87. உயிராவணம் இருந்து - பாடல் 9

உன்னைக் காண்பதற்காக
87. உயிராவணம் இருந்து - பாடல் 9


பாடல்  9:


    நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
            நிலாத் திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
    ஓரூரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும்
            உலகமெலாம் திரிதந்து நின்னைக் காண்பான்
    தேரூரும் நெடுவீதி பற்றி நின்று திருமாலும்
            நான்முகனும் தேர்ந்தும் காணாது
    ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்
           அமரர்கள் தம் பெருமானே ஆரூராயே    


விளக்கம்:


ஒற்றுவித்து என்ற சொல் ஒற்றித்து என்று குறைந்தது. ஒற்றரை விடுத்து உண்மையை அறியச் செய்தல். தாங்கள் பல இடங்களில் தேடியும் சிவபிரானை எங்கும் காண முடியாததால், திருமாலும் பிரமனும் மற்றவர்களின் உதவியை நாடி, சிவபெருமானின் இருப்பிடத்தைத் தேடியதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இதன் மூலம் அவர்கள் சிவபிரான் இருக்கும் இடத்தினை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வத்துடன் இருந்தனர் என்பது உணர்த்தப்படுகின்றது.  

பொழிப்புரை:

எப்பொழுதும் வற்றாமல் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் கங்கையைச் சடையில் வைத்தவனே, நெற்றியில் கண் உடையவனே, தேய்ந்து வந்த நிலவின் ஒரு பகுதியைத் தனது சடையில் ஏற்று அருள் செய்தவனே, உன்னை உலகெங்கும் தேடிக் காணாமல் திருமாலும் பிரமனும், உனது இருப்பிடத்தை அறிய ஒற்றர்களின் உதவியையும் நாடியுள்ளார்கள். உன்னைக் காண்பதற்காக அவர்கள், தேர்கள் ஓடும் பரந்த திருவாரூரின் வீதிகளில் வந்து நின்று, ஆரூரா, ஆரூரா, அமரர்கள் தம் பெருமானே என்று அழைக்கின்றார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com