87. உயிராவணம் இருந்து - பாடல் 11

கோப குணம் நிறைந்த
87. உயிராவணம் இருந்து - பாடல் 11


பாடல்  11:

    கருத்துத்திக் கத நாகம் கையில் ஏந்திக்
          கருவரை போல் களியானை கதறக் கையால்
    உரித்தெடுத்துச் சிவந்த தன் தோல் பொருந்த மூடி
          உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்
    திருத்துருத்தி திருப்பழனம் திருநெய்த்தானம்
          திருவையாறு இடம் கொண்ட செல்வர் இந்நாள்
    அரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி
          அப்பனார் இப்பருவம் ஆரூராரே 


விளக்கம்:


துத்தி=படத்தில் உள்ள புள்ளிகள்; அடர்த்தல்=சுமத்தல்; அரிப்பெருத்த=தசை மடிப்புகளில் கோடுகள் மிகுந்த 

பொழிப்புரை:

கரிய புள்ளிகளைத் தனது படத்தில் கொண்ட, கோப குணம் நிறைந்த பாம்பினை கையில் ஏந்தியவாறே, பார்வதி தேவி அச்சப்படும்படியாக, தன்னை எதிர்த்து வந்த மலை போன்ற பெரிய மதயானையை, கையால் உரித்து அதன் தோலினைத் தனது சிவந்த உடலின் மீது பொருத்தமாக மூடியவரும், ஒளி பொருந்திய திருமேனியை உடையவரும் ஆகிய சிவபெருமானார், திருத்துருத்தி, திருப்பழனம், திருநெய்த்தானம், திருவையாறு ஆகிய  தலங்களில் உறைபவர். அவர் இப்போது, தசை மடிந்து பிடரியினில் கீற்றுகளைக் கொண்ட வலிமை வாய்ந்த எருதின் மீது ஏறி திருவாரூரில் விருப்பமுடன் வீற்றிருக்கின்றார்.

முடிவுரை:

ஆழ்ந்த கருத்துக்கள் அமைந்த இந்த பாடலை தினமும் நாம் பாடி அனுபவித்து, அப்பர் பிரான் காட்டிய அருள் வழியே சென்று இறைவனின் அடி சேர்வோமாக. இவ்வாறு ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட பதிகத்தினை பத்து பாடல்களுடன் முடிக்க அப்பர் பிரானுக்கு மனம் வரவில்லை போலும். மேலும் ஒரு பாடலை அளித்து, பதினோரு பாடல்கள் கொண்ட பதிகமாக நம்மை மகிழ்வித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com