87. உயிராவணம் இருந்து - பாடல் 8

குடி கொண்டிருக்கும் பெருமானே
87. உயிராவணம் இருந்து - பாடல் 8


பாடல்  8:

ஆடுவாய் நீ நட்டம் அளவில் குன்றா அவி
         அடுவார் அருமறையோர் அறிந்தேன் உன்னைப்
பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார்
        அமரர்களும் அமரர் கோனும் 
தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார்
        மலைமகளும் கங்கையாளும்
கூடுமே நாயடியேன் செய் குற்றேவல்
       குறையுண்டே திருவாரூர் குடி கொண்டீர்க்கே

விளக்கம்:

அடுதல்=சமைத்தல்; விதிக்கப்பட்ட நெறிமுறைகள் வழுவாமல் இறைவனுக்கு நிவேதனம் படைத்தல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

இறைவனுக்கு மற்றவர்கள் செய்யும் பணியுடன் தனது பணியினை ஒப்பிட்டு, தான் செய்யும் சிறுபணிகள் இறைவனுக்கு ஏற்குமோ என்ற கேள்வியை இங்கே அப்பர் பிரான் எழுப்புகின்றார். இறைவனுக்குச் செய்யும் திருப்பணிகளுக்கு ஒரு இலக்கணம் வகுத்து, அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த அப்பர் பிரான் தனது பணி, மிகவும் சிறிய தொண்டு என்றும், இறைவன் அதனை ஏற்பாரா என்று சந்தேகம் கொள்ளும்போது நாம் செய்யும் இறைபணிகள் எம்மாத்திரம். எனவே நாம் எவ்வளவு இறைபணி செய்தாலும், இந்த கருத்தினை மனதில் கொண்டு அடக்கமாக இருத்தல் வேண்டும். இது தான், இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப்படும் அறிவுரை.  

பொழிப்புரை:

அழகிய நடனம் ஆடித் திருவாரூரில் குடி கொண்டிருக்கும் பெருமானே, உனக்கு குறை ஏதும் இல்லாத வகையில் பலர் உனக்கு திருத்தொண்டு செய்து வருகின்றார்கள். விதித்த நெறிமுறைகள் வழுவாமல், அருமறையோர்கள் உனக்கு தினமும் பூஜை செய்து வழிபடுவதையும், நாரதர் தும்புரு முதலானோர் உன்னைப் புகழ்ந்துப் பாடி வழிபடுவதையும், தேவர்களும், தேவர்கள் தலைவனாகிய இந்திரனும் உன்னைப் புகழ்ந்து வழிபடுவதையும், உன்னை வழிபடுவதற்காக திருமாலும் பிரமனும் தேடுவதையும், உனது அருகில் உன்னைத் தீண்டியபடியே இருந்து உன்னை விட்டு என்றும் நீங்காமல் உன்னை என்றும் துதித்துக் கொண்டு கங்கையும் மலைமகளும் இருப்பதையும், நான் அறிந்து கொண்டேன். அவர்கள் எல்லாம் உமக்குச் செய்யும் பணிவிடைகள் போன்று பெருமை உடையது அல்ல நான் உனக்குச் செய்யும் தொண்டுகள். எனவே நாயினும் கடையேனாகிய நான் செய்யும் இந்த சிறு தொண்டுகள் உனக்கு ஏற்குமா, நான் இதனை அறியமாட்டேன். (இதனையும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com