89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 6

தகுந்தது தகாதது
89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 6


பாடல் 6:


    திறம் பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்
         சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ 
    மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து
        மாமுனிவர்க்கு அருள் செய்து அங்கு இருந்த நாளோ
    பிறங்கியச் சீர் பிரமன் தன் தலை கையேந்திப்
       பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ
    அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ
       பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே

விளக்கம்:

திறம்=பயன்; வழி காட்டி=உய்யும் வழியினைக் காட்டி; உயிர்களுக்கு மனித வாழ்க்கையால் அடையக் கூடிய பயன்களையும், அந்த பயன்களை பெறுவதற்கான வழிமுறைகளையும் அருளாளர்கள் வாய்மொழியாக காட்டியவன் பெருமான் என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. எனவே தான் அருளாளர்கள் அருளிய செய்திகளை நாம் பெருமானின் வாய்மொழியாக கொள்ளவேண்டும் என்று சான்றோர்கள் கூறுவார்கள். இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு மணிவாசகரின் ஆனந்தப் பரவசம் பதிகத்தின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. 

ஒழுக்கம், ஒழுங்கு முறை, செய்யும் செயலில் உறுதிப்பாடு செயலைச் செய்வதற்கான தகுந்த அறிவு ஆகிய ஏதும் இல்லாமல் கொடியேனாகத் திகழ்ந்த தனக்கு உலகப் பொருட்களால் ஏற்படும் மயக்கத்தை இறைவன் உணர்வித்தான், மேலும் உய்யும் வழியினை கட்டினான், உலகில் மறுபடியும் பிறப்பெடுத்து துன்பமடையா வண்ணம் நம்மை மாற்றும் முக்திப்பெற்றினை அடைவதற்கான வழியையும் காட்டினான் என்று இந்த பாடலில் மணிவாசகர் கூறுகின்றார். 

    சீலம் இன்றி நோன்பு இன்றிச் செறிவே இன்றி அறிவு இன்றித் 
    தோலின் பாவைக் கூத்தாட்டாய் சுழன்று விழுந்து கிடந்தேனை
    மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறி ஏறக்
    கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே

பொம்மலாட்டத்தில் திரைக்குப் பின்னால் இயக்கும் ஒருவன் தனது இயக்கத்தை நிறுத்திவிட்டால், பொம்மைகள் அனைத்து கீழே விழுந்து செயலற்று கிடக்கும். அது போன்று தன்னை ஆட்கொண்டு, உபதேசம் செய்த இறைவன் திடீரென்று மறைந்ததால் தான் செயலிழந்து நிற்பதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். உலகப் பொருட்களின் மாயையும் முக்தி நெறி அடைவதற்கான மார்க்கத்தையும் காட்டிய இறைவனைத் தான் சென்று அடையும் நாள் எந்நாளோ என்று அவர் அங்கலாய்ப்பதை நாம் இந்த பாடலில் உணரலாம்.  

மனித உடல் எடுத்த உயிர்கள், உண்மையான மெய்பொருளாகிய தன்னை உணர்ந்து கொண்டு, உலகப் பொருட்கள் ஏற்படுத்தும் பாசத்திலிருந்து நீங்கி, உய்யும் வழியினில் பயணம் செய்யும் பொருட்டே இறைவன் அந்த உயிர்களுக்கு முப்பத்தாறு தத்துவங்களை அருளியுள்ளான். அவற்றை நாம் ஒழுங்காக பயன்படுத்தி உய்வினை அடைவது தான் நாம் நமது உயிர்களுக்கு செய்யும் பேருதவியாகும். உயரின் உண்மையான விருப்பமும் இதுவே. தன்னைப் பிணைத்துள்ள வினைத் தொகுதிகளிலிருந்து எப்போது விடுதலை பெற்று இறைவனுடன் சேர்ந்து  நிலையான ஆனந்தத்தில் வாழ்வோம் என்பதே உயிரின் ஏக்கமாக இருந்து வருகின்றது.

ஆனால் உடலும் உடலில் பொறிகளும் இதனை புரிந்து கொள்ளாமல் மாறுபட்டு நடக்கின்றன. இந்த உண்மையை புரிய வைத்து நாம் உய்வதற்கு வழி வகுத்த இறைவனின் கருணைச் செய்கை இங்கே திறம் பலவும் வழி காட்டி என்று உணர்த்தப் படுகின்றது. மாமுனிவர்கள்=தாருகவனத்து முனிவர்கள்; தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளாமல் செயல்களின் பயனே பெரியது என்று சிவநெறியிலிருந்து மாறுபட்டு வாழ்ந்த முனிவர்கள்' பிறங்கிய=மிகுந்த .    

பொழிப்புரை:

உயிர்களுக்கு மனித உடலால் ஏற்படும் பெரும் பயன்களை உணர்த்தி, தகுந்தது தகாதது என்பதை உணரும் பகுத்தறிவினை வழங்கி, அந்த பயன்களை அடைவதற்கான வழிமுறைகளை, முக்தி நிலையை அடையும் வழியினை, பல அருளாளர்களின் வாய்மொழிகள் மூலம் உணர்த்தியவனே, அணுவினை விடவும் நுண்ணிய பொருளாகவும் அனைத்து பொருட்களையும் விட பெரிய பொருளாகவும் இருப்பவனே, கன்மாக்களால் அடையப்படும் பயன்களை தவறாக புரிந்து கொண்டு சிவபெருமானை வழிபடாமல் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த தாருகவனத்து முனிவர்களின் அறியாமையை நீக்கி அருள் புரிந்தவனே, சிறப்பு மிகுந்த பிரமனின் மண்டையோட்டினை தனது கையில் ஏந்தி உலகெங்கும் திரிந்தவனே, சனகாதி முனிவர்களுக்கு ஆலமரத்தின் கீழே அறம் உரைத்த பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியுமோ, அறிய முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com