105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 10

பிறவி நீங்க
105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 10


பாடல் 10:

    பகடூர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பாய வாழ்க்கை
       ஒழியத் தவம்
    முகடூர் மயிர் கடிந்த செய்கையாகும் மூடு துவர் ஆடையரும்
       நாடிச் சொன்ன
    திகழ் தீர்ந்த பொய்ம் மொழிகள் தேற வேண்டா திருந்திழையும்
       தானும் பொருந்தி  வாழும்
    துகள் தீர் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம்
       தொழுமின்களே

விளக்கம்

பகடு=யானை; பகடூர்=யானைப் பசி, பெரும்பசி; முகடு=தலையின் உச்சி; கடிந்த=நீக்கிய; திகழ் தீர்ந்த=விளக்கம் அற்ற; துகள்=குற்றம்;  சமணர்களும் புத்தர்களும் பெருமானை குறித்து சொல்லும் மொழிகள் தகுந்த விளக்கத்துடன் சொல்லப் படாமையால் அவை அனைத்தும் பொய் மொழிகள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.  

பொழிப்புரை: 

யானைப்பசி என்று சொல்லப்படும் பெரும்பசி வருத்த மேலும் மேலும் நோய்கள் வருத்துவதால், அனைவரின் பழிப்புக்கு ஆளாகும் இந்த பிறவி நீங்க வேண்டும் என்று நோக்கத்துடன் தவம் செய்ய விரும்பும் மனிதர்களே, தங்களது தலையுச்சியின் மீதுள்ள முடியினை ஓவ்வொன்றாக பிடுங்கி நீக்கிக் கொள்ளும் சமணர்களும் தங்களது உடலினைத் துவராடையால் மூடிக் கொள்ளும் புத்தர்களும், ஆதாரமின்றி விளக்கம் ஏதுமின்றி சிவபெருமானைக் குறிப்பிட்டு சொல்லும் பொய் மொழிகளை உண்மை என்று நினைத்து தவறான வழியில் செல்லாதீர்கள். கடைந்தை நகரிலுள்ள தூங்கானை மாடம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் அழகிய நகைகளை அணிந்த உமையன்னையுடன் பொருந்தி உறைகின்ற பெருமானைத் தொழுது வணங்கி நீங்கள் விரும்பும் பயனை அடைவீர்களாக

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com