73. சூலப்படை உடையார் தாமே - பாடல் 10

நெற்றிக்கண் அனல்
73. சூலப்படை உடையார் தாமே - பாடல் 10


பாடல் 10:

கொன்றை அம் கூவிள மாலை தன்னைக்
        குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி
       நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும்
அன்று அவ்வரக்கன் அலறி வீழ
       அருவரையைக் காலால் அழுத்தினாரும்
என்றும் இடுபிச்சை ஏற்று உண்பாரும்
       இடைமருது மேவிய ஈசனாரே


விளக்கம்:

கூவிளம்=வில்வம்: குளிர்சடை என்று கங்கை நதியை, சிவபெருமான் தனது சடையில் அடக்கிய நிலையினை குறிப்பிடுகின்றார். குளிர்ந்த கங்கை நதியின் அருகே இருக்கும் நெற்றிக்கண் அனல் வெளிப்படுத்தும் தன்மையில் சிறிதும் குறையாது இருந்த தன்மை இங்கே நயமாக உணர்த்தப்படுகின்றது. சிவபெருமானின் தவத்தினை கலைக்குமாறு மன்மதனை தூண்டிவிட்ட தேவர்களும் இந்திரனும், அவனுக்குத் துணையாக தாங்களும் வருவதாக கூறினாலும், சிவபெருமானிடம் கொண்டிருந்த அச்சத்தால், மறைந்து நின்று நடப்பது என்ன என்பதை கவனித்த நிலை, நின்ற அனங்கள் என்ற குறிப்பு மூலம் மன்மதன் ஒருவன் மட்டும் தான் பெருமானின் எதிரே நின்றான் என்று உணர்த்தப்படுகின்றது. 

பொழிப்புரை:

அழகிய கொன்றை மாலையையும் வில்வ இலை மாலையையும், கங்கை நதி தங்கியதால் குளிர்ந்து காணப்படும் சடையில் அடக்கிய சிவபெருமான், தன்னெதிரே நின்றே மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் விழித்து நோக்கி எரித்த நிமலனாக இருப்பவரும், அனலின் உருவமாக சோதியாக உள்ளவரும், கயிலை மலையை பேர்த்தேடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணன் அலறி விழுமாறு கயிலை மலையினைத் தனது கால் பெருவிரலால் அழுத்தியவரும், எப்போதும் மற்றவர் இடும் பிச்சையை ஏற்கக் காத்திருப்பவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் மூலம் பெருமானது பண்புகளையும், அவரது செயல்கள் உணர்த்தும் தன்மைகளையும் நமக்கு எடுத்துரைக்கும் அப்பர் பிரான், பதிகத்தின் முதல் பாடலில் பெருமானை விகிர்தர் என்று குறிப்பிட்டு, ஏனையோர் செய்யமுடியாத செயல்களைச் செய்து முடிக்கும் வல்லமை படைத்தவர் சிவபெருமான் என்று உணர்த்துகின்றார். ஆன்மாவைப் பற்றியுள்ள வினைகளைத் தீர்க்கும் வல்லமை படைத்தவர் என்று முதல் பாடலில் உணர்த்திய அவர், அடுத்த பாடலில் பெருமானின் சிறப்புகளை அறிந்த பலரும் அவரை போற்றி வணங்குகின்றார்கள் என்று கூறுகின்றார். தன்னை வழிபடும் அடியார்களின் துன்பங்களைத் தீர்ப்பதல் அவர்களுக்கு மிகவும் இனியவராக பெருமான் விளங்குகின்றார் என்று பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிடுகின்றார். திருமால் உட்பட பல தேவர்கள் இறைவனை வணங்கிய சிறப்பு நான்காவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஐந்தாவது பாடலில், கச்சி ஏகம்பம், திருவாரூர் ஆகிய தலங்களைக் குறிப்பிட்டு அத்தகைய சிறப்பினை உடைய இடைமருதூர் என்று உணர்த்துகின்றார். ஆறாவது பாடலில் எங்கும் நிறைந்துள்ள பெருமான் நாம் பெரும் பதினாறு பேறுகளாக உள்ள தன்மை குறிப்பிடப்படுகின்றது. ஏழாவது பாடல் கருத்தாழம் மிகுந்த பாடல். எஞ்சிய மூன்று பாடல்களில் பெருமானின் சிறந்த பண்புகளையும், அந்த பண்புகளை வெளிப்படுத்திய செயல்களையும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு எண்ணற்ற சிறப்புகளை உடைய பெருமானின் பண்புகளையும் கருணை உள்ளத்தையும் நமக்கு இந்த பதிகத்தின் மூலம் உணர்த்திய அப்பர் பிரானின் வழியில் சென்று நாமும் இறைவனை வழிபாட்டு வாழ்வினில் உய்வினை அடைவோமாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com