75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 1

எள்ளி நகையாட
75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 1

பின்னணி:

சமண மதத்தினைச் சார்ந்து நெடுங்காலம் இருந்த தனது உடலினை, பெண்ணாகடத்தில் இறைவனின் திருவருளால், சூலம் மற்றும் இடபத்தின் குறிகள் பொறிக்கப்பட்டு தூய்மை செய்து கொண்டதன் பின்னர், பல தலங்களுக்கும் சென்று இறைவன் மீது பதிகங்கள் பாடி அருளிய அப்பர் பிரான், குடந்தைக்கு அருகில் உள்ள சத்திமுற்றம் என்ற தலத்திற்கு வருகின்றார். தன்னை நோக்கித் தவமிருந்த உமை அம்மைக்கு சிவபெருமான், ஒளிப் பிழம்பாக காட்சி தர, அந்த நெருப்பு வடிவில் இருந்த உருவத்தை உமையம்மை தழுவிக் கொண்டு முத்தம் கொடுத்த தலம். இதனால் தான் சத்திமுற்றம் என்ற பெயர் இந்த தலத்திற்கு வந்தது. தவமிருந்த உமையம்மைக்கு இறைவன் அருளிய நிகழ்ச்சி, அப்பர் பெருமானுக்கும் இறைவனிடம் ஏதேனும் அருள் பெற வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியது போலும். இறைவனது திருவடித் தனது தலையின் மீது பதிக்கப் படவேண்டும் என்று இந்தப் பதிகம் மூலம் வேண்டுகின்றார். இதனை விளக்கும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்று சேர்ந்து திருச்சத்திமுற்றத்து இருந்த
                                                      சிவக்கொழுந்தைக்
குன்ற மகள் தன் மனக்காதல் குலவும் பூசை
                                                     கொண்டு அருளும்    
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில்
                                                     திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி
                                                     மாலைகளும் சாத்துவார்

    
பாடல் 1: 

    கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன் முன்
    பூவார் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போகவிடில்
    மூவா முழுப்பழி மூடும் கண்டாய் முழங்கும் தழற்கைத்
    தேவா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

விளக்கம்:

கோ=அரசன். முடுகி=விரைந்து வந்து; அடுதிறல்=தப்ப முடியாத ஆணை; குமைத்தல்=அழித்தல்; மூவா=அழியாத; முழங்கும்=ஒலிக்கும். சிவபிரானிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட அடியார்கள் தங்களுக்கு வேண்டிய உதவியினை சிவபிரான் செய்யாவிடில், அவர்கள் சிவபிரானிடம் உரிமை எடுத்துக் கொண்டு பழி வரும் என்று சிவபிரானிடம் கூறுவதை நாம் அவர்கள் பாடலில் காணலாம். தனது வலது கண் பார்வையினை மீண்டும் பெற வேண்டிய சுந்தரர், மீளா அடிமை என்று தொடங்கும் திருவாரூர் பதிகத்தின் இரண்டாவது பாடலில், எனது கண் பார்வையினை எதற்காக நீர் எடுத்துகொண்டீர்; அதனால் உமக்குத் தான் பழி வந்து சேர்ந்தது என்று கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். ஒற்றி என்றால் அடமானப் பொருள். அடமானப் பொருள் என்றால், பொருளின் உரிமையாளர் அந்தப் பொருளினை மீட்டுக்கொள்ளும் உரிமை கொண்டது. தான் அவ்வாறு உள்ள பொருள் அல்ல; என்றும் மீட்கமுடியாமல் அடிமையாக மாறியவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் விதமாக மீளா அடிமை என்று சுந்தரர் இந்த பதிகத்தினை தொடங்குகின்றார். அதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் சிவபிரான் தனது விருப்பபடி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றாலும், செய்யாத குற்றத்திற்காக தனது கண் பார்வையினைப் பறித்தது எதற்காக என்று இங்கே கேள்வி கேட்கின்றார். கொத்தை=குருடு. இடது கண்ணின் பார்வையை காஞ்சிபுரத்தில் பெற்றதால், வலது கண்ணினை மற்றைக் கண் இங்கே குறிக்கின்றார்.
  
    விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
    குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர்
    எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்   
    மற்றைக் கண் தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்து போதீரே

பாச்சிலாச்சிராமத்து பதிகத்தில் ஞானசம்பந்தப் பெருமானும், கொல்லி மழவனின் மகளினை முயலகன் என்ற நோயினால் வருத்தச் செய்வது சிவபிரானுக்கு பழி சேர்க்கும் செயல் அல்லவா, அத்தைகைய செயல் அவரது பண்பினுக்கு ஏற்றது இல்லை என்று கூறுவதை நாம் காணலாம்.

மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி
                                                                                                தன்னை
நீலது வண்ணனும் எய்தியதில்லை என இவர் நின்றதும்
                                                                                                அல்லால்
ஆலது மாமதி தோய் பொழில் பாச்சிலாசிராமத்து
                                                                                                 உறைகின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப் பழி செய்வதோ
                                                                                                 இவர் பண்போ 

மணிவாசகப் பெருமானும் தனது நீத்தல் விண்ணப்பம் (பாடல் 48) பதிகத்தின் ஒரு பாடலில் சிவபிரான் தன்னைக் கைவிட்டால், தான் சிவனடியான் என்று அனைவருக்கும் சொல்லி சிவபிரான் உதவி செய்யாது இருந்த நிலையை அவர்களுக்கு உணர்த்தி, அனைவரும் எள்ளி நகையாடச் செய்வேன் என்று கூறுவதை நாம் உணரலாம். 

தாரகை போலும் தலைத் தலை மாலைத் தழல் அரப் பூண்
வீர என் தன்னை விடுதி கண்டாய் விடில் என்னை மிக்கார்
ஆரடியான் என்னின் உத்தரகோச மங்கைக்கு அரசின்
சீரடியார் அடியேன் நின்னைச் சிரிப்பிப்பனே 

நால்வர் பெருமக்களால் பல பாடல்களில், பழியிலி என்றும், பழியிலான் என்றும் பழியில் புகழோன் என்றும் அழைக்கப்பட்ட சிவபிரான், அடியார்களுக்கு உதவி செய்யாமல் பழி பெற விரும்பமாட்டான் அல்லவா; மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும், அப்பர் பிரான், சுந்தரர், சம்பந்தர், மனிவாசகப் பெருமான் ஆகியோர் கேட்ட உதவிகளை மனமுவந்து செய்துள்ளான்.

முழங்கும் தழல் என்று நெருப்பிலிருந்து எழும் ஒலியினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். நெருப்புக்கு மூன்று குணங்கள் உள்ளன என்று பல திருமுறை பாடல்கள் கூறுகின்றன. ஒலி, ஒளி, ஊறு (உணர்ச்சி) என்பவையே அந்த மூன்று குணங்கள். ஆகாயம் ஒலி என்ற பண்புடனும். காற்று ஒலி, ஊறு என்ற இரண்டு பண்புகளுடனும், தீ, ஒலி, ஒளி, ஊறு மூன்று குணங்களுடனும் நீர் ஒலி, ஒளி, ஊறு, சுவை என்ற நான்கு பண்புகளுடனும், நிலம் ஒலி, ஒளி, ஊறு, சுவை, நாற்றம் என்ற ஐந்து பண்புகளுடனும் இருப்பதாக புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய ஆண்டானை அடியேனை என்று தொடங்கும் பதிகத்தின் ஐந்தாவது பாடலில் கூருகின்றார்.

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய்
           மிக்கு வீசும் கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த் தாழ் புனலின் நான்காய்த்
          தரணி தலத்து அஞ்சாகி எஞ்சாத் தஞ்சம்
அன்ன உருவை வான் பவளக் கொழுந்தை
         முத்தை வளரொளியை வயிரத்தை மாசு ஒன்றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்குவேளூரானைப்
          போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

இதே கருத்து திருவாசகத்தில் போற்றித் திருவகலிலும் சொல்லப்படுகின்றது.

    பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
    வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
    வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி 

பொழிப்புரை:

உடலுடன் கூடியுள்ள அனைத்து உயிர்களையும், எவரும் தப்பமுடியாதபடி குறிப்பிட்ட நேரத்தில் உடலிலிருந்து பிரித்தெடுக்கும் கடமையைக் கொண்டுள்ள கூற்றுவன், ஒரு அரசனுக்கு உரிய மிடுக்குடன் விரைவாக வந்து எனது உயிரினைப் பிரிக்கும் முன்னர், மலர் போன்ற உனது மெல்லிய பாதங்களின் அடையாளத்தை எனது தலையில் பொறித்து விடுவாயாக. ஒலிக்கும் நெருப்பினை உள்ளங்கையில் ஏந்தியுள்ளவனும் சத்திமுற்றத்து தலத்தில் உறைபவனும் ஆகிய சிவக்கொழுந்தே, அவ்வாறு நீ செய்யாவிடில் உனக்கு என்றும் நீங்காத பழி வந்து சேரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com