94. பூவார் கொன்றை - பாடல் 7

முல்லை நிலத்தினை
94. பூவார் கொன்றை - பாடல் 7


பாடல் 7:


    கொல்லை விடை முன் பூதம் குனித்தாடும்
    கல்லவடத்தை உகப்பார் காழியார்
    அல்ல இடத்து நடந்தார் அவர் போலாம்
    பல்ல விடத்தும் பயிலும் பரமரே

விளக்கம்:

கல்லவடம்=பறை போன்ற ஒரு வகை தோலிசைக் கருவி: வடாரண்யம் என்பதற்கு ஆலங்காடு என்று பொருள். எனவே கல்லவடம் என்ற சொல் கல்லால மரத்தினை குறிப்பதாகவும் பொருள் கூறுவார்கள். அல்ல இடம்=பிறர் செல்ல தயங்குமிடம், சுடுகாடு; கொல்லை என்பது முல்லை நிலத்தினை குறிக்கும். முல்லை நிலத்திற்கு உரிய விலங்கு எருது என்பதால் கொல்லை ஏறு என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் திருமால். பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போர் புரியச் சென்றபோது, தனது காலினை தேர்த்தட்டில் வைத்த போது அவரது பாரத்தை தாங்க முடியாமல் தேரின் அச்சு முறிந்தது. அந்த தருணத்தில் திருமால், எருதின் வடிவம் எடுத்து பெருமானை தாங்கிய வரலாறு புராணத்திலும் பல திருமுறை பாடல்களிலும் கூறப்படுகின்றது. அந்த நிகழ்ச்சியினை நினைவூட்டும் வகையில், முல்லை நிலத்திற்கு உரிய தெய்வமாகிய திருமாலை வாகனமாக ஏற்றவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பாடலில் குறிப்பிட்டது போன்று பல திருமுறைப் பாடல்கள் கொல்லை விடை என்றும் கொல்லை ஏறு என்றும் பெருமானின் வாகனத்தை குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

சண்பை நகர் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.66.5) ஒன்றினில் கொல்லை எருது ஏறுபவன் என்று இறைவனை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மருப்பு=கொம்பு; சலமார் யானை=வஞ்சனை மிகுந்த யானை; நாளிகேரம்= தென்னை; தென்னை மரத்தின் பாளை யானையின் தந்தம் போன்று வெண்மையாக காணப்படும் சோலைகள் நிறைந்த நகரம் என்று சீர்காழியினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் நஞ்சினை உண்டு தேவர்களின் இடர் தீர்த்ததால் தான், அவர்களால் அமுதம் உண்ண முடிந்தது என்பதால் விடம் உண்டு தேவர்க்கு அமுதம் அருள் செய்தவன் என்று கூறுவதை நாம் உணரலாம். 

    கலமார் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த
    குலமார் கயிலைக் குன்றது உடைய கொல்லை எருது ஏறி
    நலமார் வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை 
    சலமார் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே 

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.97.6) கொல்லை ஏறது ஏறுவான் என்று இறைவனை சம்பந்தர் அழைக்கின்றார். தவறு, பொய் என்ற பொருள் தரும் அபத்தம் என்ற வடமொழிச் சொல் அவத்தம் என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது, இயங்கு-நடத்தல்; பிணக்கு=மாறுபாடு; துன்பமயமான வாழ்க்கையை நடத்தி, பெறுவதற்கு அறிய மனித வாழ்க்கையை வீணாக நடத்தி, உலக மாயைகளில் முரண்பாடுகளில் ஆழ்ந்து கிடக்கும் உலகத்தவர்களே, நீங்கள் எழுந்து புறப்பட்டு சீர்காழி தலத்தினை அடைந்து இறைவனை வழிபட்டு உய்வினை அடைவீர்களாக. நமக்கு அருள் புரியும் நோக்கத்துடன், நாம் அவனுக்கு பிச்சையாக இடும் மும்மலங்களையும் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பலி கேட்டு திரியும் இறைவனிடம் நமது மலங்களை சமர்ப்பித்து விட்டு உய்வினை அடைய வேண்டும் என்று இந்த பாடல் மூலம் சம்பந்தர் உணர்த்துகின்றார். பல் இல் வெண்தலை என்று பறிக்கப்பட்ட பிரமனின் தலையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.     

    அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர்
     எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழுமினோ 
     பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்
    கொல்லை ஏறது ஏறுவான் கோலக் காழி சேர்மினே

தோணிபுரம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.81.4) திருஞானசம்பந்தர் கொல்லை விடையேறு உடையவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். நா அணவு மாலை=அடியார்களின் நாவினில் பொருந்தும் சொல்மாலை; ஒல்லை=ஓசை; மாலை ஒல்லை உடையான்= அடியார்கள் பாடும் பாமாலைகளின் ஓசையை கேட்பவன்; அடையலார்=வேதநெறியினை அடையாத திரிபுரத்து அரக்கர்கள்; ஒள்ளழல்=ஒளிவீசும் நெருப்பு; அடைவு=சாக்கு, காரணம்; பெருமான் இடர்களை மிகவும் விரும்பத்துடன் தீர்த்து அருள்பவன். பெருமான், அடியார்கள் இடும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு அதனை ஒரு காரணமாக கொண்டு அவர்களின் இடர்களை தீர்ப்பதாக சம்பந்தர் கூறுகின்றார்.   

    கொல்லை விடை ஏறுடைய கோவணவன் நா அணவும் மாலை
    ஒல்லை உடையான் அடையலார் ஆரரணம் ஒள்ளழல் விளைத்த
    வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவிவளர்  தொண்டர்
    சொல்லை அடைவாக இடர் தீர்த்தருள் செய் தோணிபுரமாமே 

உசாத்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.33.2) சம்பந்தர் கொல்லை ஏறு என்று குறிப்பிடுவதை நாம் காணலாம். பல்லை ஆர் படுதலை, முன்னம் ஒரு காலத்தில் பற்கள் நிறைந்திருந்த தலை என்று பிரமனின் மண்டை ஓட்டினை சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். படுதலை=இறந்தவரின் தலை, கிள்ளி பறிக்கப்பட்டு உயிரின் தொடர்பு அறுக்கப்பட்டமையால் இறந்தவரின் தலை என்று கூறுகின்றார். நறை கமழ்=தேன் மணம் வீசும்

    கொல்லை ஏறுடையவன் கோவண ஆடையன்
    பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார்
    முல்லை ஆர் புறவணி முதுபதி நறை கமழ்
    தில்லையான் உறைவிடம் திருவுசாத்தானமே

பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.108.8) திருஞானசம்பந்தர் கொல்லை விடை உகந்தான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் இராவணனின் கயிலாய நிகழ்ச்சியை குறிப்பிடும் சம்பந்தர், மலையின் ஆட்டத்தால் நடுங்கிய உமையன்னை என்று குறிப்பிட்டு, அன்னையின் நடுக்கத்தை தீர்ப்பதற்காக, பெருமான் தனது கால் பெருவிரலை ஊன்றி அரக்கனது வலிமையை அடக்கினார் என்று கூறுகின்றார். மறுக=அஞ்ச; இசையில் வல்லவர்களே அடுத்தவர் பாடும் இசையினை இரசித்து மகிழ முடியும். சிவபெருமான் இசையில் வல்லவராக பல வகையான இசைகளையும் பாடுவராக இருந்தார் என்று குறிப்பிட்டு அரக்கனின் இசையை பாராட்டிய தன்மையை நமக்கு சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

    மல்கிய நுண்ணிடையாள் உமை நங்கை மறுக அன்று கையால்
    தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான்
    கொல்லை விடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன்
    பல்லிசை பாடலினான் உறை கோயில் பாதாளே   

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் (5.33) முதல் பாடலில் அப்பர் பிரான் பெருமானை கொல்லை ஏற்றினர் என்று குறிப்பிடுகின்றார். இறை பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கு நமக்கு தேவையானவை, மன வலிமையும் உடல் வலிமையும் என்பதை உணர்த்தும் வகையில் வலிமையுடன் பணி செய்ய வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அடுத்தவரின் கேலிப் பேச்சுகளையும், இகழ்வினையும் பொருட்படுத்தாமல், மனம் ஒன்றி ஈடுபட மனவலிமை அவசியம். திருக்கோயில் பிராகாரத்தை சுத்தம் செய்வதற்கும், கோயிலில் பயன்படுத்தும் பொருட்களையும், பெருமானுக்கு அணிவிக்கும் ஆடைகளையும் சுத்தமாக வைத்திருக்க உடல் வலிமையும் தேவை. எனவே தான், தனது நெஞ்சத்தை நோக்கி வலிமையுடன் பணி செய்வாயாக என்று கூறுகின்றார். 

     கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர்
    தில்லைச் சிற்றம்பலத்து உறை  செல்வனார்
    தொல்லை ஊழியர் சோற்றுத் துறையர்க்கே
    வல்லையாய்ப் பணி செய் மட நெஞ்சமே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பாடலில் (5.83.4) அப்பர் பிரான் கொல்லை மால்விடை ஏறிய கோ என்று குறிப்பிடுகின்றார். மால் என்று சொல்லுக்கு சிறப்பு வாய்ந்த என்று ஒரு பொருளும் திருமால் என்று ஒரு பொருளும் பொருந்தும், எனவே முல்லை நிலத்தில் வளரும் சிறப்பு வாய்ந்த இடபத்தினை வாகனமாகக் கொண்டவன் என்று ஒரு பொருளும், முல்லை நிலத்துக் கடவுளாகிய திருமாலை தனது வாகனமாக கொண்ட இறைவன் என்று மற்றொரு பொருளும் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமாகவே அமைந்து உள்ளன. எல்லி=இரவு; மாநடம் என்ற சொல்லுடன் கூடி வருவதால், எல்லி என்ற சொல்லுக்கு வெளிச்சம் அற்ற ஊழிக்காலம் என்று கொள்வது பொருத்தம். உயிருடன் பிணைந்துள்ள வினைகள் உயிர்கள் சோர்வடையும் வண்ணம் வருத்துவதே தங்கள் தொழிலாக கொண்டுள்ளன. ஆனால் இறைவனின் திருநாமத்தை நாம் சொன்னால், இறைவனின் அருளால் வினைகள் சோர்வடைந்து விடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.  வினைகள் சோர்வடைய வினைகளால் நமக்கு ஏற்படும் வருத்தங்களும் நீங்கும் என்பது இதனால் உணர்த்தப் படுகின்றது.   

    கொல்லை மால்விடை ஏறிய கோவினை 
    எல்லி மாநடம் ஆடும் இறைவனைக்
    கல்லினார் மதில் நாகைக் காரோணனைச் 
    சொல்லவே வினையாயின சோருமே

திருக்கோடிகா தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றனில் (5.78.3) அப்பர் பிரான் கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று இறைவனை அழைத்து புகழும் அடியார்களுக்கு ஊனம் ஏதும் இல்லை என்று கூறுகின்றார். ஒல்லை=விரைந்து; காலம் தாழ்த்தாது உடனே இறைவனை வழிபடுவதை ஒல்லை என்று உணர்த்துகின்றார் போலும்.

    முல்லை நன்முறுவல் உமை பங்கனார்  
    தில்லை அம்பலத்தில் உறை செல்வனார் 
    கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு 
    ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்றில்லையே

இடைமருதில் உறையும் ஈசனை கொல்லை ஏற்றினர் என்று அப்பர் பிரான் அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (6.17.3) காணலாம். காலம் பல கழித்தார்=காலத்தின் தாக்கத்தால் மாறுபாடு அடையாது என்றும் ஒரே உருவத்தராய் காலங்களைக் கடந்து இருப்பவர்; சேயார்=தொலைவில் உள்ளவர்; தம்மை அறியாத மாந்தர்களுக்கு தொலைவில் உள்ளவர்    

 ஆலநீழல் இருப்பர் ஆகாயத்தர் அருவரையின் உச்சியார்
               ஆணர் பெண்ணர்
    காலம் பல கழித்தார் கறைசேர் கண்டர் கருத்துக்குச்
               சேயார் தாம் காணாதார்க்குக்
    கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடுமழுவர்
               கோழம்பம் மேய ஈசர்
    ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி
                இடம் கொண்டாரே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் அப்பர் பிரான் பெருமானை கொல்லை ஏற்றினான் என்று குறிப்பிடுகின்றார். 

    மலை வளர்த்த மடமங்கை பாகத்தான் காண் மயானத்தான்
                        காண் மதியம் சூடினான் காண்
    இலை வளர்த்த மலர்க் கொன்றை மாலையான் காண் இறையவன்
                        காண் எறிதிரை நீர் நஞ்சு உண்டான் காண்
    கொலை வளர்த்த மூவிலைய சூலத்தான் காண் கொடுங்குன்றன்
                        காண் கொல்லை ஏற்றினான் காண்
    சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திருவாரூரன் காண்
                         அவன் என் சிந்தையானே

மழபாடி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.39.2) அப்பர் பிரான் பெருமானை கொல்லை விடையேறு கூத்தன் என்று அழைக்கின்றார். கொக்கிறகு=கொக்கின் உருவத்தில் இருந்த குரண்டாசுரன் என்ற அரக்கனை அழித்ததன் அடையாளமாக கொக்கின் இறகினை பெருமான் தனது முடியினில் அணிந்துள்ளார் என்பது கந்த புராண வரலாறு (பாடல் எண்: 8--9--64) இரிந்து ஓடுதல்=பயத்தால் நாலாபுறமும் ஓடுதல்; குரண்டம்=கொக்கு சிறை=இறகு;


    கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை
                              விடையேறும் கூத்தன் கண்டாய்
    அக்கு அரை மேல் ஆடலுடையான் கண்டாய் அனல்
                               அங்கை ஏந்திய ஆதிகண்டாய் 
    அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு
                               ஆரமுது ஆனான் கண்டாய்
    மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னு
                                மணாளன் தானே

பொழிப்புரை:

திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்ற போது முல்லை நிலத்திற்கு உரிய கடவுளாகிய திருமாலைத் தனது வாகனமாக ஏற்றவனும் பூதங்கள் வளைந்தும் நெளிந்து ஆடியவாறு கல்லவடம் என்ற இசைக்கருவியை இசைப்பதை விரும்புவனும், பிறர் செல்வதற்கு தயங்கும் இடமாகிய சுடுகாட்டில் தயக்கம் ஏதும் இன்றி நடப்பவரும் நடனம் ஆடுபவரும், அடியார்களுக்கு அருள் புரிவதற்காக உலகின் பல இடங்களுக்கும் செல்வானும் ரும் ஆகிய இறைவன் சீர்காழி தலத்தில் உறைகின்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com