104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 7

இறைவன் சன்னதியில்
104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 7


பாடல் 7:

    அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்து
       அருளி அமரர் வேண்ட
    நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தில் ஒன்று
        அறுத்த நிமலர் கோயில்
    திறம் கொண் மணித் தரளங்கள் வரத் திரண்டு
        அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள்
    முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி
         முத்து உலைப் பெய் முதுகுன்றமே

விளக்கம்:

தரளம்=முத்து; மணி=மாணிக்கக் கற்கள்; கிளரும்=விளங்கித் தோன்றும்; திறம் கொள்= முதிர்ந்து தரமான நிலையில் இருக்கும் நிலை; சிறிய சொப்பு கிண்ணங்களை வைத்துக் கொண்டு சிறுமியர்கள், தங்களை இல்லத்தரசிகளாக பாவித்துக் கொண்டு சமையல் செய்வது போன்று விளையாடுவது பண்டைய நாளிலும் பழக்கமாக இருந்தது போலும். நாகரீகம் பெருகிய இந்நாளில், இத்தைகைய விளையாடல்கள் அரிதாக மாறி, கணினியில் பல விளையாட்டுகளை இருபாலரும் விளையாடும் இந்நாட்களில் இத்தகைய விளையாட்டுகளை நாம் கற்பனையில் தான் காணமுடியும். நாமும் நமது சிறு வயதினில், சிறுமியர்கள் மணலினை அரிசியாக பாவித்து விளையாடுவதை கண்டிருக்கின்றோம். செல்வச் செழிப்பு மிகுந்திருந்த முதுகுன்றத்தில் பண்டைய நாளில் சிறுமியர்கள் முத்தினை அரிசியாக பாவித்து விளையாடியதாக ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இந்த செய்தி, பண்டைய நாட்களில் தலத்தினில் வாழ்ந்து வந்த அடியார்கள் இறைவனை வணங்கி அவனது அருளினால் செல்வச் செழிப்புடன் இருந்ததை நாம் அறிகின்றோம். இன்றும் நாம் கடற்கரை மற்றும்,. ஆற்றங்கரையில் சிறுவர்கள் மணல் கொண்டு வீடு கட்டி விளையாடுவதை காண்கின்றோம். இந்த செயலை சிற்றில் கட்டு விளையாடுவது என்று பண்டைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி நமக்கு திருக்காளத்தி தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் முதல் பாடலை (3.69.1) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் வேடுவப் பெண்கள், தாம் அணிந்திருந்த பொன்னால் செய்யப்பட்டதும் இரத்தினங்கள் பதிக்கப் பெற்றதும் ஆகிய அணிகலன்களை கவண்கற்களாக வீசி தினைகளை கவர வந்த பன்றிகள் மான்குட்டிகள் கிளிகள் ஆகியவற்றை விரட்டினார்கள் என்று சம்பந்தர் கூறுகின்றார். இந்த நிகழ்ச்சி காளத்தி தலத்தின் செல்வச் செழிப்பினை நமக்கு உணர்த்துகின்றது. வாதை பட= வருந்தும் வண்ணம்;

    வானவர்கள் தானவர்கள் வாதை பட வந்ததொரு மாகடல் விடம்
    தான் அமுது செய்து அருள் புரிந்த சிவன் மேவு மலை தன்னை வினவில்
    ஏனம் இளமானினொடு கிள்ளை தினை கொள்ள எழிலார் கவணினால்
    கானவர் தம் மாமகளிர் கனகமணி விலகும் காளத்தி மலையே`

இந்த பாடலில் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பிரமனின் ஐந்து சிரங்களில் ஒன்றினை பெருமான் அறுத்ததாக ஞானசம்பந்தர் கூறுவது நமக்கு திருவையாறு தலத்தின் மீது அவர் அருளிய பாடலை (1.120.3) நினைவூட்டுகின்றது. தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமான் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை அறுத்தார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.   

    வரிந்த வெஞ்சிலை பிடித்து அவுணர் தம் வளநகர்
    எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் 
    இருந்தவன் சிரமது இமையவர் குறை கொள
    அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே 

கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (3.48.6) திருஞானசம்பந்தர், பிரமனின் தலை கொய்யப்பட்டது தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி என்று கூறுகின்றார். அருத்தி=விருப்பத்துடன்; மற்றவர்கள் நகைக்கும் வண்ணம் மண்டை ஓட்டினில் உணவு பிச்சையாக ஏற்பது பெருமானின் தகுதிக்கு உரிய செயலா என்று கேள்வி இங்கே கேட்கப்படுகின்றது. மேலும் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் பெருமான், அந்த உயிர்களுடன் கலந்து நின்ற தன்மையினை தனக்கு விளக்கம் அளித்து உணர்த்துமாறு தலத்தில் உள்ள அடியார்களிடம் சம்பந்தர் விண்ணப்பிக்கின்றார். புயல் பொழிந்து இழி வானோர் என்று தேவர்கள் மழை பொழியச் செய்து நன்மை புரிவதாகவும் இங்கே கூறுகின்றார்.   

    இயலுமாறு எமக்கு இயம்புமின் இறைவன்னுமாய் நிறை செய்கையைக்
    கயல் நெடும் கண்ணினார்கள் தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன்
    புயல் பொழிந்து இழி  வான் உளோர்களுக்காக அன்று அயன் பொய்ச்சிரம்
    அயல் நகவ்வது அரிந்து மற்று அதில் ஊண் உகந்த அருத்தியே

தேவர்கள் வேண்ட என்று இந்த மூன்று பாடல்களிலும் குறிப்பிடப்பட்டாலும் எந்த தருணத்தில் தேவர்கள் அவ்வாறு வேண்டினார்கள் என்று தெளிவான குறிப்பு இந்த பாடல்களில் காணப்படவில்லை. திருவானைக்கா தலத்தில் நடைபெறும் பஞ்சபிராகர விழாவின் விவரங்கள் சித்திரமாக இறைவன் சன்னதியில் உள்பிராகாரத்தில் தீட்டப் பட்டுள்ளது. இந்த விழாவினுக்கு அடிப்படையாக கூறப்படுகின்ற சம்பவத்தில் திலோத்தமை பிரமன் குறித்து பெருமானிடம் தொடுத்த புகாரின் அடிப்படையில் பிரமனின் ஐந்தாவது தலை கொய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரு முறை பிரமன் தான் படைத்த படைப்புகளின் நேர்த்தி பற்றி தானே வியந்து கொண்டு கர்வம் மேலோங்க செயல்படலானார். இந்த கர்வம், அவரை அவர் படைத்த ஒரு அழகான பெண்ணின் மீது, திலோத்தமை மீது, அதிகமான அன்பு வைக்கத் தூண்டியது. அந்த அன்பு நாளடைவில் காதலாக மாற, பிரமனால் தனது படைப்புத் தொழிலில் முன் போல் கவனம் செலுத்த முடியவில்ல. அவர் திலோத்தமை எங்கு சென்றாலும் அந்த திசை நோக்கி பார்த்து ரசிப்பதில் கொண்டிருந்த ஆர்வமும் கவனமும், அவரது படைப்புச் தொழிலில் வெளிப்படவில்லை.  இந்த கவனக் குறைவினால் அவரது படைப்புகள் குறைந்த நாட்களில் இறக்கும் படியாகவும், படைப்புகள் அலங்கோலமாகவும் மாறின. திலோத்தமையும் இறைவனிடம் தான் எங்கு சென்றாலும் தன்னைப் பின் தொடர்ந்து பிரமன் பார்ப்பது  தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக இறைவனிடம் கூறுகின்றாள். தனது தவறினை உணர்ந்த பிரமன் திருவானைக்கா தலம் வந்தடைந்து இறைவனை வேண்ட இறைவன் உமை அம்மையுடன் அவனுக்கு காட்சி கொடுத்தார். அவ்வாறு காட்சி கொடுத்த சமயத்தில் இறைவன் உமை அம்மை வேடமும், உமை அம்மை இறைவன் வேடமும் அணிந்து வந்தனர். மாறு வேடங்களில் வந்த காரணம் யாது என்று பிரமன் திகைத்து நிற்க, சிவபிரான் தனது படைப்பின் அழகில் மனம் மயங்கிய பிரமன், அவனது படைப்பை விட அழகில் விஞ்சிய இறைவியின் அழகில் மதி மயங்கி மறுபடியும் தவறு செய்யக்கூடாது என்பதற்காகத் தான் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று தெளிவுபடுத்தினார். அப்போது தான் இறைவன் மற்றும் இறைவியின் அழகு, தனது படைப்புகளின் அழகினை விடவும் பல மடங்கு உயர்ந்தது என்பதை பிரமன் உணர்ந்தார். இதனால் தனது படைப்பின் மீது பிரமனுக்கு இருந்த கர்வமும் ஒழிந்தது. மேலும் தனது தொழிலில் எந்த விதமான கவனச் சிதைவும் இன்றி ஈடுபடுவதாகவும் முடிவு செய்தார். மாற்று கோலத்தில் வரும் இறைவனும் இறைவியும் ஐந்து பிராகாரங்களை சுற்றி உலா வருவதால் பஞ்ச பிராகார விழா என்ற பெயர் பெற்றது. படைப்புத் தொழில் சரிவர நடக்காமையால் தேவர்களும் திலோத்தமையுடன் சேர்ந்து கொண்டு பெருமானிடம், பிரமனின் கர்வத்தை குறைக்குமாறு வேண்டினரோ என்று, இந்த பாடல்களில் உள்ள குறிப்பு உணர்த்துகின்றது போலும். .    
           
பொழிப்புரை:

ஆல மரத்தின் கீழ் அமர்ந்தவாறு அறநெறிகள் குறிப்பிடப்படும் நான்கு வேதங்களின் பொருளை சனகாதி முனிவர்களுக்கு தெளிவுபட உணர்த்தியவனும், தேவர்களின்  வேண்டுகோளுக்கு இணங்கி செம்மை நிறத்துடன் பொலியும் தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள பிரமனின் ஐந்து சிரங்களில் ஒன்றினை அறுத்தவனும், இயல்பாகவே மலங்களிளிருந்து விடுபட்டவனும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோயில் முதுகுன்றம் தலத்தில் உள்ளது. மணிமுத்தாறு நதி அடித்துக் கொண்டு வரும் தரமான முத்துக்களும் மணிகளும் குவியல்களாக வருவதைக் கண்ணுற்ற அழகிய வேடுவச் சிறுமிகள்  அவற்றை முறங்களில் வாரிக் கொண்டு வந்து மணிகளை புடைத்து நீக்கி மீதமுள்ள முத்துகளை அரிசியாக பாவித்து உலையில் இட்டு சமையல் செய்வது போன்று விளையாடும் தலம் முதுகுன்றமாகும். இந்த தலமே பெருமான் வீற்றிருக்கும் தலமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com