப்படை குணங்களே, உயிர்களுக்கு அருள் புரிவதே தனது நோக்கமாகக் கொண்ட இறைவனின் சச்சிதானந்த ரூபமாக கருதப்படுகின்றன. சத் = உண்மை. சித்து = அறிவு. ஆனந்தம் = இன்பம்.

இறைவனின் குணங்களை நாம் மேலும் ஆராய்ந்து பார்க்கில், கீழ்க்கண்ட குணங்கள் உள்ள நிலை நமக்கு புலப்படும். எவருக்கும் ஆட்படாமல் தன்வயமாக இருத்தல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினனாக இருத்தல், எவரும் அறிவிக்காமலே அனைத்தையும் முற்றிலுமாக அறிந்து கொள்ளும் தன்மை, இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், முடிவிலாத ஆற்றல், இந்த ஆறு குணங்களைத் தான் விரிவிலாக் குண நாட்டத்தே ஆறு என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நாட்டம்=நாடி ஆராய்தல். 

ஆராய்ந்து பார்க்கில் நமக்கு புலப்படும் குணங்களை உணர்த்தும் அப்பர் பிரான், வெளிப்படையாகத் தெரியும் ஐந்து குணங்களை தெரிவாய குணங்கள் அஞ்சு என்று கூறுகின்றார். ஐம்பூதங்களுடன் கலந்து இருந்து, அவைகளுக்கு அடிப்படையான குணங்களாக இருக்கும் தன்மையே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. ஓசை, ஒளி, ஊறு, சுவை, நாற்றம் எனப்படும் ஐந்து தன்மாத்திரைகளை அடிப்படை குணங்களாக ஐந்து பூதங்களுக்கும் அமைந்துள்ளன. 

சமிதை என்று வேள்வியில் பயன்படுத்தப்படும் சமித்துகளை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். ஆல், அரசு, அத்தி, மா, வன்னி ஆகியவை சிறந்த சமித்துகளாக கருதப் படுகின்றன.
பதம் என்றால் பொருளுள்ள சொற்கள் என்று பொருள். நமச்சிவாய மந்திரத்தில் அமைந்துள்ள ஐந்து எழுத்துக்களும் ஐந்து பொருட்களை குறிக்கின்றன. சி என்ற எழுத்து சிவபெருமானையும், வ என்ற எழுத்து அவனது அருட் சக்தியாகிய அன்னை பார்வதி தேவியையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், ந என்ற எழுத்து திரோதானத்தையும் (மறைப்பு ஆற்றலையும்) ம என்ற எழுத்து ஆணவ மலத்தையும் குறிக்கின்றன. அஞ்சு பதம் என்ற சொற்றொடர், நமக்கு சுந்தரரின் ஆரூர் பதிகத்தின் (7.83) முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. சிந்தை பராமரியா என்ற தொடரை, அஞ்சு பதம் சொல்லி என்ற தொடருடன் இணைத்து நாம் பொருள் கொள்ளவேண்டும். பராமரிதல் என்றால் ஆராய்தல் என்று பொருள். நாம் மனம் ஒன்றி பெருமானின் திருநாமத்தை, பஞ்சாக்கர மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக, சுந்தரர் இந்த பாடலில், நமது மனதினில் முறையாக பஞ்சாக்கர மந்திரத்தை சிந்தித்தவாறு சொல்ல வேண்டும் என்று சொல்கின்றார். அந்தி=இரவு; இரவும் பகலும், அதாவது எப்போதும் பொருளுடைய ஐந்து எழுத்துகள் கொண்ட நமச்சிவாய மந்திரத்தை நாம் சொல்ல வேண்டும் என்பதை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். 

    அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி
    முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்
    சிந்தை பராமரியாத் தென் திருவாரூர் புக்கு
    எந்தை பிரானாரை என்று கொள் எய்துவதே 


கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய திருவிருத்தப் பதிகத்தின் (4.107) இரண்டாவது பாடலில், அப்பர் பிரான் சொற்களாலான ஐந்தெழுத்து மந்திரம் என்று குறிப்பிடுகின்றார். கதம்=கோபம்: 

    பதத்து எழு மந்திரம் அஞ்செழுத்து ஓதிப் பரிவினொடும் 
    இதத்தெழு மாணி தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு
                                                                                                  அடர்த்த
    கதத்தெழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுக
    உதைத்தெழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே 


கதி என்றால் நிலை, வழி என்று பொருள். உடலை விட்டு பிரிந்த உயிர் சென்று சேரக் கூடிய ஐந்து நிலைகளை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். நரகத்திலும் சொர்கத்திலும் கழிக்க வேண்டிய வினைகளின் தகுதிக்கு ஏற்ப, உயிர் முதலில் சொர்க்கம் மற்றும் நரகம் சென்று தனது வினைகளின் ஒரு பகுதியை கழித்துக் கொள்கின்றது. பின்னர் அடுத்த பிறவியில் கழிக்க வேண்டிய வினைகளின் தன்மைக்கு ஏற்ப, மனிதனாகவோ, விலங்கு முதலான ஆறாவது அறிவு இல்லாத பிறவியாகவோ பிறக்கின்றது. முக்தி அடையக் கூடிய பக்குவம் பெற்ற உயிர்கள் பரகதியைச் சென்று அடைகின்றன. எரியாய = நெருப்புச் சுடர் போன்று ஒளிவிட்டு பிரகாசிக்கும் என்று பொருள். இங்கே ஞானத்தால் ஒளிவிட்டு பிரகாசிக்கும் அடியார்களின் நெஞ்சத்தில் இறைவன் உறைவதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். 

பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் என்பதற்கு உயிருடன் எப்போதும் இருக்கும் தத்துவங்கள் இருபத்து நான்கினையும் அதனுடன் உயிரையும் இணைத்து இருபத்து ஐந்து என்று விளக்கம் சிலர் கூறுகின்றனர். உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சு என்று அப்பர் பிரான் கூறியிருப்பதால், உயிரினைத் தவிர்த்த இருபத்தைந்து பொருட்கள் என்று பொருள் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். எனவே இந்த விளக்கத்தின் பொருத்தத்தை நாம் சற்று சிந்திக்கவேண்டும். ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள் (ஒலி, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்) ஐந்து ஞானேந்திரயங்கள் (கண், காது, மூக்கு, வாய், தோல்), ஐந்து கன்மேந்திரயங்கள் (கை, கால், நாக்கு, எருவாய், கருவாய்) மற்றும் மனம், சித்தம், புத்தி அகங்காரம் எனப்படும் நான்கு அந்தக்கரணங்கள் என்பன இருபத்துநான்கு தத்துவங்கள். விரியாத குணம் என்பதற்கு அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு நிலைகளையும், பேறு, இழப்பு, துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு என்பனவற்றை நாட்டமாகிய ஆறு குணங்கள் என்றும், கேட்டல், கேட்பித்தல், ஓதல், ஓதுவித்தல், சிந்தித்தல் ஆகிய ஐந்து குணங்களை, ஞானம் வளர்க்கும் ஐந்து முறைகள் என்றும் விளக்கம் கூறுவார்கள். 

பொழிப்புரை:

உயிரினை விட்டு எப்போதும் பிரியாத பத்து குணங்களாக, (தன்வயமாக இல்லாது இருத்தல், தான் சாரும் பொருளின் தன்மையை தான் மேற்கொள்ளுதல், எவரேனும் அறிவித்தால் மட்டுமே அறிந்து கொள்ளும் தன்மை, ஒரு சமயத்தில் ஒரு பொருளினை மட்டுமே உணர்தல், படிப்படியாக உணரும் தன்மை, பெரியதும் அல்லாமல் சிறியதும் அல்லாமல் இடை நிலையில் இருத்தல், தனக்கு வேண்டிய பொருட்களை விரும்புதல், தான் வேண்டாத பொருட்களை வெறுத்தல், தனித்து நில்லாமை, தனித்து உணரப் படாமை) இருப்பவன் சிவபெருமான். உயிரின் நிலைக்கு ஏற்ப அவ்வப்போது வந்து ஒட்டிக்கொள்ளும் பதினோரு குணங்களாக (அறியாமை, சிற்றறிவால் ஆளப்படும் தன்மை, கோபம், சோம்பல், இன்பத்தை அனுபவித்தல், துன்பத்தால் வருந்துதல், இன்ப துன்பங்களை நுகராத தன்மையில் இருத்தல், நல்ல முயற்சிகள், தீய முயற்சிகள், ஊக்கம் இல்லாது இருத்தல்) இருப்பவரும் சிவபெருமான் தான். அவர் சத், சித்து, ஆனந்தம் அருள் ஆகிய நான்கு குணங்களை அடிப்படையாகக் கொண்டவர். நாம் மேலும் ஆராய்ந்து பார்க்கையில் இறைவன், எவருக்கும் ஆட்படாமல் தன்வயமாக இருத்தல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினனாக இருத்தல், எவரும் அறிவிக்காமலே அனைத்தையும் முற்றிலுமாக அறிந்து கொள்ளும் தன்மை, இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், முடிவிலாத ஆற்றல், இந்த ஆறு குணங்களை கொண்டவராக இருக்குன் தன்மை நமக்கு புலப்படும். நாம் அன்றாடும் காணும் பஞ்சபூதங்களின் அடிப்படை குணங்களாக, ஒலி, ஒளி, ஓசை, ஊறு, சுவை, நாற்றம் ஆகிய ஐந்து குணங்களாக உள்ள பெருமான், ஆல், அரசு, அத்தி, வன்னி. மா, ஆகிய சிறந்த சமித்துகளாகவும் உள்ளார். உடலினை விட்டு பிரிந்த உயிர் சென்று சேரும் ஐந்து நிலைகளாக, தேவகதி, நரககதி. பரகதி, மனிதகதி, விலங்குகதி ஆகிய ஐந்து நிலைகளாகவும், பஞ்சாக்கரம் மந்திரம் உணர்த்தும் ஐந்து பொருட்களாகவும் உள்ளவர் அவரே. இத்தகைய தன்மை உடைய இறைவன், தங்களது ஞானத்தால் ஒழி விட்டு பிரகாசிக்கும் அறிவினை உடைய அடியார்களின் நெஞ்சமாகிய தாமரை மலரையும், இடைமருது தலத்தையும் மிகுந்த விருப்பத்துடன் தனது இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com