88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 10

தக்கனது வேள்வியினை
88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 10


பாடல் 10

    புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
            புறம்புறமே திரியாதே போது  நெஞ்சே
    சலம் கொள் சடைமுடி உடைய தலைவா என்றும்
           தக்கன் செய் பெருவேள்வி தகர்த்தாய் என்றும்
    இலங்கையர்கோன் சிரம் நெரித்த இறைவா
           என்றும் எழில் ஆரூர் இடம் கொண்ட  எந்தாய் என்றும்
    நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய்
           என்றும் நாடோறும் நவின்று ஏத்தாய் நன்மையாமே


விளக்கம்:

போது போக்கி=காலத்தை வீணே கழித்து.  புறம் புறம்=மிகவும் தொலைவான இடங்கள்.

கங்கையைத் தனது சடையில் அடக்கியவன், தக்கனது வேள்வியினைத் தகர்த்தவன், இலங்கை மன்னன் இராவணனது வலியினை அடக்கியவன், என்று இறைவனின் வல்லமை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது. அவ்வளவு வல்லமை படைத்து இருந்தாலும், நம் மீது கருணை கொண்டு ஆரூரில் உறையும் இறைவன் என்றும், என் மீதும் (அப்பர் பிரான் தன்னைச் சொல்லிக் கொள்கின்றார்) கருணை கொண்டு தனது திருவடியை என் தலை மேல் வைத்தவன் என்று கூறி, அடியார்க்கு இரங்கும் அவனது இளகிய மனம் குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

நெஞ்சமே, ஐந்து புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு பல இடங்களிலும் திரிந்து பொழுதினை வீணாக கழிக்காதே; எனது அருகில் வா, நான் சொல்வதைக் கேள். கங்கையை, சடையில் தரித்தவனே என்றும், தக்கனது பெரிய வேள்வியினைத் தகர்த்தவனே என்றும், இலங்கை மன்னன் இராவணனது வலிமையை அடக்கி, அவனது தலைகளை நெருக்கியவனே என்றும், அழகிய ஆரூரில் இடம் கொண்டவனே என்றும், நலன்கள் அருளக்கூடிய உனது திருவடியை, எனது (அப்பர் பிரானது) தலை மீது வைத்தவனே என்றும், எந்தாய் என்றும், நீ தினமும் பலமுறை அவனைப் புகழ்ந்தால் உனக்கு பல நன்மைகள் ஏற்படும்.   

முடிவுரை:
நமது நெஞ்சத்தினை எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்று பல அறிவுரைகள் நிறைந்த இந்த பதிகத்தினை தினமும் பாராயணம் செய்வது மிகவும் நன்மை தரும் என்று பெரியோர்கள் கருதுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com