74. நல்லர் நல்லதோர் - பாடல் 8

மிகவும் அழகராக
74. நல்லர் நல்லதோர் - பாடல் 8

பாடல் 8:
    கழல் கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்
    தழல் கொள் மேனியர் சாந்த வெண்ணீறு அணி
    அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய
    குழகர் போல் திரு நாகேச்சரவரே

விளக்கம்:
சாந்தம்=சந்தனம்; ஏனையோர் நறுமணம் வீசும் சந்தனத்தை விரும்பி உடல் முழுவதும் பூசிக் கொள்வது போன்று, திருநீற்றினை இறைவன் தனது உடல் எங்கும் பூசிக் கொள்ளும் நிலை இங்கே உணர்த்த்தப் படுகின்றது. பாடம் கேட்ட சனகாதி முனிவர்கள் முதியவராக காணப்பட, அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் பெருமான் மிகவும் இளையவராக இருக்கும் நிலையை நாம் பல இடங்களிலும் காண்கின்றோம், இந்த நிலையை உணர்த்தும் பொருட்டு, இளமையுடன் அழகாக விளங்கும் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். 

பொழிப்புரை:
கழலினைத் தனது காலில் அணிந்துள்ள பெருமான், தனது அடியானாகிய சிறுவன் மார்க்கண்டேயனது உயிரைக் கவர வந்த இயமனின் மீது கோபம் கொண்டு அவனைக் காலால் உதைத்தவர் ஆவார். கொழுந்து விட்டு எரியும் தழலின் நிறத்தை உடைய பெருமான், தனது உடலெங்கும் சந்தனம் பூசிக் கொள்வது போன்று திருநீற்றினைப் பூசிக்கொண்டு மிகவும் அழகராக காணப்படுகின்றார். ஆல மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு வேதங்களின் பொருட்களை விளக்கிய பெருமான், இளையவராகவும் அழகியராகவும் காணப்படுகின்றார். இத்தகைய தன்மைகள் கொண்ட பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com