105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 1

கோயிலினை பெருங்கோயில்
105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 1

பாடல் 1

பின்னணி

முதுகுன்றம் தலத்தில் பல நாட்கள் தங்கியிருந்து பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், அடுத்து பெண்ணாகடம் தலம் செல்வதற்கு விருப்பம் கொண்டவராக, முதுகுன்றத்து பெருமானை வணங்கி விடை பெற்றுக் கொண்ட பின்னர் பெண்ணாகடம் சென்று அடைந்தார் என்று நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். சென்னை திருச்சி இரயில் பாதையில், முதுகுன்றம் தலத்திற்கு (விருத்தாச்சலத்திற்கு) அருகில் உள்ள இரயில் நிலையம். பெண்ணாகடம். இந்த தலம் விருத்தாசலம் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தொழுதூரிலிருந்து பதினைந்து கி.மீ. தொலைவில் உள்ள தலம். தலத்தில் உள்ள திருக்கோயில் தூங்கானைமாடம் என்று அழைக்கப்படுகின்றது. சம்பந்தர் தனது பதிகத்தில் ஊரின் பெயரையும் திருக்கோயிலின் பெயரையும் இணைத்து சொல்வதை நாம் காணலாம். மூலவர் விமானம், படுத்திருக்கும் யானையின் பின்புறம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதனால் தூங்கானை மாடம் என்ற பெயர் வந்தது. பெண் (தேவ கன்னியர்கள்), ஆ (காமதேனு பசு) மற்றும் கடம் (ஐராவதயானை) வழிபட்டமையால் இந்த தலத்திற்கு பெண்ணாகடம் என்ற பெயர் வந்தது. இந்த பெயர் நாளடைவில் பெண்ணாடம் என்று மருவியுள்ளது. இறைவனின் திருநாமம் சுடர்கொழுந்து நாதர். இந்த பெயர் சேக்கிழால் குறிப்பிடப்படுவதை நாம் உணரலாம்.

    ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து
         அருமறை ஓசை
    ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற
        பெருந்தனிப் பரஞ்சோதிப்
    பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு பணிவுற்று பரவு
        சொல் தமிழ் மாலை
    தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் இசைப்
         பதிகமும் தெரிவித்தார்.

இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பல பாடல்களில், உயிருக்கு ஏற்பட்டுள்ள தீங்கினை நீக்கிக் கொள்ள விரும்பும் மனிதர்கள், தூங்கானை மாடத்து இறைவனை வணங்கி பயன் பெறலாமென்று சம்பந்தர் அறிவுரை கூறுவதை உணர்த்தும் முகமாக தீங்கினை நீங்குவீர் தொழுமின்கள் என்று சம்பந்தர் இசைப் பதிகம் பாடியதாக சேக்கிழார் கூறுகின்றார். அந்தணர்கள் பெருமானை வேத கீதங்கள் ஓதி புகழ்வதாலும், தங்களது இல்லங்களில் வேதங்கள் ஒதி பயில்வதாலும் வேதவொலி நிறைந்து காணப்படும் தலம் என்று சேக்கிழார் கூறுகின்றார். திருஞான சம்பந்தரும் தனது பதிகத்தின் முதல் பாடலில் இந்த செய்தியை கூறுவதை நாம் காணலாம்  மூவர் பெருமானார்கள் அருளிய தேவார பதிகங்களை, பெரிய புராணத்தில் பல இடங்களில் குறிப்பிடும் சேக்கிழார், அந்த பதிகங்களை குறிப்பிடுகையில், அந்தந்த பதிகத்தில் உள்ள சொற்களைக் கையாண்டும், சில தேவாரப் பாடல்களின் பொருளை பெரிய புராண பாடல்களில் உணர்த்தியும், பதிகங்களின் பெயர்களை குறிப்பிட்டும் கூறுவது, தேவாரப் பதிகைகள் எந்த அளவுக்கு சேக்கிழாரின் மனதினை ஈர்த்தன என்பதை நமக்கு உணர்த்துகின்றது.         

பாடல் 1:

    ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்தாய
        வாழ்க்கை ஒழியத் தவம்
    அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி
        நிழற்கீழ் ஆளாம் வண்ணம்
    கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழுமனைகள்
        தோறும் மறையின் ஒலி
    தொடங்கும் கடந்தை தடங்கோயில் சேர்
        தூங்கானை மாடம் தொழுமின்களே 

விளக்கம்:

பிணி=வினைகளும் வினைகளால் வரும் துன்பங்களும்; முந்தைய பிறவிகளில் நாம் தேடி சேர்த்துக் கொண்ட வினைகளின் தன்மைக்கு ஏற்ப, இந்த பிறவியில் நமக்கு உடல் அமைகின்றது. உடலுடன் சேர்ந்த உயிரும் சிறிது சிறிதாக வினைகளின் பயனை, இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்து கழிப்பதை நாம் அறிவோம். பிறவி எடுத்த நாளிலிருந்து இந்த பிறவியினில் நாம் அனுபவித்து கழிக்க வேண்டிய வினைகள் என்று இறைவனால் நிர்ணயிக்கப் பட்ட வினைகள் இந்த உயிருடன் பிணைந்து இருக்கின்றன. ஆனால் இந்த வினைகள் அனைத்தும் ஒரே நாளில் அவற்றின் பலனை தருவதில்லை. ஒடுங்கி இருக்கும் வினைகள், அந்த வினைகளால் நாம் அனுபவிக்க ஏற்ற காலம் வரும் வரை வெளிப் படுவதில்லை. தக்க காலம் வரும் வரை காத்திருக்கும் வினைகள், உரிய காலம் வந்ததன் பின் வெளிப்பட்டு நமக்கு இன்பமும் துன்பமும் அளிக்கின்றன. இவ்வாறு உள்ள தன்மையை ஒடுங்கும் பிணி என்று சம்பந்தர் கூறுகின்றார். கிடங்கு=அகழி; சுலாவி=சுற்றி; 

கேடு=கேட்டுப் போவது; பிறவியுடன் இணைத்து சொல்லப் பட்டுள்ளமையால் பிறவிக்கு கெடுதியை உண்டாக்கும் இறப்பு. இந்த சொல் இறப்பினை மட்டும் குறிப்பிடாமல் நாம் இறப்பதற்கு முன்னர் அனுபவிக்க வேண்டிய பல துன்பங்களையும் குறிப்பிடுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். தவம் அடங்குதல்=தவத்தில் அடங்கி நிற்றல்; தவமாகிய சாதனத்தில் அழுந்தியிருத்தல்; இந்த பாடலில் தூங்கானை மாடத்து பெருமானின் திருவடி நிழலின் கீழே ஆளாகி நிற்க வேண்டும் என்று கூறுகின்றார். இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.90.3). சொல்வதை நினைவூட்டுகின்றது.   

   ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
    மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
    தோளாத சுரையோ தொழும்பர் செவி
    வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

ஆளாதல்=சிவபிரானுக்கு அடியவராக இருத்தல். மீளா ஆள்=என்றும் மாறாத அடிமைத் திறம். மெய்ம்மை=உண்மையான பரம்பொருள். தோளாத=உட்குழி இடப்படாத சுரைக் குடுக்கை. தொழும்பர்=அடிமை, இங்கே அடிமை நிலையில் இருக்கும் தாழ்ந்தவர் என்ற பொருளில் வருகின்றது. பெருமானினும் நாம் தாழ்ந்தவர் என்ற எண்ணத்துடன் பெருமானைப் பணிந்து வணங்க வேண்டும். வாளா=பயன் அற்று, வீணாக. கழிதல்=இறத்தல். 

அறிவில் முழு வளர்ச்சி அடைந்து தனது காலில் நிற்கும் திறமை பெற்ற மனிதனை ஆள் என்று அழைக்கின்றோம். அப்பர் பிரான் சிவபிரானின் தொண்டர்கள் அல்லாதவரை ஆள் என்று கருதவில்லை. இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அடிமைத் தன்மையிலிருந்து வெளியே வாராமல் பெருமானுக்கு திருத்தொண்டு செய்பவர்களாய். அடிமைத் திறத்திலிருந்து   மீளாமல்  இருக்க வேண்டும். நமது தேவைகளையும் அவரிடமே முறையிட்டு பெறுதல் வேண்டும் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார். 

    மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
    மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
    ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
    வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

கடந்தை=வீரம் நிறைந்த மக்கள்; பண்டைய நாளில் வீரர்கள் வசித்த இடமாக பெண்ணாகடம் இருந்தது போலும். கடந்தை என்ற அடைமொழியுடன் சம்பந்தர் இந்த பாடலில் இந்த தலத்தினை குறிப்பிடுகின்றார். அப்பர் பிரானும் இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில் (மூன்று பாடல்களே நமக்கு கிடைத்துள்ளன) கடந்தையுள் தூங்கானை மாடம் என்று குறிப்பிடுகின்றார். ஊர் மக்கள் இந்த கோயிலினை பெருங்கோயில் என்று அழைக்கின்றனர். ஊரில் பல சிவாலயங்கள் இருந்தால், அந்த ஆலயங்களில் அதிகமான சிறப்பு வாய்ந்த திருக்கோயிலை பெருங்கோயில் என்று அழைப்பது வழக்கமாக இருந்தது போலும். தஞ்சை பெரிய கோயில் என்று அழைப்பது இன்றும் வழக்கில் உள்ளது.     
 
பொழிப்புரை: 

பிணியாக கருதப்படுவதும் உயிருடன் ஓடுங்கி இருந்து தக்க சமயத்தில் வெளிப்பட்டு துன்பங்களை விளைவிக்கும் வினைகளுயும், இவ்வாறு வினைகளை அனுபவிப்பதற்கு காரணமான பிறவியும், இறப்பு மற்றும் இறப்பினுக்கு முன்னே அனுபவிக்க வேண்டிய பல துன்பங்களையும் ஒழித்து விட்டு, பிறப்பிறப்பு இல்லாத பேரின்பம் அடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் செய்வதற்கு உரிய இடத்தினைத் தேடி நிற்கும் மனிதர்களே, நீங்கள் அனைவரும் பெருமானின் திருவடி நிழலில் தங்கும் வாய்ப்பினைப் பெற்று அவனது கருணைக்கு ஆளாக விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய ஒரு இடத்தினை நான் உங்களுக்கு உணர்த்துகின்றேன், கேட்பீர்ககாக. நான்கு புறங்களிலும் அகழிகளாலும் மதில்களாலும் சூழப்பட்டிருப்பதும் இல்லங்கள் தோறும் வேதங்களின் ஒலி ஒலிப்பதும், ஆகிய கடந்தை என்று அழைக்கப்படும் நகரத்தில் உள்ள அகன்ற தூங்கானைமாடம் திருக்கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு நீங்கள் விரும்பிய தன்மையை பெறுவீர்களாக..        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com