105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 7

உணர்த்திய ஞானசம்பந்தர்
105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 7


பாடல் 7:

    இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பாய வாழ்க்கை
        ஒழியத் தவம்
    நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள்கழலே நாளும்
        நினைமின் சென்னிப்
    பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான்
        பிரியாத நீர்த்
    துறை சூழ் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம்
        தொழுமின்களே

விளக்கம்:

அலங்கல்=மாலை; பிணையும்=விரும்பும்; இறை=சிறிது; துகள்=தூள், சிறிய அளவு; இளமை நிலையாமை தத்துவத்தை சென்ற பாடலில் உணர்த்திய ஞானசம்பந்தர் இந்த பாடலில் செல்வம் நிலையாமையை உணர்த்துகின்றார். ஒருவரது செல்வம் குறைந்த பின்னர் அவரது அன்றாடத் தேவைகளின் தரங்களும் குறைகின்றன. ஊட்டச்சத்து மிகுந்து செழிப்பான உணவினை அந்நாள் வரை உண்டு வாழ்ந்தவர்கள், எளிமையான உணவினை உண்ணத் தலைப்படுகின்றனர். மேலும் செல்வத்தின் துணை கொண்டு வசதி மிகுந்து வாழ்ந்து வந்த வாழ்க்கையும், தரத்தில் தாழ்கின்றது. இவ்வாறு வாழ்வதையே இழிப்பாய வாழ்க்கை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் மறுமையில் பேரின்ப வாழ்வினை அளிக்கும் பெருமான் இம்மையிலும் உதவி செய்வான் என்பதும் இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. உயிருக்கு ஊட்டத்தை, வலிமையை அளிக்கும் தவ வாழ்க்கையினை நிறை ஊண் நெறி வாழ்க்கை என்று கூறுகின்றார். எளியனாக அனைத்து உயிர்களுக்கும் இரங்கி, அருள் புரியும் திருப்பாதங்கள் என்பதால் நீள்கழல்கள் என்று இங்கே கூறுகின்றார்.   

இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பாய வாழ்க்கை என்ற தொடருக்கு, சிறிதளவே உணவினை உட்கொண்டு உடலை வருத்திக் கொண்டு புரியும் தவம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஒழுக்கத்துடன் புரியும் தவம், மனதினுக்கு நிறைவு தரும் நிலையை குறிப்பிடும் சம்பந்தர், மிகவும் அழகாக உடலுக்கு சிறிதளவே உணவு சென்றாலும் மனம் நிறையும் வண்ணம் செய்யப்படும் தவம் என்று நயமாக கூறுகின்றார். .  

பொழிப்புரை:

மிகவும் சிறிய அளவினில் உணவினை உட்கொண்டு பல துன்பங்களை அனுபவித்து இழிந்த வாழ்க்கை வாழ்வதால் அத்தகைய இழிந்த வாழ்க்கையினை நீக்கி, உயிரினுக்கு வலிமையையும் வளமும் சேர்க்கும் ஒழுக்க நெறி நிறைந்த தவ வாழ்க்கையை எவ்வாறு அடைவது என்று திகைத்து நிற்கும் மனிதர்களே, நீங்கள் அனைவரும் பெருமானின் நீண்ட திருப்பாதங்களை தினமும் நினைப்பீர்களாக. தனது சடைமுடியில் பிறைச் சந்திரனை சூட்டிக் கொண்டு அருள் புரிந்தவரும், அழகுடன் பொலிந்து விளங்கும் கொன்றை மாலையினை விருப்பத்துடன் அணிந்தவரும் ஆகிய பெருமான், நீர்வளம் குன்றாத நிவா நதியினால் சூழப்பட்ட கடந்தை தலத்தில் உள்ள தூங்கானை மாடம் திருக்கோயிலில்  உறைகின்றார். நீங்கள் அங்கே சென்று இறைவனைத் தொழுது வணங்கி நீங்கள் விரும்பும் பயனை இம்மையிலும் மறுமையிலும் அடைவீர்களாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com