73. சூலப்படை உடையார் தாமே - பாடல் 8

ஆரமுதமாகத் திகழ்பவர்
73. சூலப்படை உடையார் தாமே - பாடல் 8


பாடல் 8:
    
தோலில் பொலிந்த உடையார் போலும்
          சுடர் வாய் அரவு அசைத்த சோதி போலும்
ஆலம் அமுதாக உண்டார் போலும் அடியார்கட்கு
          ஆரமுதம் ஆனார் போலும்
காலனையும் காய்ந்த கழலார் போலும்
          கயிலாயம் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஏலம் கமழ்குழலாள் பாகர் போலும்
          இடைமருது மேவிய ஈசனாரே


விளக்கம்:
ஏலம் = நறுமணம். ஆலம் = நஞ்சம். தான் உண்டது ஆலம் என்றாலும் அடியார்கட்கு ஆரமுதமாகத் திகழ்பவர் பெருமான் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார்.

பொழிப்புரை:

தோலாடையை அணிந்த போதிலும் மிகுந்த அழகுடன் பொலிந்து விளங்குபவர் சிவபெருமான். சுடரொளி விட்டு வீசும் மாணிக்கத்தைத் தனது கழுத்தினில் கொண்டுள்ள பாம்பினை இறுக்கமாக தனது இடையினில் கட்டி, தனது விருப்பம் போல் அதனை அசைப்பவர் சோதி வடிவமாக உள்ளவர் சிவபெருமான்; தான் நஞ்சினை உட்கொண்ட போதிலும் அடியார்கட்கு ஆரமுதமாகத் திகழ்பவர் சிவபெருமான்; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை, வெகுண்டு தனது காலால் உதைத்த பெருமான் கயிலாயத்தை தான் வாழும் இடமாகக் கொண்டவர்; நறுமணம் வீசும் கூந்தலை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவராகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com