87. உயிராவணம் இருந்து - பாடல் 4

கேள்விகளுக்கு யான் விடை


பாடல் 4: 

கோவணமோ தோலோ உடையாவது
       கொல்லேறோ வேழமோ ஊர்வது தான்
பூவணமோ புறம்பயமோ அன்றாயிற்றான்
       பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமையோ
தீவணத்த செஞ்சடை மேல் திங்கள்சூடித்
       திசை நான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மானார் தாம்
       அறியேன் மற்று ஊராம் ஆரூர் தானே

விளக்கம்:

ஒற்றி=அடமானம் வைக்கப்பட்டது; ஆவணம்=ஒழுங்கான பத்திரங்கள் முழு உரிமையினை அளிப்பது. பல தலங்களில் உறையும் இறைவனை உலகத்தவர் தேடுவதாக முந்தைய பாடலில் கூறிய அப்பர் பிரான், பல இடங்களில் உறைவதற்கு காரணத்தினை மிகவும் நகைச்சுவையாக கூறுகின்றார். ஒற்றி என்று திருவொற்றியூர் குறிப்பிடப் படுகின்றது. ஒற்றி என்று வருவதால் திருவொற்றியூர் உமக்கு சொந்தமானதா அல்லது அடமானம் வைக்கப்பட்ட ஊரா என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகின்றது. தனது நிலைக்கு பொருந்தாத வாழ்க்கை வாழ்வதால் இந்த ஐயம் எழுவதாக அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மற்றைய ஊர் ஆரூர் என்பதனை, ஆர் + ஊர் என்று பொருள் கொண்டு, ஆரூர் தலம் உன்னுடையதா அல்லது வேறு எவருடையதோ என்ற கேள்வியும் கேட்கப்படுகின்றது. 

இதே போன்ற ஐயம் சுந்தரருக்கு வருவதை நாம் ஓணகாந்தன்தளியின் (பதிக எண் 7.05) மீது அவர் அருளிய பதிகத்தில் உணரலாம். நீர் வாழ்வது யாருடைய ஊர் (யார் + ஊர் என்பது ஆர் + ஊர் என்று மருவியுள்ளது), மற்றொரு தலமாகிய ஒற்றியூர், அடமானம் வைக்கப்பட்டதால் அதுவும் உம்முடையதன்று. இவ்வாறு எந்த தலமும் உமக்கு சொந்தமாக இல்லாமல், தாரமாகிய கங்கை இருப்பதற்கு இடம் இன்றி, சடையில்  வைத்துக்கொண்டு, தோலினை உடையாகவும் பாம்புகளை அணிகலன்களாகவும் நீர் வாழ்ந்தால், உம்மை நம்பி வரும் அடியவர்கள் எதனைப் பெறுவார்கள் என்ற கேள்வியினை சுந்தரர் எழுப்புகின்றார். பொன் வேண்டிய சுந்தரர், தனக்கு பொன் கிடைக்காத காரணத்தால், வஞ்சப் புகழ்ச்சி அணியாக இந்த பாடலினை அமைத்துள்ளார்.  

    வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவது என்னே
    ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல் உம்மதன்று 
    தாரமாகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள் உந்தம்
    ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன்தளி உளீரே  
 

எண்தோள் வீசி நின்றாடும் பரமனின் கைகள் எட்டுத் திசைகளையும் தொடுவதால், திசைகளே அவனுக்கு ஆடையாகவும் ஆபரணமாகவும் இருப்பதாக கூறுவார்கள்.

பொழிப்புரை:

தீவண்ணம் உடைய சடையின் மேல் திங்கள் சூடி, நான்கு திசைகளையும் இருப்பிடமாகக் கொள்ளும் வல்லமை படைத்த தலைவனாகிய நீ, உமது தகுதிக்கு பொருந்திய வாழ்க்கை வாழ வேண்டாமா? போர்க்குணம் கொண்ட எருதினையும் யானையயும் வாகனமாகக் கொண்டு, கோவணமும் தோலும் ஆடையாகக் கொண்டு, பல ஊர்கள் திரிந்து பித்சை எடுத்து வாழ்வது உமக்கு அழகில்லை. ஒரே இருப்பிடமாக இல்லாமல் புறம்பயம், பூவணம் என்று பல ஊர்கள் நீர் திரிவதேன்? உமது தலமாகிய ஒற்றியூர், உமக்கு சொந்தமானதா அல்லது அடமானம் வைக்கப் பட்டதா? உமது ஊர் எனப்படும் ஆரூர் உண்மையில் யாருடைய ஊர்? மேற்கண்ட கேள்விகளுக்கு யான் விடை ஏதும் அறியேன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com