88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 6

பிணைத்திருக்கும் பிறப்பு
88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 6


பாடல் 6:

    நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்
          நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தமாகச்
    சேப்பிரியா வெல் கொடியினானே என்றும்
          சிவலோகநெறி தந்த சிவனே என்றும்
    பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்
          புண்டரிகக் கண்ணானும் போற்றி என்னத்
    தீப்பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும்
          திருவாரூரா என்றே சிந்தி நெஞ்சே

விளக்கம்:

நீப்பரிய=விடுவதற்கரிய,  சே=இடபம்; புள்=பறவை, இங்கே கருடன். சிவன்=மங்கலம் உடையவன். 

கடற்கரையில் நிற்கும் நமது கால்களை ஒரு அலை தொட்டுச் சென்று திரும்பிய உடனே, அடுத்த அலை வந்து நமது கால்களைத் தொடுகின்றது. இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக அலைகள் வந்து கொண்டே இருப்பதைக் காணும் நாம், அலைகள் இல்லாத கடலைக் காண்பதில்லை. இவ்வாறு தொடர்ந்து வரும் அலைகளுக்கு ஓய்வே இல்லை என்பதை நாம் உணருகின்றோம். நமது உயிருடன் பிணைந்திருக்கும் வினைகளைக் கழிப்பதற்காக பிறவி எடுக்கும் நாம், இந்தப் பிறவியில் மேலும் பல செயல்களைச் செய்து வினைகளை பெருக்கிக் கொள்கின்றோம்; இதனால் நம்மை அறியாமலே நாம் அடுத்த பிறவிக்கு, நாமே அடிகோலும் நிலைக்கு ஆளாகின்றோம். இவ்வாறு பல பிறவிகள் எடுத்துக் கொண்டே இருப்பதால், நமது உயிருக்கு பிறவிப் பிணியிலிருந்து ஒய்வு என்பது கிடையாது என்பதை நாம் உணர்வதில்லை. அருளாளர்கள் இதனை உணர்ந்ததால் தான், பிறவிப் பெருங்கடல் என்றும் பிறவிப் பெரும்பிணி என்றும் அழைத்தனர். இந்த சங்கிலித் தொடரிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினமானது என்பதால், விடுதற்கு அரிய பிறவி என்பதை உணர்த்தும் வகையில் நீப்பரிய பல்பிறவி என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அழிக்கமுடியாத நோய் என்று பலராலும் கருதப்படும் இந்த நோயினை நீக்கும் வழியினை உணர்த்தும் பாடல் இது. அப்பர் பிரான் தான் ஆராய்ந்து அறிந்த வழி என்று இங்கே குறிப்பிட்டாலும், சிவபிரானின் அருளால் தான், தன்னால் உணரமுடிந்தது என்பதை நமக்கு உணர்த்தும் வகையில் சிவலோக நெறி தந்த சிவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.  

பொழிப்புரை:

நமது உயிர்களை மிகவும் பலமாக பிணைத்திருக்கும் பிறப்பு - இறப்புச் சங்கிலியிலிருந்து விடுதலை பெரும் வழியினை, நாம் மிகவும் ஆராய்ந்து, சிந்தித்து அறிந்துள்ளேன். நெஞ்சமே அதனைச் சொல்கின்றேன் கேட்பாயாக. காளையின் உருவம் வரையப்பட்ட வெற்றிக் கொடியை உடையவனே என்றும்; சிவலோகம் அடையும் வழியைக் காட்டியவனே என்றும்; தாமரை மலரை விட்டுப் பிரியாத நான்முகனும், கருடனின் மேல் உலாவும் தாமரைக் கண்ணனாகிய திருமாலும் வழிபட்டு வாழ்த்துமாறு தீப்பிழம்பாய் நின்றவனே என்றும்; செல்வம் நிறைந்த திருவாரூர் நகரில் உறையும் இறைவனே என்றும், நெஞ்சமே நீ தினமும் அவனை சிந்திப்பாயாக.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com