94. பூவார் கொன்றை - பாடல் 1

கட்டளை என்பது
94. பூவார் கொன்றை - பாடல் 1

பாடல் 1

பின்னணி:

இறைவன் அளித்த திருத்தாளத்துடன் சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தர், நேராக திருக்கோயில் சென்று வலம் வந்த பின்னர், தோணிபுரத்து பெருமானின் சன்னதியில் பாடிய திருப்பதிகம் இந்த பதிகம் ஆகும். திருப்பெருகு என்று சீர்காழி தலத்தின் செல்வ வளம் குறிப்பிடப் படுகின்றது. கட்டளை என்பது ஒரே பண்ணில் அமைந்த பாடல்களில் உள்ள யாப்பமைதி, தாளபேதம், சீர்களின் நீட்டல் குறுக்கல் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிந்து அதன் வகையில் பிரிக்கும் பாகுபாடு. அத்தகைய கட்டளை பேதங்கள், தக்கராகப் பண்ணில் அமைந்துள்ள ஞானசம்பந்தர் பாடல்களில் எட்டு இருப்பதாக கூறுவார்கள். அந்த எட்டு பிரிவுகளில் ஒரு வகையைச் சார்ந்தது இந்த பதிகம் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

    திருப்பெருகு பெருங் கோயில் சூழ வலம்
                           கொண்டருளித் திரு முன் நின்றே
    அருட்பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு
                           கட்டளையாக்கி அவற்றுள் ஒன்று
    விருப்புறு பொன் திருத் தோணி வீற்றிருந்தார்
                            தமைப் பாட மேவு காதல்
    பொருத்தம் உற அருள் பெற்றுப் போற்றி எடுத்து
                            அருளினார் பூவார் கொன்றை

மேற்கண்டவாறு பதிகத்தினை தொடங்கிய சம்பந்தர், பெருமான் தனக்கு அளித்த தாளத்தை, பாடலின் இசைக்கு தகுந்தவாறு பயன்படுத்தினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். அடுத்த நடை பெறப் பாடி என்று, இதற்கு முன்னர் அருளிய மடியில் வாளை என்று தொடங்கும் பதிகத்தினை ஒட்டி, அதே பண்ணமைதியும் தாள அமைதியும் வரும் வண்ணம் பாடினார் என்று உணர்த்துகின்றார். மழை பொழிவது போன்று, சரளமாக பாடல்கள் பாடியமையை உணர்த்தும் வண்ணம் ஞானக் கொண்டல் என்று கூறுகின்றார். கொண்டல்=மழை பொழியும் மேகம். சீர்காழி தலத்தில் அந்நாளில் வாழ்ந்த மக்கள் உய்யும் பொருட்டு பதிகங்கள் பாடினார் என்றும் சேக்கிழார் கூறுகின்றார்.

    எடுத்த திருப்பதிகத்தின் இசை திருத்தாளத்தினால்
               இசைய ஒத்தி
    அடுத்த நடை பெறப் பாடி ஆர்வம் உற்ற வணங்கிப் போந்து
               அலைநீர் பொன்னி
    மடுத்த வயல் பூந்தராயவர் வாழ மழ இளம்
               கோலத்துக் காட்சி
    கொடுத்து அருளி வைகினார் குறைவிலா நிறை ஞானக்
                கொண்டலார் தாம் 

பாடல் 1:

    பூவார் கொன்றை புரிபுன்சடை ஈசா
    காவாய் என நின்று ஏத்தும் காழியார் 
    மேவார் புரம் மூன்றும் அட்டார் அவர் போலாம்
    பாவார் இன் சொல் பயிலும் பரமரே

விளக்கம்:

மேவார்=பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்கள்; பயிலும் என்ற சொல்லுக்கு தங்கி இருக்கும், பொருந்தி இருக்கும், அமைந்து இருக்கும் என்றும் பொருள் உள்ளது. பாவார்=பாடல்களில் பொருந்திய; பூவார்=பூக்கள் பொருந்திய; பொன்சடை என்றார் சொல் புன்சடை என்று மருவியதாக சிலர் பொருள் கூறுகின்றனர். பரமர்=மேலானவர். சொற்களின் பொருளாக இருப்பவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய நின்ற திருத்தாண்டகத்தின் (6.94) மூன்றாவது பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் சொல்லாகவும் சொல்லின் பொருளாகவும் இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கல்=மலை: களறு=புல்லும் முளைக்காத நிலம், களர் நிலம்;. கான்=காடு; கால்=நீர்க்கால், வாய்க்கால்; புதர் என்ற சொல் புதல் என்று மருவியுள்ளது. சுலாவு=போக்குவரவு; கழி=கடற்கரையில் உள்ள நிலம்

    கல்லாகிக் களறாகிக் கானுமாகிக் காவிரியாய்க்
                      கால் ஆறாய்க் கழியுமாகிக்
    புல்லாகிப் புதலாகிப் பூடுமாகிப் புரமாகிப்
                      புரம் மூன்றும் கெடுத்தானாகிச்   
 சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளுமாகிச்
                     சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழலாகி
    நெல்லாகி நிலனாகி நீருமாகி நெடுஞ்சுடராய்
                     நிமிர்ந்தடிகள் நின்றவாறே

கல்லாகவும், களர் நிலமாகவும், காடாகவும், காவிரி போன்று பல நதிகளாகவும், நதிகளிலிருந்து பிரியும் வாய்க்கால்களாகவும், கடற்கரைக் கழிகளாகவும், புல்லாகவும், புதராகவும், சிறிய செடிகளாகவும், பெரிய நகரங்களாகவும், சொற்களாகவும், அந்த சொற்களுடன் பொருந்திய பொருளாகவும், பல வகையான உயிர்கள் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருக்கும் நிலையாகவும், உயிர்களின் போக்குவரவு நடைபெறும் இடமான உலகங்களாகவும், நிலனாகவும், நீராகவும். நிலனும் நீரும் இணைந்தால் உண்டாகும் நெல் போன்ற பயிர்களாகவும் உள்ள எம்பெருமான், நெடியசுடராக எங்கும் பரவி இருக்கும் நிலை மிகவும் வியக்கத்தக்கது. இவ்வாறு எங்கும் வியாபித்து இருக்கும் சிவபெருமான், பறந்துகொண்டு மற்றவர்களை வருத்திய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் அழித்த வல்லமை படைத்தவன். என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்தாகும்.

சொல் என்பது பொதுவாக வேதங்களில் காணப்படும் சொற்களை குறிக்கும். வேதங்களில் காணப்படும் சொல்லாகவும் அந்த சொற்களின் பொருளாகவும் உள்ள தன்மை, அப்பர் பிரானால் நாரையூர் தாண்டகத்தின் (6.74) முதல் பாடலில் கூறப்பட்டுள்ளது.

    சொல்லானைப் பொருளானைச் சுருதியானைச் சுடராழி
                           நெடுமாலுக்கு அருள் செய்தானை
    அல்லானைப் பகலானை அரியான் தன்னை அடியார்கட்கு
                           எளியானை அரண் மூன்று எய்த
    வில்லானைச் சரம் விசயற்கு அருள் செய்தானை
                            வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி ஏத்தும்
    நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை நாரையூர்
                            நன்னகரில் கண்டேன் நானே

சோற்றுத்துறை தலத்தின் அருளிய நேரிசைப் பாடலில் அப்பர் பிரான், சொற்களுக்கு நல்ல பொருளாக பெருமான் உள்ளார் என்று கூறும் பாடல் (4.41.3) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கல்=மேரு மலை; மேரு மலையை வில்லாக வளைத்து திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. இலம்=இல்லம் என்பதன் திரிபு. சிவபிரானை, என்றும் குறையாத அன்பினோடு அவரை இரவும் பகலும் உங்கள் உள்ளத்தில் தியானித்து, ஏகாந்தமாக இருந்து வழிபடுவீராக அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

    கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே
    எல்லியும் பகலும் முன்னே ஏகாந்தமாக ஏத்தும்
    பல்லில் வெண்தலை கையேந்திப் பல் இலம் திரியும் செல்வர்
    சொல்லு நன் பொருளும் ஆவார் திருச்சோற்றுத்துறையனாரே  

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.78.5) அப்பர் பிரான் சொல்லாகவும் பொருளாகவும் இருப்பவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அல்=இரவுப் பொழுது; பொதுவாக திருக்கோயில்களில் ஆறு கால பூஜைகள் செய்வது வழக்கம்; காலை நேரம், உச்சிக் காலம், மற்றும் இரவுக் காலம் ஆகிய நேரங்கள் தவிர, காலையும் பகலும் சந்திக்கும் நேரம் (காலசந்தி=காலை எட்டு மணிக்கு), பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரம் (சாயரட்சை மாலை ஐந்தரை மணி) மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் (மாலை இரண்டாம் கால பூஜை மாலை ஏழரை மணி) ஆகிய நேரங்களிலும் இறைவனுக்கு வழிபாடுகள் நடக்கின்றன. இவ்வாறு வழிபாடு நடக்கும் நேரங்களாக இறைவன் இருக்கின்றார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

    அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும்
                       சந்தியும் ஆனார் தாமே
    சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும்
                       சாத்திரமும் ஆனார் தாமே
    பல்லுரைக்கும் பாவெலாம் ஆனார் தாமே பழனை
                       பதியா உடையார் தாமே
    செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திருவாலங்காடு
                        உறையும் செல்வர் தாமே

அஞ்சைக்களத்தின் மீது தான் அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.4.7) சுந்தரர் இறைவனை நோக்கி அனைவரும் சொல்லும் சொற்களின் பொருளாக இருப்பவன் நீயே என்று கூறுகின்றார். சேரர்களின் தலைநகரின் ஒரு பகுதியாக இருந்த இந்த தலம் பண்டைய நாளில் கடல் வாணிகத்திற்கு மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது போலும். கடல் வாணிபத்தில் கொண்டு வரப்படும் விலையுயர்ந்த பொருட்களாக விளங்குபவனும் இறைவன் தான் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.  

    ஆக்கும் அழிவும் ஐயன் நீ என்பன் நான் சொல்லுவார்
                                    சொற்பொருள் அவை நீ என்பன் நான்   
    நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான்
                                     உன்னை நன்கு உணர்ந்தேன்
    நோக்கும் நெதியம் பல எத்தனையும் கலத்தில்
                                     புகப் பெய்து கொண்டேற நுந்தி
    ஆர்க்கும் கடல் அங்கரை மேல் மகோதை அணியார்
                                     பொழில் அஞ்சைகளத்து அப்பனே

பொழிப்புரை:

கொன்றை பூக்கள் பொருந்திய சுருண்டு முறுக்கேறிய மிருதுவான சடைகள் உடைய ஈசனே என்று சீர்காழி நகரில் வாழும் அடியார்கள் துதித்து போற்றும் வண்ணம், சீர்க்காழி நகரினில் உறையும் பெருமான், பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து வீழ்த்தியவர் ஆவார். அவரே பாடல்களில் உள்ள இனிய சொற்களில் பொருளாக கலந்து நிற்கும் மேலான தலைவர் ஆவார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com