74. நல்லர் நல்லதோர் - பாடல் 7

ஞான ஒளியாக
74. நல்லர் நல்லதோர் - பாடல் 7

பாடல் 7:
    மானை ஏந்திய கையினர் மையறு
    ஞானச் சோதியர் ஆதியர் நாமம் தான்
    ஆன அஞ்செழுத்து ஓத வந்து அண்ணிக்கும்
    தேனர் போல் திரு நாகேச்சரவரே

விளக்கம்:
மையறு=குற்றமற்ற; அண்ணிக்கும்=இனிக்கும்; தேனர்=தேனைப் போன்றவர் முதல் பாடலில், பெருமானைச் சென்றடைந்த பாம்பு எவ்வாறு நல்ல குணம் உடைய பாம்பாக மாறியது என்பதை நாம் பார்த்தோம். சாதுவான இயல்பினைக் கொண்ட மானுக்கு வெறியூட்டி, பெருமான் மீது தாருகவனத்து முனிவர்கள் ஏவினார்கள். அவ்வாறு தன்னை எதிர்க்கும் எண்ணத்துடன் தன்னை நோக்கி ஓடி வந்த, மான் குட்டியின் வெறியைத் தனிவித்த இறைவன், அந்த மானினைத் தனது கையில் ஏந்துகின்றார். பலருக்கும் நன்மை புரியும் இயல்புடைய நல்லராகிய இறைவனுடன் இணைந்த மான்கன்று, தனது இயல்பான குணமாகிய தாவும் நிலையில் அவரது கையில் பொருந்தியது.   

இறைவன் ஞானச் சுடராக இருந்து, புற இருளையும் உயிர்களின் அகயிருளையும் நீக்கும் தன்மையையும், உயிர்களுக்கு அருள் புரிவதையும், காலம் கடந்து ஆதியாக நிற்கும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.      

பொழிப்புரை:
தாவும் நிலையுடன் மான், பெருமானது கையில் பொருந்தியுள்ளது. குற்றமற்ற ஞான ஒளியாக பிரகாசிக்கும் பெருமான் உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக உள்ளவர் ஆவார். அவரது திருநாமமாகிய அஞ்செழுத்து மந்திரத்தை ஓதும் அடியார்களுக்கு இனிக்கின்ற தேனாக இருக்கும்   பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com