105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 6

பெருமானைத் தொழுது
105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 6

பாடல் 6:

    பன்னீர்மை குன்றிச் செவி கேட்பிலா படர் நோக்கில்
        கண் பவளந்நிற
    நன்னீர்மை குன்றித் திரை தோலொடு நரை தோன்றும்
        காலம் நமக்கு ஆதல் முன்
    பொன்னீர்மை துன்றப் புறம் தோன்றும் நல் புனல்
        பொதிந்த புன் சடையினான்             உறையும்
    தொன்னீர்க் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை
         மாடம் தொழுமின்களே

விளக்கம்;

மூப்பினால் உடலில் தோன்றும் பல மாற்றங்களை குறிப்பிட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளையும் உணர்த்தி, அத்தகைய காலம் வந்து நாம் ஏதும் செய்ய இயலாத நிலை வருமுன்னம் பெருமானைத் தொழுது பயன் அடையுமாறு இந்த பாடலில் சம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். நீர்மை=தன்மை; பன்னீர்மை=பற்களின் வலிமை; பற்கள் உடைந்தும் விழுந்தும் வலிமையற்று காணப்படும் நிலை என்று சிலர் பொருள் கூறுகின்றனர்.; பன்னீர்மை என்ற சொல்லுக்கு பல வகையான உடலின் வலிமைகள், இன்பத்தை அனுபவிக்க உதவும் புலன்கள் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். பல் வீழ்ந்து நாத்தளர்ந்து என்று இதே பதிகத்தின் மற்றோர் பாடலில் வருவதால், இரண்டாவது பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளது. கண் பவளந்நிற நன்னீர்மை=செவ்வரி ஓடும் கண்கள்; நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் மனிதனின் கண்களில், சுத்தமான இரத்த ஓட்டத்தினால் கண்களில் சிவப்பு நிறத்தில் கோடுகள் தெரியும். மருத்துவர்கள் கீழ் இமையினை சற்றுத் தாழ்த்தி கண்களில் சிவப்பு கோடுகள் உள்ளதா என்று பார்ப்பார்கள். இரத்த ஓட்டம் குறைந்தால் கண்கள் வெளுத்து தோன்றுவது இயல்பு. திரை=சுருக்கம்; தோளில் சுருக்கம் காணப்படுவதும், முடிகள் நரைப்பதும் முதுமையின் அடையாளங்கள். முதுமை அடைந்த பின்னர், உடல் நலம் குன்றுவதால்  பல தலங்கள் சென்று இறைவனை வணங்க மனம் விரும்பினாலும் உடல் ஒத்துழைக்காது என்பதால், உடலில் வலிமை உள்ள போதே பெண்ணாகடம் சென்று இறைவனை வணங்கி பயன் அடையுமாறு உணர்த்தும் பாடல்.       
.  
பொழிப்புரை: 

மனிதர்களே, உடலில் உள்ள பல்வகை சிறப்புத் தன்மைகள் குறைந்து, காதுகள் தாங்கள் கேட்கும் சக்தியை இழந்து, கண்கள் தங்களது பவளம் போன்ற செம்மை நிறமும் பார்வையும் குன்றி, செழிப்புடன் காணப்பட்ட உடலின் தோல் சுருங்கி, முடிகள் நரைத்து முதுமைப் பருவம் உம்மை வந்து அடைவதன் முன்னம், பொன்னின் நிறம் மேலே தோன்றுமாறு நீர்ப்பெருக்கினை உடைய கங்கை நதியினைத் தனது செம்பட்டை நிறத்து சடையினில் ஏற்ற பெருமான் உறையும் தூங்கானை மாடம் திருக்கோயில் உள்ளதும்  தொன்மையான நதியாகிய நிவா பாய்வதும் கடந்தை நகரம் சென்றடைந்து, ஆங்கே உள்ள பெருமானை வணங்கித் தொழுது நீங்கள் விரும்பிய பயனை அடைவீர்களாக.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com