88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 3

மெய்ப்பொருளை நினைக்க
88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 3


பாடல் 3:

    நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா
          நித்தலும் எம் பிரானுடைய கோயில் புக்கு
    புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
         பூமாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடித்
    தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா
         சய போற்றி போற்றி என்றும்
    அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும்
        ஆரூரா என்றென்றே அலறா நில்லே

விளக்கம்:

பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் சிவபெருமானின் திருநாமங்களைச் சொல்லுமாறு, வலியுறுத்தும் அப்பர் பிரான், இந்த பாடலில் நாம் எவ்வாறு நம்மை இறைபணியில் ஈடுபடுத்திக்கொள்வது என்பதை விளக்குகின்றார். நிலை பெறுதல்=தடுமாற்றம் இல்லாத நிலையில் இருத்தல்; 

பாதிரிப்புலியூரில் இருந்தபோது கொடிய சூலை நோயால் வருந்திய அப்பர் பிரான், எவரும் அறியாமல், திருவதிகையில் தனது தமக்கையார் தங்கியிருந்த திருமடம் வந்தடைகின்றார். அடுத்த நாள் பொழுது விடிவதற்கு முன்னர், தனது தமக்கையார், திருவலகு, தோண்டி, சாணம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு திருக்கோயில் சென்றபோது தானும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார். அப்போது அவர் திருக்கோயிலில் செய்த பணிகளைக் கண்டார். தனது தமக்கையார் செய்த பணிகளைக் கூர்ந்து கவனித்த அவர் தானும் அத்தகைய பணிகளை மேற்கொண்டு மற்றும் திருக்கோயில் சுற்றுப் பாதைகளையும் செப்பனிடத் தொடங்கினார். இந்த பாடலின் இரண்டாவது அடியில், தனது தமக்கையார் செய்த பணிகளைக் குறிப்பிடும் அப்பர் பிரான், அனைவரும் அவ்வாறு செய்யவேண்டும் என்று விரும்புகின்றார். தனது தமக்கையார், உழவாரப் பணியில் தான் ஈடுபடுவதற்கு முன்மாதிரியாக இருந்ததை அப்பர் பிரான் நமக்கு உணர்த்தும் பாடல் இது.  

பெரியபுராணத்தில், திலகவதியார் செய்த பணிகளைக் குறிப்பிடும் சேக்கிழாரின் பாடல் இங்கே ஒப்பு நோக்கத் தக்கது. பணிமாறுதல்=திருக்கோயிலின் திருமுற்றத்தை பெருக்கித் தூய்மைப் படுத்துதல்; அலகு=துடைப்பம்; புனிறு=அண்மைக் காலத்தில் கன்று ஈன்ற பசு; அண்மையில் கன்று ஈன்ற பசுவின் சாணம், புனிதமற்றதாக கருதப் படுவதால், அதனை திருக்கோயிலில் பயன்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும்.  

    புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனிறகன்ற
    நலமலி ஆன் சாணத்தால் நன்கு திருமெழுக்கிட்டு
    மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப்
    பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்

கடும்பகல் நட்டம் என்று தொடங்கும் நேரிசைப் பதிகத்தின் (பதிக எண்:4.77) மூன்றாவது பாடலில், அப்பர் பிரான், பல்வேறு திருப்பணிகள் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்களைக் கூறுகின்றார். துளக்கி நன்மலர்=ஒளி பொருந்திய மலர்கள், வாடாமலும் புதுமையாகவும் இருக்கும் மலர்கள்; திருக்கோயில் தரையினைப் பெருக்கி சுத்தம் செய்தால் கிடைக்கும் பலனை விட பத்து மடங்கு பலன், தரையை மெழுக்கிட்டு சுத்தம் செய்தால் கிடைக்கும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மலர்கள் பறித்து மாலைகளாகத் தொடுத்து, இறைவனுக்கு அர்ப்பணித்தால், நமக்கு மேலுலகம் கிடைக்கும் என்றும் கோயிலில் திருவிளக்கு ஏற்றினால் நமக்கு ஞானம் ஏற்படும் என்றும் கூறும் அப்பர் பிரான், இறைவனைப் பாடல்களால் துதிப்பவர்க்கு அளவில்லாத பலன்கள் கிடைக்கும் என்று கூறுகின்றார். தனது தமிழ்ப் புலமைக்காக நாவுக்கரசர் என்று இறைவனால் பட்டம் சூட்டப்பட்ட அப்பர் பிரான், தன்னால் அளவிடமுடியாத பலன் கிடைக்கும் என்று கூறினால், அது எத்தைகைய பலன் என்பதை நாம் உணரலாம்.  
       
    விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றியாகும்
    துளக்கி நன்மலர் தொடுத்தால் தூய விண் ஏறலாகும்
    விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்
    அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே

எந்த இறைபணியையும் நாம் நீராடிய பின்னரே மேற்கொள்ளவேண்டும். காலை எழுந்து நீராடுவது குறித்து இந்த பாடலில் சொல்லப்படவில்லை; எனினும் காலை விடிவதற்கு முன்னர் எழுந்து நீராடி, மலர்களைப் பறித்து, பின்னர் மற்ற இறைபணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்தும் கடவூர் வீரட்டத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் (4.31.4) இங்கே நினைவு கூரத் தக்கது. பெரும்புலர் காலை=இரவின் நான்காவது பகுதி. விதி=வகுக்கப்பட்ட நெறிமுறை.

    பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி
    அரும்பொடு மலர்கள் கொண்டு அங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
    விரும்பி நல்விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
    கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டானாரே

பொழிப்புரை:

நெஞ்சமே, நீ தடுமாற்றம் ஏதும் இன்றி, நிலையான மெய்ப்பொருளை நினைக்கவேண்டும் என்று விரும்பினால் என்னருகில் வா. நான் உனக்கு சொல்வதைக் கேட்டு கடைப்பிடிப்பாயாக. நீ தினமும் பொழுது புலர்வதற்கு முன்னர் எழுந்து நீராடி, உடலில் வெண்ணீறு பூசி, சிவபிரானது திருக்கோயில் புகுந்து, தரையை சுத்தமாக பெருக்கிய, பின்னர் நன்றாக மெழுகி, பூமாலைகள் கட்டி, இறைவனுக்கு அர்ப்பணித்து, அவரைத் தலையால் முழுதுமாக வணங்கி, புகழ்ந்து பாடி, மகிழ்ச்சியுடன் கூத்தும் ஆடி, சங்கரா நீ வெல்க, வாழ்க என்றும் கங்கையைத் தனது செஞ்சடைமேல் வைத்த ஆதிமூலமே என்றும் ஆரூரா என்றும் பலமுறை கூவி அழைப்பாயாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com