87. உயிராவணம் இருந்து - பாடல் 5

தேவியை பாகமாகக் கொண்ட
87. உயிராவணம் இருந்து - பாடல் 5


பாடல்  5

    ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள
                             வண்ணர் குடமூக்கிலார்
    வாய்ந்த வளைக்கையாள் பாகமாக
                            வார்சடையார் வந்து வலஞ்சுழியார் 
    போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே
                           போயினர் போரேறேரி
    ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார்
                          அண்ணலார் செய்கின்ற கண் மாயமே


விளக்கம்:


தனது பெருமைக்குத் தகுதியான வாழக்கை வாழாத சிவபெருமானின் தலங்களைப் பற்றி, தனக்கு ஐயம் ஏற்படுவதாக முந்தைய பாடலில் கூறும் அப்பர் பிரான், தனக்கு விடை கிடைத்துவிட்டதை இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். ஆய்ந்து=ஆராய்ந்து; கண்மாயம்=கண் கட்டு வித்தை, இந்திரஜாலம் .தான் மறைந்தது மற்றவர் அறியமுடியாத படி இருக்கும் நிலை.
 
பொழிப்புரை:

மழுப்படையை கையில் ஏந்திய பெருமான் இன்னம்பரில் ஒரு சமயம் இருந்தார்; ஒளி வீசும் பவளத்தின் நிறத்தையும் தீப்பிழம்பின் நிறத்தையும் ஒத்த திருமேனி உடைய பெருமான் மற்றொரு சமயம் குடமூக்கில் (தற்போதைய பெயர் கும்பகோணம்) இருந்தார்; நீண்ட சடையினைக் கொண்டு, வளையல்கள் அணிந்த கைகளை உடைய பார்வதி தேவியை பாகமாகக் கொண்ட பெருமான் ஒரு சமயம் வலஞ்சுழி சென்றார்; பின்னர் புறம்பயத்துக்கும் அதனை அடுத்து புகலூருக்கும் சென்றார்; போரிடும் காளையினை வாகனமாகக் கொண்ட இவர், எந்த தலத்தினை இருப்பிடமாகக் கொள்ளலாம் என்று ஆராய்ந்து முடிவு செய்தவர் போல், இறுதியில் திருவாரூர் வந்து குடிபுகுந்து விட்டார். இவர் இவ்வாறு வருவதும் போவதும் கண்கட்டு வித்தை போல் உள்ளது. எவரும் அறிந்து உணர முடியாத செயல்களாக உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com