104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 11 

மணிமுத்தாறு நதியால்
104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 11 

பாடல் 11:

    முழங்கொலி நீர்முத்தாறு வலம் செய்யும் முதுகுன்றத்து
         இறையை மூவாப்
    பழம் கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே
         பதியாக் கொண்டு
    தழங்கெரி மூன்று ஓம்பும் தொழில் ஞானசம்பந்தர்
         சமைத்த பாடல்
    வழங்கும் இசை கூடும் வகை பாடும் அவர் நீடுலகம்
         ஆள்வர் தாமே

விளக்கம்:

பழமலையை குறித்து பாடிய சம்பந்தருக்கு, பல ஊழிகளைக் கடந்து பழம்பதியாக திகழும் சீர்காழி தலத்தின் தன்மை நினைவுக்கு வந்தது போலும். அந்த தன்மையையும் இந்த பாடலில் அவர் குறிப்பிடுகின்றார். எரி மூன்று=ஆகவனீயம், காருகபத்யம் மற்றும் தக்ஷிணாக்னியம் என்பன. முழங்கொலி=ஆரவாரம் மிகுந்த ஓசை; கழுமலம் என்பது சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, சீர்காழி, கொச்சைவயம் மற்றும் கழுமலம் என்பன சீர்காழியின் பன்னிரண்டு பெயர்கள். சீர்காழியினை குறிப்பிடும் சம்பந்தர் மூவாத தலம் என்று கூறுகின்றார். மூவா என்ற சொல் அழிவற்ற என்று பொருளில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது.      

பொழிப்புரை:

மிகுந்த ஆரவாரத்துடன் பாயும் மணிமுத்தாறு நதியால், வலம் வந்து பணிந்து இறைஞ்சப் படும் முதுகுன்றத்து இறைவனை, பண்டைய நாளிலிருந்து பன்னிரண்டு பெயர்களால் அழைக்கப்படுவதும் அழிவற்ற தன்மையை உடையதும் ஆகிய கழுமலம் தலத்தினை தனது ஊராகக் கொண்டவனும், ஒலி எழுப்பிய வண்ணம் போற்றப்படும் மூன்று வகையான தீக்களை பேணி வளர்க்கும் குலத்தில் வந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் உண்டாக்கிய இந்த பதிகத்தினை இசை பொருந்தி கூடும் வண்ணம் பாடி இறைவனை வழிபடும் அடியார்கள், இந்த உலகத்தினை நீண்ட காலம் ஆள்வார்கள்.      

முடிவுரை:

முதுகுன்றம் தலத்தில் பல நாட்கள் தங்கி பல பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தர் இங்கிருந்து பெண்ணாகடம் தலத்திற்கு செல்கின்றார் என்று நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். மேகராகக் குறிஞ்சி பண்ணில் மொத்தம் ஏழு பதிகங்கள் அமைந்துள்ளன. இந்த ஏழு பதிகங்களை, பக்தியுடன் முறையாக பாடினால் மழை பொழியும் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.  

இந்த பாடலில் தலத்து இயற்கை காட்சிகள் படம் பிடித்தது போன்று மிகவும் அழகாக ஞான சம்பந்தரால் உணர்த்தப் படுகின்றன. திரு கி.வா.ஜா அவர்களின் கூற்றுப்படி, தேவாரப் பதிகங்கள் என்னும் வாகனத்தில் ஏறிக் கொண்டு இறைவனின் அருள் பெறுவதற்கும், தமிழ்நாடு எங்கும் மாற்றுச் சமயங்களின் ஆதிக்கதத்தினைக் குறைத்து சிவமணம் கமழச் செய்யவும் ஊர் ஊராக சென்றவர்கள் அப்பர் பிரானும் திருஞானசம்பந்தரும். இவர்கள் இருவரில் சிறியவராகிய திருஞானசம்பந்தர், இன்றைய இரயில் பயணங்களில் ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்க்கும் குழந்தை போன்று, செல்லும் வழியில் உள்ள இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே சென்றதின் தாக்கம், அவரது பாடல்களில் இயற்கை வருணனையாக வெளிப்படுகின்றது போலும். இரயில் பயணம் மேற்கொள்ளும் முதியவர்கள் இருக்கையில் அமர்ந்தவுடன் செய்தித் தாளையோ புத்தகத்தையோ பிரித்து அதில் ஆழ்ந்து விடுவது போன்று அப்பர் பிரான், பயணத்திலும் இறை சிந்தைனையில் ஆழ்ந்திருந்தார் போலும். 

பதிகத்தின் முதல் பாடலில் மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை கரை கொணர்ந்து சேர்க்கும் முத்தாறு நதி பாயும் தலம் என்றும், இரண்டாவது பாடலில் பூக்களின் நறுமணத்தையும் பழங்களின் நறுமணத்தையும் நீரின் குளிர்ச்சியையும் வாரிக் கொண்டு வந்து தென்றல் உலவும் முற்றங்கள் கொண்ட வீடுகளை உடைய தலம் என்றும், முக்கனிகளின் சாறு ஒழுகி சேறு உலராத வண்ணம் கனிகள் நிறைந்து காணப்படும் சோலைகள் நிறைந்த தலம் என்று மூன்றாவது பாடலிலும், நான்காவது பாடலில் மழையினைக் கண்டு அச்சம் கொண்ட பெண் குரங்கு மூங்கில் மரத்திலிருந்து அவசரமாக கீழே இறங்கி தனது குட்டியுடன் உள்ளே புகும் குகையினை உடைய தலம் என்றும் யானைகள் தங்களது குட்டிகளுக்கு இரை தேடும் சாரலினை உடைய தலம் என்றும், மிகுந்த நீரினை கரைகளில் மோதி நெற்கதிர்களையும் கழுநீர் மற்றும் குவளைக் கொடிகளை சாய்த்தும் தாமரை மொட்டுகளை கரையினில் மோத வைத்து மலர வைக்கும் முத்தாறு நதி உடைய தலம் என்று ஆறாவது பாடலிலும், வேடுவச் சிறுமிகள் முத்துக்களை அரிசியாக பாவித்து உலையில் இடுவது போன்று விளையாடும் தலம் என்று ஏழாவது பாடலிலும், தலத்தின் செழிப்பையும் நீர் வளத்தினையும் இந்த பதிகத்தின் பாடல்களில் சம்பந்தர் உணர்த்துகின்றார். பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் ஊழிகளைக் கடந்த தலம் என்று தலத்தின் சிறப்பை உணர்த்தும் சம்பந்தர், பத்தாவது பாடலில் இந்த தலம் முனிவர்கள் தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக விளங்கியது என்றும் கூறுகின்றார். முனிவர்கள் தவம் செய்த இடம் சென்று வணங்குவதே பெரிய புண்ணியம் என்று பெரியோர்கள் கூறுவார்கள். நாமும் முதுகுன்றம் சென்று, அந்த தலத்தினை வணங்கி, முதுகுன்றத்தை வலம் வந்து, முதுகுன்றத்து முதியவனை வணங்கி பதிகங்கள் பாடி வாழ்வினில் உய்வினை அடைவோமாக.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com