88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 7

வினைகளை வீழ்த்தி
88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 7


பாடல் 7:

பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்
          பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்
          சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும்
          உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும்
புற்றரவக் கச்சு ஆர்த்த புனிதா என்றும்
          பொழில் ஆரூரா என்றே போற்றா நில்லே

விளக்கம்:

பாற்றுதல்=அழித்தல்; பரிசு=தன்மை; சுற்றி நின்ற சூழ் வினைகள்=வினைகளின் பிணைப்பிலிருந்து உயிர் மீண்டு செல்லாத வண்ணம், நல்வினைகளும் தீவினைகளும் நம்மை எப்போதும் சூழ்ந்து இருப்பதால் சுற்றி நின்ற சூழ் வினைகள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தீயவினைகள் போல் நல்வினைகளும், நம்மை தப்பிக்கவிடாமல் பிறவிப் பிணியில் ஆழ்த்துகின்றன. நல்வினைகள், அடுத்த பிறவியில் நம்மை இன்பத்தில் ஆழ்த்தி உலக மாயையில் மயங்கச் செய்து வினைகளை நாம் மேலும் பெருக்கிக்கொள்ள வழி வகுக்கின்றன. அதனால் தான், பெரியோர்கள் நல்வினைகளை பொற்சங்கிலிக்கும்  தீயவினைகளை இரும்புச்சங்கிலிக்கும் ஒப்பிடுவார்கள். துஞ்சுதல்=தூங்குதல். தூங்கும் சமயத்தில் நாம் செயலற்று இருப்பது போல், வினைகளைப் போக்கிக் கொள்வதற்கு ஏதும் செய்யாமல் இருக்கும் நிலை என்று இங்கே பொருள் கொள்ளவேண்டும்.    

பொழிப்புரை:

நெஞ்சமே, நான் சொல்வதை கேட்பாயாக, உன்னைப் பற்றியிருக்கும் பாவங்கள் உன்னை விட்டு விலகவேண்டும் என்றால், மேன்மையான கதிக்கு, முக்தி நிலைக்கு, நீ செல்ல வேண்டும் என்றால், உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் வினைகளை வீழ்த்தி அவற்றினின்று விடுதலை அடையவேண்டும் என்று நீ விரும்பினால் நான் சொல்வதைக் கேள். நீ செயலற்று இருப்பதை விட்டுவிடு. புற்றில் வாழும் பாம்பினை கச்சாக அணிந்த புனிதனே, சோலைகள் சூழ்ந்த ஆரூர் நகரில் உறையும் இறைவனே என்று சிவபிரானை பலமுறையும் துதித்து, இறைவனே நீ தான் எனக்குத் துணை, நீ தான் எனக்கு உறவு, உன்னைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் பரம்பொருளாக நினைக்க மாட்டேன் என்று கதறுவாயாக.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com