115. சுற்றமொடு பற்றவை - பாடல் 10

இறைவனின் திருநாமம்
115. சுற்றமொடு பற்றவை - பாடல் 10


பாடல் 10:

    அற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர்
    சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டுக்
    குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
    கற்றென இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

தலத்து இறைவனின் திருநாமம் குற்றம் அறியாத பெருமான் என்று இந்த பாடலில்  குறிப்பிடப் படுகின்றது. இந்திரன் அனுமன் மற்றும் இந்திரஜித் ஆகிய மூவரும் தாங்கள் செய்த குற்றத்தை மன்னித்து மறந்து அருள வேண்டும் என்று, இந்த தலம் வந்தடைந்து  வேண்டியதாக தலபுராணம் கூறுகின்றது. அவர்கள் செய்த தவற்றினை மன்னித்தமையால் குற்றம் பொறுத்த நாதர் என்று பெயர் வந்ததாக கூறுகின்றார். திருஞான சம்பந்தர், இன்னும் ஒரு படி மேலே சென்று பெருமானின் பெருமையை உணர்த்துகின்றார். பெருமான் அவர்கள் செய்த தவற்றினை மன்னித்தது மட்டுமன்றி மறந்தும் விட்டார் என்று கூறுகின்றார். மறந்தமையால் அவர்கள் செய்த குற்றம் யாது என்பதை அறியாதவராக பெருமான் இருக்கின்றார் என்று கூறுகின்றார். நமக்கு தீங்கு செய்த ஒருவரை நாம் மன்னித்தாலும். அவர் நமக்கு செய்த தீங்கு எப்போதும் நமது மனதினில் இருப்பதை நாம் மறுக்க முடியாது. அவரைக் காணும் போதும் அவரை நினைக்கும்போதும், அந்த குற்றம் நமது பின்னணியில் தோன்றுகின்றது. ஆனால் கருணையின் வடிவமாகிய பெருமானோ, அவர்கள் செய்த குற்றத்தினை பொருட்படுத்தாமையால், அவர் அந்த குற்றத்தை மறந்த தன்மையில் இருக்கின்றார்.

இலங்கையிலிருந்து வெற்றியுடன் திரும்பிய இராமர் இராமேஸ்வரத்தில் சிவ லிங்கம் ஸ்தாபித்து பூஜை செய்ய நினைத்தபோது அவர் அனுமனை நர்மதை நதிக்கரையில் இருந்து லிங்கம் எடுத்து வரச் சொன்னார். ஆனால் அனுமன் லிங்கத்துடன் திரும்புமுன் பூஜைக்கான நேரம் நெருங்கிவிட்டதால் சீதை மணலில் பிடித்துக் கொடுத்த லிங்கத்தை வைத்து இராமபிரான் பூஜை செய்கின்றார். திரும்பி வந்த அனுமன், பூஜை முடிந்ததைக் கண்டு ஏமாற்றம் அடையவே, இராமர் அனுமனை மணல் லிங்கத்தை எடுத்து விட்டு அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை அந்த இடத்தில் வைக்கச் சொன்னார். அனுமன் எத்தனை முயற்சி செய்தும் மணல் லிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்லை. அனுமன் தனது முயற்சியில் வாலை லிங்கத்தின் மேல் சுற்றி பெயர்க்க செய்த செயலை சிவபிரானுக்குச் செய்த அவமதிப்பாக கருதியதால், அந்த தவற்றுக்கு பிராயச்சித்தமாக இந்த தலத்தில், தனது குற்றம் பொறுக்குமாறு சிவனை வழிபாடு செய்தான். 

இந்திரன் ஒரு முறை தனது வஜ்ராயுதத்தால் சிவபிரானை தாக்கினான். ஒரு முறை இறுமாப்புடன் இந்திரன் கயிலை சென்ற போது சிவன் அவன் முன் பூதகண உருவில் தோன்றினார். எதிரே நிற்பது சிவன் என்பதை உணராத இந்திரன், தான் உள்ளே செல்வதற்கு தடையாக உள்ள பூதகணம் என்று நினைத்து. தனது வஜ்ராயுதத்தால் தாக்கினான். பதிலுக்கு பெருமான் அடிக்க இந்திரனின் தோள் முரிகின்றது. அப்போது தான் இந்திரனுக்கு தனது எதிரே நிற்பது பூதகணம் அல்ல சிவபெருமான் என்று புரிகின்றது.  அவசரத்தில் செய்த அந்த குற்றத்தை மன்னிக்குமாறு இந்திரன் சிவனை பணிந்த இடம் தான் இந்த தலம். இதனால் தான் இந்த தலத்தில் உள்ள இறைவனுக்கு குற்றம் பொறுத்த நாதர் என்ற பெயர் வந்தது.
  
ஒரு முறை இராவணனின் மகன் இந்த்ரஜித் ஆகாயத்தில் சென்றபோது ஏதோ ஒரு விசை தனது விமானத்தை இழுப்பது போல் உணர்ந்து உடனே கீழே இறங்கி இந்த தலத்தில் இருந்த இலிங்கத்தின் சக்தியால் தான் விமானம் இழுபட்டது என்பதை உணர்ந்தான். இந்த  லிங்கத்தின் மேல் பறந்து சென்றது, தான் செய்த தவறு என்று உணர்ந்து, அங்கே சிவனை பூஜை செய்தான். இந்த அதிசய லிங்கத்தை இலங்கை எடுத்துச் செல்ல முடிவு செய்து லிங்கத்தை பெயர்க்க முனைந்தபோது அவனால் லிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை இதை அறிந்த இராவணன் உடனே இந்த இடத்துக்கு வந்து அவனும் இறைவனை வணங்கி தனது மகன் செய்த குற்றத்தினை பொறுத்து அருளுமாறு வேண்டினான்.

அற்றம்=இடுப்புக்கு கீழே உள்ள மறைக்க வேண்டிய உறுப்பு; ஆதம்=அறிவுடைய தன்மை, ஆதமிலி=அறிவில்லாதவர்கள்; சொற்றம்=சொல்லும் சொற்கள்; கொகுடி=ஒரு வகையான முல்லை. இந்த தலத்தின் தலமரம் கொகுடிமுல்லை. கற்றென=கல் போன்று, நிலையாக உறுதியாக; 
 
பொழிப்புரை:

மறைக்க வேண்டிய உறுப்பினை மறைக்காமல் திகம்பரமாக திரியும் சமணர்களும், அறிவு இல்லாதவர்களாக திகழ்ந்த புத்தர்களும், நல்ல கருத்துக்களை சொல்லும் திறமை அற்றவர்கள். ஆகையால் அவர்கள் சொல்லை பொருட்படுத்தாது விட்டுவிடும் பெருமான், குற்றம் அறியாத பெருமான் என்ற திருநாமத்துடன், கொகுடி முல்லையைத் தலமரமாக கொண்டுள்ள கருப்பறியலூர் தலத்தினை விட்டு நீங்காமல் கல் போன்று நிலையாக பொருந்தி உள்ளான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com