88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 9

உலக மாயையில்
88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 9


பாடல் 9

    பாசத்தைப் பற்று அறுக்கலாகும் நெஞ்சே
              பரஞ்சோதி பண்டரங்கா பாவநாசா
    தேசத்து ஒளிவிளக்கே தேவதேவே திருவாரூர்த்
             திருமூலட்டானா என்றும்
    நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி
             நித்தலும் சென்றடி மேல் வீழ்ந்து நின்று
    ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும்
            எம்பெருமான் என்றென்றே ஏத்தா நில்லே

விளக்கம்:

தேசத்து ஒளி விளக்கு=உலகில் உள்ள விளக்குகளுக்கெல்லாம் ஒளி கொடுப்பவன்; ஏசற்று நிற்றல்=கூசி இருத்தல்; சிவபிரானது பெருமையின் முன்னர் நாம் ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து, தாழ்மை உணர்ச்சியால் கூசி நிற்றல்; பண்டரங்கன்=பண்டரங்கக் கூத்து ஆடியவன், திரிபுரங்கள் எரிக்கப்பட்ட பின்னர், ஆடிய ஆனந்த நடனம் பண்டரங்கக் கூத்து என்று அழைக்கப்படும்.


பொழிப்புரை:


நெஞ்சமே, உலகப் பொருட்களின் மீது நீ வைத்துள்ள பாசத்தினை அடியோடு அறுத்து, உலக மாயையில் இருந்து விடுபடுவதற்கான வழியினைச் சொல்லுகின்றேன் நீ கேட்பாயாக; பரஞ்சோதியே, திரிபுரங்களை எரித்து பண்டரங்கக் கூத்து ஆடியவனே, பாவங்களை போக்குபவனே, உலகுக்கு ஒளி தரும் விளக்கே, தேவர்களுக்கெல்லாம் தேவனே, திருவாரூர் திருமூலத்தானது உறையும் இறைவனே என்று அவனது திருநாமங்களை, பலமுறை கூவி, அவன் மீது நீ வைத்துள்ள அன்பினைப் பெருக்கி, தினமும் அவனை தரிசித்து வணங்கி, அவனது சன்னதியில் நின்று அவனையே நினைத்து உருகி, அவனது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, எல்லையில்லா இறைவனது பெருமையின் முன்னர் நமது நிலை மிகவும் தாழ்வானது என்ற உண்மையை புரிந்துகொண்டு, உடல் கூசி, தலை தாழ்த்தி, வானவர்கள் தலைவனே என்றும் எங்களது பெருமானே என்றும் அவனது புகழைப் பாடி நிற்பாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com