95. காரைகள் கூகை முல்லை  - பாடல் 1

செம்பனார் கோயில்
95. காரைகள் கூகை முல்லை  - பாடல் 1

பாடல் 1

பின்னணி:

செம்பனார் கோயில் எனப்படும் செம்பொன்பள்ளி தலத்திலிருந்து வெண்காடு செல்லும் வழியில் ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள தலம். புஞ்சை என்று மக்கள் வழக்கில் இன்று வழங்கப்படுகின்றது. கிடாரம் கொண்டான் என்றும் மக்களால் அழைக்கப்படுகின்றது. ஆனந்த தாண்டவபுரம் எனும் தலத்திற்கு அருகில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது (12 கி.மீ. தூரத்தில் செம்பொனார் கோயில் செல்லும் வழியில் உள்ள தலம். இந்நாள் வரை சீர்காழி கோலக்கா ஆகிய தலங்களையே தரிசித்த திருஞானசம்பந்தர் சென்ற முதல் தென் காவிரித் தலம் இது தான். ஞான சம்பந்தரின் தாய் பிறந்த தலம். சீர்காழியில் ஞானப்பால் உண்டு பதிகங்கள் பாடிய அதிசயத்தை கேள்விப்பட்டிருந்த நனிபள்ளி தலத்து அந்தணர்கள், வேத ஒலிகளின் பின்னணியில் மங்கல வாத்தியங்கள் முழங்க, சீர்காழி வந்தடைந்து திருஞானசம்பந்தரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள்; மேலும் அருகிலிருந்த ஊர்களிலிருந்தும் சிவத்தொண்டர்கள் வந்து சூழவே சீர்காழி நிலவுலகில் உள்ள கயிலாயம் போன்று தோற்றம் அளித்ததாக சேக்கிழார் கூறுகின்றார். அவ்வாறு திரண்டு வந்த தொண்டர்களுக்கு, சீர்காழி நகரத்தவர்கள் திருவமுது அளித்து சிறப்பித்தனர் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். சண்பை என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும். தங்களது ஊருக்கு வருகை புரியும் மனிதர்களுக்கு உணவு வழங்குதல் ஊரிலுள்ளோரின் கடமை என்பதை பெரியபுராணம் இங்கே உணர்த்துகின்றது.  

    வந்த திருத் தொண்டர்கட்கும் மல்கு
                                செழு மறையவர்க்கும் மற்றுள்ளோர்க்கும் 
    சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது
                                முதலான சிறப்பின் செய்கை 
    தந்தம் அளவினில் விரும்பும் தன்மையினால்
                                 கடனாற்றும் சண்பை மூதூர்
    எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி
                                 எவ்வுலகும் ஏத்து நாளில்

நனிபள்ளி தலத்தில் இருந்த வந்த மறையவர்கள், தங்கள் பதிக்கு சம்பந்தர் எழுந்தருளி ஆங்கே வீற்றிருக்கும் பெருமானை கும்பிடவேண்டும் என்ற தங்களது விருப்பத்தை பிள்ளையார் அவர்களிடம் தெரிவித்தார்கள் அவர்களது விருப்பத்தினை ஏற்றுக் கொண்ட சம்பந்தர், தோணிபுரத்து இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு, நனிபள்ளி மற்றும் அருகில் உள்ள தலங்கள் செல்ல விருப்பம் கொண்டார். இதுவே அவரது வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட இரண்டாவது தலயாத்திரை ஆகும். நனிபள்ளி தலம், திருஞான சம்பந்தரின் தாயாரின் பிறந்த ஊர் என்பதால், ஆங்கே வாழ்ந்து வந்த அவரது உறவினர்கள், சம்பந்தரின் திறமையை, இறைவன் அவருக்கு அருளிய தன்மையை தங்களது ஊரில் உள்ள மற்றவரும் அறிந்து கொண்டு சிவபெருமானை போற்ற வேண்டும் என்று விரும்பியதால், தங்களது தலத்திற்கு திருஞான சம்பந்தர் விஜயம் செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டார்கள் போலும்.       

தாமரை மலரின் உள்ளே இருக்கும் இதழ்கள் போன்று சிறியதும் மேன்மை வாய்ந்ததும் ஆகிய திருவடிகளை நிலத்தின் மீது பொருந்தும் வண்ணம் தனது மகன் நடப்பதையும், தனது மகனை தானலாது வேறொருவர் தாங்கிச் செல்வதையும் பொறுக்காத சிவபாத இருதயர், உமையம்மையால் பாலுடன் கலந்து ஞானம் ஊட்டப்பட்ட குழந்தையைத் தனது தோளின் மீது ஏற்றிக் கொண்டு செல்லலானார். அவ்வாறு செல்லும் போது, நனிபள்ளி தலத்தினை நெருங்கவே, மலர் சோலைகள் சூழ்ந்த இந்த பதி யாது என்று குழந்தை வினவ, தந்தையார் மிகழ்ச்சியுடன் குவளை மலர்கள் நிறைந்த வயல்களை உடைய நனிபள்ளி என்று கூறியவுடன், காரைகள் கூகை என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடினார். சிவபெருமான் உறையும் நகர் என்பதால், நனிபள்ளி நகரமே தொழுவதற்கு உரியது என்பதை உணர்த்தும் வகையில், சம்பந்தர் நகரத்தினைத் தொழுத செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது.  

    தேனலரும் கொன்றையினார்  திருநனிபள்ளியினைச்
                              சார செல்வார்
    வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது எப்பதி என்ன
                              மகிழ்ச்சி எய்திப்
    பானல் வயல் திருநனிபள்ளி எனத் தாதையார்
                              பணிப்பக் கேட்டு
    ஞான போனகர் நகர் தொழுது நற்றமிழ்ச்சொல் தொடைமாலை
                              நவிலல் உற்றார்    

தலம் வந்தடைந்த சம்பந்தர் பாலை நிலமாக இருந்ததை கண்டு மனம் வருந்தினார். பாலை நிலத்தை கண்டவுடன் அந்த காட்சி பரமன் நடமாடும் காட்டினை சம்பந்தருக்கு  நினைவூட்டியது போலும். இடுகாடு அமர்ந்த பிரான் என்று சிவபிரானை குறிப்பிடாமல், இடுகாட்டின் தன்மைகளை விளக்கி அத்தகைய இடுகாடு அமர்ந்த பிரான் என்று கூறுவது இங்கே நோக்கத்தக்கது. பாலை நிலத்தின் காட்சிகள் இந்த பதிகத்தின் முதல் பாடலில் முதல் இரண்டு வரிகளில் விவரிக்கப் பட்டுள்ளன. 
 
பாடல் 1:

    காரைகள் கூகை முல்லை களவாகை ஈகை படர் தொடரி
                 கள்ளி கவினிச்
    சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை
                 நகர் தான் 
    தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள
                வள்ளை துவள
    நாரைகள் ஆரல் வாரி வயன் மீதி வைகும் நனிபள்ளி
                போலும் நமர்காள்

விளக்கம்:

காரைகள் கூகை என்ற சொற்கள் தொடங்கி சுடுகாடு வரை உள்ள இடைப்பட்ட சொற்கள் பாலை நிலத்திற்கு உரிய பொருட்களை குறிப்பதை நாம் உணரலாம். இவை அனைத்தும் பாலை நிலத்தில் மிகவும் அதிகமாக காணப்படும் தாவரங்கள்; நமர்காள் என்று பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், தன்னுடன் சூழ வந்த அடியார்களை குறிப்பிட்டு அழைத்து சொல்லிய சொற்களாக இந்த பதிகத்தின் பாடல்கள் அமைந்துள்ளன. ஈகை=இண்டைச்செடி, ஒரு வகை முட்செடி; தொடரி=முட்செடி; கூகை என்பதற்கு கோட்டான் என்றும் ஒருவகை முட்செடி என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள்; கவின்=அழகு; பம்மி=அடர்ந்து படர்ந்தும்; தந்தையாரின் தோளில் இருந்தவாறு நனிபள்ளி தலத்தை நோக்கிய திருஞான சம்பந்தப் பெருமானுக்கு, வளம் குறைந்து பாலையாக இருந்த தன்மை, பெருமான் வாழும் சுடுகாட்டினை நினைவூட்டியது போலும். சுடுகாட்டில் வளரும் செடிகள் மற்றும் கொடிகளை  குறிப்பிட்டு இந்த பதிகத்தினை தொடங்குகின்றார். சுடுகாட்டின் சூழ்நிலையை உணர்த்திய வண்ணம் பதிகத்தின் தொடக்கப்பாடல் உள்ளது மிகவும் அரிதாகும். 

பொழிப்புரை:    

காரை வகைச் சார்ந்த முட்செடிகள், கூகை என்று அழைக்கப்படும் முட்செடிகள், முல்லை, களவாகை, இண்டைச்செடி, இண்டையைப் பற்றி படரும் முட்செடி, கள்ளிச்செடி, அழகினைத் தரும் சூரை செடிகள், முதலிய முட்செடிகள் அடர்ந்து படர்ந்தும் முற்றியும் வளர்ந்து காணப்படும் சுடுகாட்டில் உறையும் சிவபெருமான் உறையும் இடம் சோலைகள் சூழ்ந்த நனிபள்ளி ஆகும். நீர்நிலைகளில் காணப்படும் ஆரைச் செடிகளை, தேரைப் பூச்சிகள் மிதித்து தள்ள ஆங்கே காணப்படும் வாளை மீன்கள் துள்ளுகின்றன. அதனால் அருகில் உள்ள சேற்றில் படர்ந்த வள்ளைக் கொடிகள் துவண்டு ஒதுங்க, அதனடியில் இருந்த ஆரல் மீன்கள் வெளிப்பட அவற்றை நாரைகள் கொத்தித் தின்னுமாறு அமைந்துள்ள வயல்களில் எருமை மாடுகள் மகிழ்ந்து படிகின்றன. அத்தகைய தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com