87. உயிராவணம் இருந்து - பாடல் 6

பொற்சுண்ணம் இடிக்குமாறு
87. உயிராவணம் இருந்து - பாடல் 6


பாடல் 6:

கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
       கருநரம்பும்  வெள்ளெலும்பும்  சேர்ந்து ஒன்றாகி
உருவாகிப் புறப்பட்டு இங்கு ஒருத்தி தன்னால்
       வளர்க்கப்பட்டு உயிராகும் கடை போகாரால்
மருவாகி நின் அடியே மறவேன் அம்மான்
       மறித்தொரு கால் பிறப்புண்டேல் மறவா வண்ணம்
திருவாரூர் மணவாளா திருத் தெங்கூராய்
      செம்பொனே கம்பனே திகைத்திட்டேனே


விளக்கம்:


கருவாகி=ஒரு சிறு துளியாய் இருந்த நிலை; குழம்பி இருந்து=கை, கால் முதலிய உறுப்புக்கள் தனியாகத் தோன்றாமல் இருக்கும் நிலை. கலித்து=தழைத்து; கடைபோதல்=அந்த நிலையில் நிலைத்து நில்லாது உயிர் உடலை விட்டு நீங்குதல்; மருவுதல்=பொருந்துதல்

நமது உயிருடன் பிணைந்து இருக்கும் வினைகளின் அளவு எவருக்கும் தெரியாது. மேலும் அந்த வினைகள் முழுவதும் கழியும் நிலை எப்போது ஏற்படும், நமக்கு அடுத்த பிறவி என்பது இருக்குமா அல்லது இல்லாமல் போகுமா என்பதும் எவருக்கு தெரியாது. அடுத்த பிறவி என்பது இல்லாமல், இறைவனுடன் இணைய வேண்டும் என்பதே ஆன்மாவின் தாகம். ஆன்மாவின் இந்த உண்மையான தாகத்தைப் புரிந்துகொண்ட அருளாளர்கள் அடுத்த பிறவி என்ற ஒன்று இருந்துவிடப் போகின்றதே என்று அச்சப்படுவார்கள். அவர்களது அச்சம் அவர்களது பாட்டிலும் பேச்சிலும் ஒலிக்கும். அத்தகைய அச்சத்தைத் தான் நாம் மேற்கண்ட அப்பர் பிரான் பாடலில் காண்கின்றோம். மறித்தொருகால் பிறப்பு உண்டேல் என்று தனது அச்சத்தைத் தெரிவிக்கும் அப்பர் பிரான், அந்த பிறப்பிலும் இறைவனின் நினைவு இருக்கவேண்டும் என்று கவலைப்படுகின்றார். இந்த கவலை அப்பர் பிரானின் பல பாடல்களில் ஒலிப்பதை நாம் உணரலாம். அத்தகைய ஒரு பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு 
    இறப்பன் இறந்தால் இருவிசும்பு ஏறுவேன் ஏறி வந்து
    பிறப்பன் பிறந்தால் பிறைஅணிவார்ச்சடைப் பிஞ்சகன் பேர்
    மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே

இந்த பாடல், பவளத்தடவரை என்று தொடங்கும் பதிகத்தின் (பதிக எண்: 4.113) எட்டாவது பாடல். துறத்தல்=விட்டொழித்தல்; துறக்கப்படாத உடல் என்று உலக ஆசைகளை விட்டு ஒழிப்பதற்கு இடம் கொடாத உடல் என்று இங்கே குறிக்கின்றார். வெந்தூதுவர்=இயமனின் தூதர்கள்; மறுகுதல்=வருந்துதல்; உலகப் பற்றுக்கள் நம்மை விடாதபடி கெட்டியாக பிடித்துக் கொண்டு, நம்மை பலவிதமான இன்ப துன்பங்களில் ஆழ்த்தி வினைகளை மேன்மேலும் பெருக்கச் செய்யும். உடலிலிருந்து தனது உயிர் இயமனின் தூதர்களால் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் என்று கூறும் அப்பர் பிரான் அதன் பின்னர் என்ன நடக்கும் என்றும் இங்கே கூறுகின்றார். எனது உயிர் சுவர்க்கம் நரகம் ஆகிய இடங்களுக்குச் சென்று, தனது வினையின் ஒரு பகுதியை கழித்த பின்னர், மறுபடியும் வந்து பூவுலகில் பிறக்கும்;. அவ்வாறு பிறக்கும் சமயத்தில் பிறையினைத் தனது வார்சடையில் அணிந்த பெருமானின் பெயரினை மறந்துவிடுமோ என்று தான் மிகவும் கலங்குவதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.  

அருளாளர்களின் கவலை அடுத்த பிறப்பில், தாம் இறைவனை மறவாமல் இருக்க வேண்டும் என்றே இருக்கும். காரைக்கால் அம்மையார் கயிலைமலை சென்று இறைவனைச் சந்திக்கின்றார். அம்மையாரின் பக்தியால் மிகவும் மகிழ்ந்த இறைவன், நீ வேண்டிய வரத்தை கேட்கலாம் என்று கூற, அம்மையார் கேட்ட வரம் கீழ்க்கண்ட பெரிய புராணப் பாடல் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேட்ட வரங்களாவன: இந்தப் பிறவியில் நான் உன்னிடம் வைத்துள்ள அன்பு, நான் இறக்கும் வரையில் இருக்க வேண்டும்; அடுத்த் பிறவி என்பது இல்லாத நிலை; ஒருக்கால் அடுத்த பிறவி நேரிடுமாயின் அப்போதும் உன்னை என்றும் நினைந்து மறவாமல் இருக்கும் நிலை; உனது திருவடிக்கீழ் இருந்து நீ உனது நடனத்தைப் பார்த்துகொண்டே நான் மகிழ்ந்து பாடும் நிலை. 

    இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார் 
    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் 
    மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாட
    அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்  

கைகள், கால்கள், கண்கள் முதலிய உறுப்புகள் தோன்றாத நிலையில், உடல் ஒரு பிண்டம் போன்று தாயின் கருப்பையில் இருக்கும். நாளடைவில் அந்த குழம்பு கடினத் தன்மை அடையும் போது, முதலில் மூளை உருவாகின்றது; பின்னர் நரம்புகளும் எலும்புகளும் உருவாகின்றன. பின்னர் பிற உறுப்புகள் வளர்ந்து முழு குழந்தையாக தாயின் கருவிலிருந்து வெளிவரும் நிலை மிகவும் சுருக்கமாக இங்கே அப்பர் பிரானால் கூறப்பட்டுள்ளது. மூளை தோன்றிய காலத்தே, தனது நினைவில் புகுந்த பிரான் என்று சிவபிரானை அப்பர் இங்கே குறிக்கின்றார். இதே செய்தியை, தான் உருத் தெரியாமல் இருந்த நாளில் தன்னுள் கலந்த சிவபிரான் என்று மணிவாசகரும் தனது திருவாசகம் (கண்டப்பத்து என்ற பதிகத்தில்), கூறுகின்றார். 

    உருத்தெரியா காலத்தே உள்புகுந்து என் உளம் மன்னிக்
    கருத்து இருத்தி ஊன்புக்கு கருணையினால் ஆண்டு கொண்ட
    திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை
    அருத்தியினால் நாயடியேன் அணி கொள் தில்லை கண்டனே
   

தான் கருவில் கிடந்த நாள் முதலாக சிவபிரானின் திருப்பாதங்களைக் காண்பதற்கு தனது மனம் உருகியதாக, கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய பதிகத்தின் (நான்காம் திருமுறை, பதிக எண் 99) பாடல் ஒன்றில் அப்பர் பிரான் கூறுகின்றார். இதே கருத்து கருவாய்க் கிடந்து உன் கழலே நினைந்து என்று தொடங்கும் திருப்பாதிரிப்புலியூர் பாடலிலும் வெளிபடுகின்றது. சிறந்த சைவர்களாக விளங்கிய, அப்பர் பெருமானின் பெற்றோர்கள், சிவபக்தியையும் கலந்து வளர்த்த நிலையினை நாம் உணரமுடிகின்றது.  
 
    கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
    உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்து ஒழிந்தேன்
    திருவொற்றியூரா திருவாலவாயா திருவாரூரா
    ஒரு பற்று இல்லாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே

செம்பொன் ஏகம்பனே என்ற தொடர் மணிவாசகரின் திருவாசகப் பாடல் ஒன்றினை (திருப்பொற்சுண்ணம்: பதிக எண்: 8.09) நினைவூட்டுகின்றது. கறை உரல்=கரிய நிறம் உடைய உரல்; காம்பு=பட்டாடை; காசு=மணி, இரத்தினக்கற்கள் இந்த பாடலில், பொற்சுண்ணம் இடிப்பதற்காக பயன்படும் உரலை அலங்கரிக்குமாறு கூறும் மணிவாசக அடிகளார், கச்சி ஏகம்பனின் புகழினைப் பாடிக்கொண்டே பொற்சுண்ணம் இடிக்குமாறு கூறுகின்றார். கல்வியில் கரையிலா காஞ்சி என்று உலகத்தோரால் புகழப்பட்ட காஞ்சி  நகரில் அமைந்துள்ள ஏகம்பத்தைப் பாடினால் நமது பாச வினைகள் பறித்து எறியப்படும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார்.  

    காசு அணிமின்கள் உலக்கை எல்லாம்
              காம்பு அணிமின்கள் கறை உரலை
    நேசம் உடைய அடியவர்கள் நின்று
             நிலாவுக என்று வாழ்த்தித்
    தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித்
            திருவேகம்பன் செம்பொன் கோயில் பாடிப்
    பாச வினையைப் பறித்து நின்று பாடிப்
            பொற்சுண்ணம் இடித்தும் நாமே


பொழிப்புரை:


ஒரு பனித்துளியினும் சிறிய அளவில் உள்ள ஆண் விந்துவாக கருப்பையின் உள்ளே சென்று, உருத்தெரியாத பிண்டமாக இருந்து, பின்னர் பிண்டம் கெட்டிப்பட்ட போது, மூளை தோன்றி அந்த பிண்டத்தில் நரம்புகளும் எலும்புகளும் தோன்றி ஒரு உருவமாக மாறி, தாயால் வளர்க்கப்படும் உயிர் எந்த நிலையிலும் உடலை விட்டு நீங்கலாம். அதனால் நான் உனது திருவடிகளை, கருவில் இருந்த காலத்திலிருந்தே நான் நினைந்திருந்தேன். திருவாரூர் மணவாளா, தெங்கூரில் குடிகொண்டுள்ள இறைவனே, பசும்பொன் போன்ற கச்சி ஏகம்பனே, அந்த நிலையிலிருந்து நான் உன்னை மறவாமல் இருந்து வருகின்றேன். மீண்டும் ஒரு பிறவி எடுக்கும் நிலை ஏற்பட்டால், உன்னை மறவாத நிலை ஏற்படுமோ என்ற கலக்கத்தில் உனது திருநாமங்களை கூறியவாறு கலங்குகின்றேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com