104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 10

அரிதான பாடலாகும்
104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 10

பாடல் 10:

    மேனியில் சீவரத்தாரும் விரிதரு தட்டு உடையாரும்
        விரவலாகா
    ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து
         அங்கு உய்மின் தொண்டீர்
    ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது உணர்ந்து
         ஐம்புலன்கள் செற்று  
    மோனிகளாய் முனிச் செல்வர் தனித்து இருந்து தவம்
         புரியும் முதுகுன்றமே

விளக்கம்:

சீவரம்=துவராடை; தட்டு=ஓலைத் தடுக்கு; இந்த பாடலில் பெருமானைப் பற்றிய குறிப்பு ஏதும் நேரிடையாக காணப்படவில்லை. தவம் செய்யும் முனிவர்கள் வாழும் இடம் என்று தலத்தின் சிறப்பே இங்கே கூறப்படுகின்றது. இத்தகைய பாடல் மிகவும் அரிதான பாடலாகும். விரி தரு தட்டு என்று குறிப்பிட்டு, தாம் செல்லும் இடமெல்லாம் சமணர்கள் ஓலைப் பாயினை சுருட்டி கையில் இடுக்கிக் கொண்டு சென்ற தன்மையை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பின்னிரண்டு அடிகளில் ஞானிகளின் தன்மையை குறிப்பிடும் சம்பந்தர், அவர்கள் எவ்வாறு புத்தர் மற்றும் சமணர்களுடன் மாறுபட்டுளனர் என்று குறிப்பாக உணர்த்துகின்றார். ஐம்புலன்களை அடக்கியவர்கள் ஞானிகள்; புலன்களை அடக்காமல் உடல் வளர்ப்பதே குறிக்கோளாக கொண்டவர்கள் புத்தர்களும் சமணர்களும். சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை ஏற்றுக்கொண்டு அவர்களை பின்பற்றி நடந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்பது உணர்ந்து கொண்டு செயல்படுவீர் என்ற அறிவுரையையும் இங்கே சம்பந்தர் வழங்குகின்றார். பதிகத்தின் பல பாடல்களில் தலத்தின் இயற்கை வளத்தினை உணர்த்திய சம்பந்தர் இந்த பாடலில், சிறப்பு வாய்ந்த முனிவர்கள் வாழ்ந்த தலம் என்று குறிப்பிடுகின்றார். செல்வச் செழிப்பு வாய்ந்த முதுகுன்றம் கல்விச் சிறப்பும் இறை உணர்வில் சிறந்தும் விளங்கிய தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.          

பொழிப்புரை:

தங்களது உடலில் துவராடை புனைந்த புத்தர்களும், உறங்கும் பொழுது விரிக்கப்பட்டு பாயாக பயன்படும் ஓலைத் தடுக்கினை சுருட்டி தங்களது கைகளில் இடுக்கிக் கொண்டு செல்லும் சமணர்களும், நண்பர்களாக ஏற்றுக்கொண்டு பழகுவதற்கு தகுதியற்றவர்களாய், ஊனம் உடையவர்களாக தங்களது உடலினை மட்டும் வளர்த்துக் கொள்பவர்களாக உள்ளனர். எனவே அவர்களது சொற்களை ஏற்றுக் கொள்ளலாகாது என்பதை உங்களது மனதினில் உணர்ந்து அவர்களது சொற்களை ஒதுக்கி விட்டு உய்யும் வழியினை, தொண்டர்களே நீங்கள்  நாடுவீர்களாக. ஞானிகளாக உள்ளவர்கள் நான்கு வேதங்களையும் முறையாக ஓதி பொருளினை முற்றிலும் புரிந்து கொண்டு, தங்களது ஐந்து புலன்களையும் வென்று, ஏதும் பேசாமல் மௌனிகளாக தனியே இருந்து தவம் புரிந்து இறைவனின் தன்மைகளையும் பண்புகளையும் அறிந்த செல்வர்களாக விளங்கும் முனிவர்களாக வாழும் தலம் முதுகுன்றமாகும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com