74. நல்லர் நல்லதோர் - பாடல் 1

நல்ல குணமுடைய நாகம்
74. நல்லர் நல்லதோர் - பாடல் 1


முன்னுரை:


இராகு பகவான் வழிபட்ட தலம் நாகேச்சரம். மேலும் ஐந்து தலைகளை உடைய நாகங்கள் ஆதிசேஷன், கார்க்கோடகன், நாகராஜன், தக்ஷன் ஆகியோர் இந்த தலத்து இறைவனை வணங்கி பயன் அடைந்ததாக கூறப்படுகின்றது. இவ்வாறு பல கொடிய விடம் கொண்ட நாகங்களும் இறைவனை வணங்கிய தலத்திற்கு வந்த அப்பர் பிரானுக்கு, நாகங்கள் இறைவனை வணங்கும் காரணத்தையும், இறைவனின் சடையிலும் உடலிலும் பாம்புகள் சாதுவாக இருப்பதையும் நினைத்துப் பார்க்கின்றார் போலும். பலருக்கும் நன்மை பயக்கின்ற இறைவனின் சன்னதியில் பாம்புகளும் தனது கொடிய தன்மையை மறந்து விடுகின்றன என்பதை உணர்கின்றார் போலும். அதே நினைவில் நல்லவராகிய இறைவன், நல்ல குணம் கொண்டுள்ள பாம்பினைத் தனது இடையில் தரித்துள்ளார் என்று பதிகத்தின் பாடலைத் தொடங்குகின்றார் போலும்.     

பாடல் 1:
    நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்
    வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
    பல் இல் ஓடு கை ஏந்திப் பலிதிரி
    செல்வர் போல் திரு நாகேச்சரவரே
 

விளக்கம்:

விடம் கொண்டுள்ள தன்மையால் அனைவரையும் அச்சுறுத்தும் பாம்பு நல்ல குணமுடைய நாகம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. இறைவனின் சன்னதியில் நல்லன அல்லாத பொருட்களுக்கு இடம் ஏது. கொலை வெறியுடன் தாக்க வந்த மான்கன்று, தனது கொலை வெறியை விடுத்து, துள்ளி விளையாடும் மான்குட்டியாக பெருமானின் கைகளில் திகழ்வது போல் பாம்பும் தனது கொடிய குணத்தை விட்டுவிட்டு நல்ல குணமுடைய பாம்பாக அடங்கி விடுகின்றது. சந்திரனிடம் தான் கொண்டுள்ள பகையையும் மறந்து, சந்திரனுடன் பெருமானின் சடையில் தாங்கும் பாம்பு பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது. நல்லான் ஆகிய பெருமானுடன் இணைந்த பாம்பு, தனது கொடிய குணத்தினை விட்டு விட்டு நல்ல குணத்துடன் திகழ்வது நமக்கு தமிழ் மூதாட்டி அவ்வையாரின் மூதுரை பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது.

    நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே -- நல்லார்
    குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
    இணங்கி இருப்பதுவும் நன்று.      

நல்லர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவது நமக்கு ஞானசம்பந்தரின் நமச்சிவாயப் பதிகத்தின் ஒரு பாடலை (3.49.5) நினைவூட்டுகின்றது. எல்லோருக்கும் நன்மை செய்பவன் என்பதை உணர்த்தும் வகையில் சம்பந்தர் நல்லார் என்று அழைக்கின்றார்.

    கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் 
    இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
    எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
    நல்லார் நாமம் நமச்சிவாயவே


சீர்காழி மீது அருளிய ஒரு பதிகத்தை (2.11)  நல்லான் என்று இறைவனை அழைத்துத் சம்பந்தர் தொடங்குகின்றார். நன்மையே வடிவான இறைவன் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வேதங்களிலும் அதன் ஆறு அங்கங்களிலும் வல்லவனாக உள்ள பெருமான், வேதங்களில் காணப்படும் துதிகளின் வடிவமாகவும் உள்ளார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். 

    நல்லானை நான்மறையோடு இயல் ஆறங்கம்
    வல்லானை வல்லவர் பால் மலிந்து ஓங்கிய
    சொல்லானைத் தொல் மதில் காழியே கோயிலாம்
    இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே

நல்லவனாக உள்ள பெருமான், நான்மறைகள் மற்றும் அதன் அங்கங்களிலும் வல்லவனாக இருக்கும் நிலையினை அப்பர் பிரான் கச்சி ஏகம்பத்து பதிகத்தின் ஒரு பாடலிலும் (4.07.07) குறிப்பிடுகின்றார். சிவன் என்ற சொல்லுக்கு மங்களம் என்று பொருள். நன்மை பயக்கும் இறைவனை மங்களம் என்ற பொருள்பட சிவன் என்று மிகவும் பொருத்தமாக வேதங்கள் அழைக்கின்றன. நல்லான=மேன்மை உடைய: துகள்=களங்கம்; வேதங்களில் வளவர்கலாக விளங்கி இறைவனின் தன்மையை உள்ளவாறு உணர்ந்து கொள்ளும் அடியார்களின் மனதினில் இறைவன் உறைகின்றான் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். 

நல்லானை நல்லான நான்மறையோடு ஆறங்கம்
வல்லானை வல்லார் கண் மனத்து உறையும் மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகள் ஏதும்
இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தேனே

உலகத்தவர்க்கு நன்மை பயப்பவனாக விளங்கும் பெருமான், உலகமாகவும், குணக் குன்றாகவும் விளங்கும் தன்மை தொழற்பாலதே குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (4.94.7) அப்பர் பெருமானால் உணர்த்தப் படுகின்றது.

    ஞாலத்தானை நல்லானை வல்லோர் தொழும்
    கோலத்தானைக் குணப்பெரும் குன்றினை
    மூலத்தானை முதல்வனை மூவிலச்
    சூலத்தானைக் கண்டீர் தொழற்பாலதே 

நம்பி என்றால் ஆண்களில் சிறந்தவன் என்று பொருள். நல்லவனாகத் திகழும் பெருமானை நம்பி என்று அப்பர் பிரான் அழைப்பதை நாம் நள்ளாறு தலத்தின் மீது அருளப்பட்ட திருத்தாண்டகப் பதிகத்தின் ஒரு பாடலில் (6.20.8) காணலாம். 

சொல்லானைச் சுடர்ப்பவளச் சொதியானைத்
           தொல் அவுணர் பரம் மூன்று எரியச் செற்ற
வில்லானை எல்லார்க்கும் மேலானானை
           மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்
கல்லாலின் நிழற்கீழ் அறம் கண்டானைக்
           காளத்தியானைக் கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற்றானை
           நன் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே   

நல்லான் என்று இறைவனை குறிப்பிடும் நாரையூர் தலத்தின் ஒரு பதிகத்தின் பாடலில் (6.74.1), பெருமான் பலருக்கும் அருள் செய்த கருணைச் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன. திருமாலுக்கு ஆழி அருள் செய்தது, அடியார்கட்கு எளியானாக இருப்பது, முப்புரங்களை எரித்து அனைவரையும் காப்பாற்றியது, அர்ஜுனனுக்கு பாசுபதம் அளித்தது ஆகிய செயல்கள் இந்த பாடலில் குறிக்கப்படுகின்றன.

சொல்லனைப் பொருளானைச் சுருதியானைச்
          சுடராழி நெடுமாலுக்கு அருள் செய்தானை
அல்லானைப் பகலானை அரியான் தன்னை
          அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த
வில்லானைச் சரம் விசையற்கு அருள் செய்தானை
           வெங்கதிரோன் மாமுனிவன் விரும்பி ஏத்தும்   
நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை நாரையூர்
           நன்னகரில் கண்டேன் நானே

நல்லர்=நன்மை பயப்பவர்: செல்வர்=அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த முக்திச் செல்வத்தை உடையவர் என்பதால் பெருமானை செல்வர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமான் பிச்சை ஏற்றுத் திரிவது, வறுமையால் அல்ல என்பதை உணர்த்தும் வண்ணம், பெருமானை செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் இங்கே காணலாம். உலகத்தவர் தங்களிடம் உள்ள மூன்று மலங்களையும் இறைவனது பிச்சைப் பாத்திரத்தில் இட்டு, தங்களது மலங்களைக் களைந்து கொண்டு, உய்வினை அடையும் பொருட்டு, பெருமான் பல இடங்களுக்கும் சென்று பலி ஏற்பதற்காக பெருமான் திரிகின்றான் என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.  

இறைவன் இவ்வாறு பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மலங்களை முற்றிலும் ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான். இந்த உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் முதல் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிடுகின்றார்.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது
                                                                                    அருளினாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்
ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்.

உயிர்களுக்கு இருக்கும் தான் என்ற அகந்தையை கழிக்கும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார்  என்று அப்பர் பெருமான் சொல்லும் பாடலை (4.53.6) நாம் இங்கே காண்போம். பெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்று தெளிவு படுத்தும் அப்பர் பிரான், நகைச்சுவையாக பெருமானது உணவு எது என்பதை குறிப்பிடுவதையும் நாம் இந்த பாடலில் காணலாம். நஞ்சு தான் அவர் விரும்பி உண்ணும் உணவு என்று இங்கே கூறுகின்றார்.  

    வானகம் விளங்க மல்கும் வளம்கெழு மதியம் சூடித்
    தானகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்
    ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
    ஆனகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே 

பலி ஏற்கும் கொள்கையிலிருந்து தவறாதவன் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் (5.36.1) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. கான்=நறுமணம்: வெண் தலை=தசை நீங்காத தலை; அறாத=நீங்காத

    கான் அறாத கடி பொழில் வண்டினம்
    தேன் அறாத திருச்செம்பொன்பள்ளியான்
    ஊன் அறாததோர் வெண் தலையில் பலி
    தான் அறாததோர் கொள்கையன் காண்மினே
 

சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது தாங்கள் அந்நாள் வரை கொண்டிருந்த பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான்...
      
    பரந்து உலகேழும் படைத்த பிரானை
    இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்        
    நிரந்தரமாக நினையும் அடியார்
    இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

 
பொழிப்புரை:
பலருக்கும் நன்மை பயப்பவராக விளங்கும் பெருமான், விடத்தை உடையதாக இருந்தாலும் பெருமானுடன் இணைந்த பின்னர் நல்ல குணம் உடையதாக மாறிய பாம்பினைத் தனது இடையில் பூண்டுள்ள பெருமான், தனது விருப்பம் போல் அந்த பாம்பினை ஆட்டுகின்றார். தனது அடியார்களை பீடித்துள்ள வலிமையான வினைகளையும் தீர்க்கும் மருந்தாக செயல்படும் வல்லமை உடைய பெருமான், பற்கள் இல்லாமலும் உலர்ந்தும் காணப்படும் பிரமனின் கபாலத்தைக் கையில் ஏந்தியவாறு எங்கும் திரிகின்றார். இவ்வாறு பிச்சை ஏற்றாலும் உண்மையில் முக்திச் செல்வம் எனப்படும் சிறந்த செல்வத்தை உடையவராக இருக்கும் பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com