94. பூவார் கொன்றை - பாடல் 11

திருஞான சம்பந்தர்
94. பூவார் கொன்றை - பாடல் 11


பாடல் 11:

    காரார் வயல் சூழ் காழிக்கோன் தனைச்
    சீரார் ஞான சம்பந்தன் சொன்ன
    பாரார் புகழப் பரவ வல்லவர்
    ஏரார் வானத்து இனிதா இருப்பரே

விளக்கம்:

கார்=நீர் காரார்=நீர்வளம் மிகுந்த; ஏரார்=அழகு பொருந்திய; திருஞான சம்பந்தரின் பதிகங்களை பாடும் அடியார்களை உலகத்தவர் புகழ்வார் என்று இங்கே கூறுகின்றார்.  ;

பொழிப்புரை:

நீர்வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சீர்காழி நகரில் உறையும் இறைவனை, சிறப்பு வாய்ந்த திருஞான சம்பந்தர் சொன்ன பாடல்கள் கொண்டு, உலகத்தவர் புகழும் வண்ணம் பாடி இறைவனை புகழ வல்லவர்கள், அழகிய முக்தி உலகம் சென்றடைந்து நிலையான இன்பத்துடன் இருப்பார்கள்.  

முடிவுரை:

தோடுடைய, நறவநிறை வண்டு, என்று தொடங்கும் இரண்டு பதிகங்கள் மற்றும் இந்த பதிகத்தில் காணப்படும் முதல் பத்து பாடல்களில் பெருமானின் பெருமை உணர்த்தப் படுகின்றது, இந்த பாடல்களில் பெருமானைத் தொழுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பதிகத்தின் கடைப்பாடலில், இந்த பதிகத்தினை சொல்லி பெருமானைத் தொழும் அடியார்கள் பெறுகின்ற பயன் கூறப்பட்டுள்ளது. பெருமானின் பெருமையை உணரும் மாந்தர்கள், எவரும் சொல்லாமலே, பெருமானைத் தொழுது பயன் அடைவார்கள் என்பது சம்பந்தரின் திருவுள்ளக் கருத்து போலும். நாம் அவரது திருவுள்ளக் கருத்தினை புரிந்து கொண்டு, பெருமானைத் தொழுது பயன் அடைவோமாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com