89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 7

தழற்பிழம்பாக தோன்றியவனே
89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 7


பாடல் 7:

    நிலந்தரத்து நீண்டு உருவமான நாளோ நிற்பனவும்
             நடப்பனவும் நீயே ஆகிக்
    கலந்து உரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ
            காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று
    வலம் சுருக்கு வல்லசுரர் மாண்டு வீழ வாசுகியை
           வாய் மடுத்து வானோர் உய்யச்
    சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ
          திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே


விளக்கம்:


நிலந்தரம்=நிலம்+அந்தரம்' உயிர்களை காக்கும் பொருட்டு திருமாலை படைத்த செய்தி இங்கே காரணத்தால் நாரணனை கற்பித்து என்று உணர்த்தப் படுகின்றது. அசுரர்கள் தேவர்களுக்கு இழைத்த துன்பங்களை நீக்கும் பொருட்டு திருமாலை படைத்தார் என்றும் விளக்கம் கூறுவதுண்டு.  தாவரங்கள் மற்ற உயர்கள் அனைத்தையும் ஒரே தொகுப்பாக சராசரம் என்று வடமொழியில் கூறுவார்கள். சரம் என்றால் ஓரிடத்திலிருந்து மற்றொரு  இடத்திற்கு நகர்வது; அசரம் அதற்கு எதிர்மறை. இந்த சொல்லுக்கு அழகான மாற்றுச் சொல்லாக நிற்பனவும் நடப்பனவும் என்று அப்பர் பிரான் கையாண்டுள்ளது அவரது புலமையை நமக்கு உணர்த்துகின்றது.  

பொழிப்புரை:

மண்ணுக்கும் விண்ணுக்குமாக நெடிது உயர்ந்த தழற்பிழம்பாக தோன்றியவனே, ஓரே இடத்தில் நிலை பெற்று நிற்கும் தாவரங்களாகவும், இடம் பெயர்ந்து செல்லும் மற்ற உயிரினங்களாகவும், அனைத்து உயிர்களாகவும் இருப்பவனே, நினைத்ததை அளிக்கும் கற்பகமரம் போன்று அடியார்கள் வேண்டுவதை அளிக்கும் கொடையாளி என்று அனைவராலும் ஒன்று கூடி பெருமையாக புகழப் படுபவனே, தேவர்களுக்கு தீங்கு விளைவித்த அசுரர்களின் வலிமையை அடக்கும் வண்ணம் திருமாலைப் படைத்து சக்கரப்படை முதலானவை கற்பித்தவனே, பாற்கடல் கடையப்பட்ட போது தனக்கு ஏற்பட்ட துன்பம் தாளாமல் வாசுகி பாம்பு வெளியிட்ட ஆலகால விடத்தினை உண்டு உலகை காத்தவனே, வானவர்களின் துன்பம் தீரும் பொருட்டு அரக்கன் சலந்தரனை கொன்ற பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com